ஜனாதிபதி மைத்ரி அவர்கள் மேற்கொள்கின்ற நகர்வுகள் அரசியல் இராஜதந்திரம் கற்கும் மாணவர்களுக்கு சிறந்த ஆய்வுப் பொருளாகும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி செயலாளர் சுசில் பிரேமா ஜயந்த, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி செயலாளர் அனுரா பிரியதர்சன ஆகிய இருவரையும் அந்தப் பதவிகளில் இருந்து மைத்ரி நீக்கி விட்டு இரண்டு புதியவர்களை நியமித்தமை தொடர்பான சட்ட சிக்கல்கள்.

பொதுவாக கட்சியின் மத்திய குழுவை கூட்டியே கட்சியின் முக்கிய பதவி தாங்குனர்களை நியமிக்க/ நீக்க வேண்டும், குறிப்பாக ஒரு கட்சியின் அனைத்து சட்ட பூர்வமான விவ்கரங்களையும் கையாளும் அதிகாரம் செயலாளரிடமே இருக்கின்றது.

சில கட்சிகளில் தலைவருக்கு நிறைவேற்று அதிகாரம் இருந்தாலும் தலைவர் அவ்வாறு எடுக்கின்ற எதேச்சதிகார அதிரடி முடிவுகளை கட்சியின் மத்திய குழு அங்கீகரிக்க வேண்டும்.

தற்போதைய நிலையில் கட்சியின் தேசியப்பட்டியல் மற்றும் விவகாரங்களை அதிகாரபூர்வமாக கையாளுகின்ற அதிகாரம் கட்சி செயலாளரினால் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ள நிலையில், இவாறான ஒரு திரிசங்கு நிலையை இரு தரப்பினரும் சட்ட ரீதியாக எவ்வாறு கையாளுகின்றார்கள் என்பது சுவாரசியமான மற்றும் தேசிய முக்கியத்துவமான அம்சமாகும்.

முதற்கட்ட நடவடிக்கையாக ஒவ்வொரு தரப்பினரும் அடுத்த தரப்பினருக்கு எதிராக நீதிமன்ற தடையுத்தரவை பெறுவர், அடுத்த கட்டமாக தேர்தல் ஆணையாளரிடம் சென்று தமது சட்ட பூர்வமான நியாயங்களை ஆவணங்களை முன்வைத்து தம்மை அங்கீகரிக்குமாறு வேண்டுகோள் விடுக்க வேண்டும், உதாரணமாக கட்சி மத்திய குழுவில் பெரும்பான்மையினர் கையெழுத்திட்ட ஆதரவு அறிக்கையை, அல்லது மத்திய குழு கூடி அங்கீகரிததமைக்கான அறிக்கையினை சமர்பிப்பார்கள்.

சட்ட ஆலோசனைகளுடன் தேர்தல் ஆணையாளர் திருப்திப்படும் பட்சத்தில் ஒரு தரப்பினரை அங்கீகரித்து அடுத்த தரப்பினரை நிராகரிக்க வேண்டும், அத்துடன் விவகாரம் முடிவுக்கு வரலாம் அல்லது அடுத்த தரப்பினர் நீதிமன்றம் செல்லவும் இடமுண்டு.

தேர்தல் ஆணையாளர் தீர்வு ஒன்றை தன்னால் வழங்க முடியாது நீதிமன்றம் செல்லுங்கள் என்று கூறினால் இரு தரப்பினரும் நீதிமன்றம் செல்ல வேண்டும், அதுவரையும் செயலார்களின் செயற்பாடுகள் முடக்கப்படும்.

அதுமாத்திரமன்றி மஹிந்த தரப்பினருக்கு சார்பாக தீர்ப்புகள் அமைந்து விட்டால் இரண்டு கட்சிகளும் அவர்களது கட்டுப் பாட்டில் வந்து விடும், அல்லது கட்சி இரு தரப்பினருக்கும் இயக்க முடியாத நிலையொன்று ஏற்படும்.

ஜனாதிபதியவர்களின் வியூகங்களை ஆவலோடு எதிர்பார்த்திர்க்கிறது ஆளும் தரப்பு.

ஜனாதிபதி அவர்கள் மத்திய குழுவில் இருந்தும் பல பிரமுகர்களை நீக்கி விட்டு தனக்கு சார்பானவர்களை நியமித்து எதேச்சதிகரமாக எடுத்த முடிவுகளும் நீதிமன்றத்தில் சவாலுக்கு விடப்படின் நிலைமை மேலும் சிக்கலாகும், என்றாலும் முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் போன்று, பதவி இழந்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் தனக்கு ஏற்றவாறு கட்சியாப்பினை திருத்தி அமைத்திருந்தால் அது இன்றைய ஜனாதிபதிக்கு சாதகமாக அமையலாம்.

அமைச்சர் மைத்திரி அதிகாரமிக்க ஆளும் கட்சியில் இருந்து எதிர்க் கட்சிக் கூட்டணியூடாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர், தாய்க் கட்சியிடமிருந்த பெரும்பனமை பலத்தை புறம் தள்ளி அவர்களிடமிருந்து ஆட்சியையும் பறித்து எதிர்க் கட்சிக் கூட்டணியிடம் கொடுத்து விடுகின்றார்.

பின்னர் தாய்க் கட்சியிடம் மீண்டு அதன் தலைமையை தான் பெற்று பொதுத் தேர்தலில் அவர்களை களமிறக்கி விட்டு தான் நடுநிலை வகிப்பதாக அறிவிப்புச் செய்து விட்டு நேரடியாகவும் மறைமுகமாகவும் தான் தலைமை வகிக்கும் கட்சியிற்கு தன்னால் இயன்ற அனைத்து நெருக்கடிகளையும் கொடுத்து பின்னர் அவர்களின் கையில் இருந்த சட்டவலுவுள்ள அதிகரங்களையும் ஜனாதிபதி மைத்திரி பரித்தெடுத்துள்ளமை அதன் பின்னால் உள்ள நியாய தர்மங்கள் ஆய்வுக்கு உற்படுத்தப் பட வேண்டிய அம்சமாகும்.

தொடர்ந் தேர்சியிலான பல்தரப்பு சதி முயற்சிகளினை தேசிய நலன்கள் கருதி முறியடிப்பதற்கு ஜனாதிபதி மைத்ரி மேற்கொண்ட இறுதிக்கட்ட அதிரடி நடவடிக்கைகள் மிகவும் நிதானமாக பக்கச் சார்பின்றி அணுகப்படல் வேண்டும்.

கடந்த ஜனவரி மாதம் நல்லாட்சி மாற்றம் நோக்கி புறப்பட்ட இந்த தேசத்தின் பயணத்தில் குறுக்கீடுகள் உள்ளிருந்தும் புறமிருந்தும் வந்த பொழுது, ஆளும் தரப்பின் தலைவராகவும், எதிர்த் தரப்பின் தலைவராகவும் இருந்து கொண்டு ஜனாதிபதி மைத்ரி அவர்கள் மேற்கொள்கின்ற நகர்வுகள் அரசியல் இராஜதந்திரம் கற்கும் மாணவர்களுக்கு சிறந்த ஆய்வுப் பொருளாகும்.

-Inamullah Masihudeen-