தற்போதைய அவசர உலகில் நடந்து செல்லும்போதுகூட உண்ணும் வழக்கம் நகரங்களில் சகஜமாகி வருகிறது. நண்பருடன் பேசும்போதோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிக்களைப் பார்க்கும்போதோ உண்பதை நமது மூளை ஓரளவு நினைவில் வைத்துக்கொள்கிறது.
ஆனால், நடப்பது போன்ற அதிகபட்சமாக திசை திருப்பும் விஷயம், ‘மூளைக்கு நாம் உணவு உண்பதை கொண்டு சேர்ப்பதே இல்லையாம். இதனால், அதிகமான உணவை நம்மை அறியாமலேயே உட்கொள்வதாக தெரியவந்துள்ளது’.
இங்கிலாந்தின் சர்ரே பல்கலைக்கழகம் 60 பெண்களிடம் ஒர் சிரியல் கட்டியை (நம்மூர் பொரிஉருண்டை போன்ற உணவு) அவர்கள் நடக்கும்போதோ, தொலைக்காட்சியை ரசிக்கும்போதோ அல்லது நண்பர்களிடம் பேசும்போதோ உண்ணக் கொடுத்தது. அதன் பிறகு அவர்களிடம் ஆய்வறிக்கை தொடர்பான படிவத்தை நிரப்பித்தர சொன்னது. அந்த அறையில் ருசி குறித்த ஆராய்ச்சி எனக் கூறி சாக்லேட், கேரட் குச்சிகள், திராட்சை மற்றும் நொறுக்கு தீனிகளையும் வைத்திருந்தது.
அவர்கள் இதில் எந்த உணவை அதிகமாக உட்கொண்டனர்? என கண்காணித்ததில், நடந்து வரும்போது சிரியல் கட்டி எடுத்துக்கொண்டவர்கள் ஐந்து மடங்கு அதிக சாக்லேட்களை உண்டதாக தெரிய வந்துள்ளது.
எனினும், உண்ணும் உணவை கவனிக்க வேண்டும், கவனமின்றி உட்கார்ந்தபடி உணவு உட்கொண்டாலும் அது நமது உடல் எடை அதிகரிக்க காரணமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். இந்த ஆய்வறிக்கை சுகாதாரம் குறித்த உளவியல் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
உண்பதற்கு நேரம் ஒதுக்க முடியாவிட்டால், என்ன சம்பாதித்து என்ன பலன்? நமது உடலின் மீது நாம்தானே அக்கறை செலுத்த வேண்டும்.


0 Comments