தொழில்நுட்ப முன்னேற்றத்தால் ஆளுக்கொரு ‘ஸ்மார்ட்போனுடன்’ பயணிக்கும் மக்கள், எதிரில் இருப்பவர்களின் முகத்தைக் கூட பார்ப்பதில்லை. அனுதின நகர பயணங்களில் நாம் நீண்ட நேர ‘டிராபிக் ஜாம்’-ல் மாட்டிக் கொள்ளும்போதுகூட போனிலிருந்து கவனத்தை திசைதிருப்புவதில்லை.
இதனை மாற்றும் வகையிலும் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையிலும், ஐரோப்பா கண்டத்தில் உள்ள ரோமானியா நாட்டில் க்ளூஜ்-நபோக்கா நகரில் புத்தக பிரியர் விக்டர் மிரான் என்பவரின் அறிவுரைப்படி நகரப் பேருந்துகளில் நல்ல புத்தகங்களைப் படிப்போருக்கு இலவச சேவை வழங்கப்பட்டது.
விக்டர் மிரான் இந்த அறிவுரையை கடந்த ஆண்டு அந்நகர மேயருக்குக் கூறினார். ஓராண்டுக்குப் பிறகு ஒரு வாரம் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த ஜூலை மாதம் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம் அந்நாட்டில் மட்டுமின்றி இங்கிலாந்து நாட்டிலும் விரைவில் செயல்படுத்தப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.
அரசாங்கம் மக்களை புத்தகம் படிக்க வைக்க எப்படியெல்லாம் போராட வேண்டியுள்ளது! இணையதளத்தில் புத்தகம் வாசிக்கும் இந்த காலத்தில், நூலகங்களின் பயன்பாடு குறைந்து வருகிறது. நம் வீட்டு பிள்ளைகளும் மூட்டை மூட்டையாக புத்தகங்களை பொதி சுமக்கும் கழுதை போல சுமக்கின்றனர்; அதிகம் பேர் அதிகபட்ச மார்க்கும் எடுக்கின்றனர்.
எனினும், உண்மையான கற்றல் என்னவென்று அவர்கள் புரிந்துகொள்ளாமலே, கல்வி காலத்தைக் கடந்துவிடுவது வருத்தப்பட வேண்டிய விஷயம்.


0 Comments