Subscribe Us

மஹிந்த ராஜபக்ஸவின் குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல – பொதுபல சேனா


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சுமத்திய குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவையல்ல என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி சேவை ஒன்றுக்கு அளித்த செவ்வியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, பொதுபல சேனா இயக்கத்தை கடுமையாக சாடியிருந்தார்.

தம்மை ஆட்சியிலிருந்து கவிழ்ப்பதற்கு சர்வதேச சக்திகளினால் உருவாக்கப்பட்ட இயக்கமே பொதுபல சேனா என அவர்கு ற்றம் சுமத்தியிருந்தார்.

நோர்வே நிதியுதவியுடன் பொதுபல சேனா இயங்கி வருவதாகவும் இதுதொடர்பிலான விபரங்கள் அடங்கிய நூல் ஒன்றும் சந்தையில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிப்பதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவின் வெற்றிக்காக அர்ப்பணிபுடன் செயற்பட்ட தமக்கு மஹிந்த பாராட்டும் நன்றியாக இந்தக் குற்றச்சாட்டுக்களை கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட போதிலும், தாம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவிற்கு ஆதரவாக செயற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு உதவிகள் எதனையும் பெறவில்லை தொடர்புகள் இல்லை என்பதனை நிரூபிக்க பல சந்தர்ப்பங்களில் மஹிந்தவிற்கு ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆதாரங்கள் அனைத்தையும் உதாசீனம் செய்து, சிலரின் பிழையான வழிநடத்தல்களினால் தவறான பாதையில் நகர்வதாகத் தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகள் ஆட்சியில் நீடிக்க சந்தர்ப்பம் இருந்த போது, நாம் செய்த சூழ்ச்சி காரணமாகவே மஹிந்த முன்கூட்டி தேர்தல் நடத்தி தோல்வியைத் தழுவினார் என ஞானசார தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

Post a Comment

0 Comments