Subscribe Us

தாஜூடீன் விசாரணை தொடர்பில் சிராந்தி விடுத்த கோரிக்கையை பிரதமர் நிராகரித்தார்


பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் படுகொலை வழக்கு விசாரணை தொடர்பில் முன்னாள் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்ஸ விடுத்த கோரிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளார்.


தாஜூடீன் மரணம் குறித்த விசாரணைகள் தொடர்பில் சிராந்தி ராஜபக்ஸ, பிரதமரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டுள்ளார்.


ரகர் வீரர் தாஜூடீனின் மர்ம மரணம் தொடர்பிலான விசாரணைகளில் தம்மால் தலையீடு செய்ய முடியாது என பிரதமர், சிராந்திக்கு பதிலளித்துள்ளார்.


எவ்வாறெனினும், சிராந்தி ராஜபக்ஸ, பிரதமரிடம் எவ்வாறான உதவியை கோரினார் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.


தாஜூடீன் கொலை செய்யப்படுவதற்கு முன்னதாக சிரிலியே சவிய என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான வாகனமொன்றில், கடத்தப்பட்டாரா என்பது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் இந்த வாகனம் குறித்த தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.


தாஜூடீனின் மரணத்திற்கு முன்னதாக ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் முக்கியஸ்தர்கள் இது குறித்து இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.


இதேவேளை, அரசியல் அழுத்தங்களை தாண்டி பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தாஜூடீனின் குடும்பத்தினருக்கு வாக்குறுதியளித்துள்ளார் என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments