Subscribe Us

header ads

புத்தளம் ஏன் பதறுகிறது? ஒரு அரசியல் பார்வை


என்றுமில்லாதவாறு நம் ஊர் பதறித்தான் போயிருக்கிறது. கேட்டவுடன் எல்லாரும் சொல்லும் உடனடிக் காரணம் 26 வருடங்கள் நாமாக தெரிவு செய்து அனுப்பிய பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இங்கில்லை, அது கிடைப்பதற்கான அரிய சந்தர்ப்பமும், கடைசி சந்தர்ப்பமும் இதுவே, ஆகவே அந்த பிரதிநிதித்துவம் மீண்டும் கிடைக்காமல் போய்விடுமோ என்பதற்காகவே ஊர் பதறுகிறது என்பதாகும். நியாயமான காரணம்,  நாமும் அதை விளங்கிக் கொள்கின்றோம். ஆனால் அதையும் மீறி பல கேள்விகள் எழுகின்றன.
குறிப்பாக இன்றைய இலங்கை அரசியல் சூழ்நிலையில் இந்த ஒற்றைக் காரணம் நமது நிலைப்பாட்டை முற்றும் முழுதாக நியாயப் படுத்திவிடுமா?  இந்த நியாமான காரணம் நம் நிலைப்பாட்டுக்கு போதுமான காரணமா அமைந்துவிட்டதா? என்ற கேள்விகளுக்கு நாம் விடை  காணத பட்சத்தில்  இந்த தேர்தலை ஒட்டி நடக்கும் அத்தனை விடயங்களும் அவை நமக்கு விருப்பமில்லாத போது அவை பிழையாகவே நமக்குத் தெரிவதும்,  நாம் பேசுவதும், எழுதுவதும் கூட நீங்கள் விரும்பும்படி அமையவேண்டும் என்ற எந்த தேவையும் இல்லாத போதும் அது அப்படித்தான் அமை வேண்டும் என்பதும், அதே போல் நீங்கள் பேசுவது என்னையும் திருப்திபடுத்த வேண்டும் என்ற எந்த தேவையும் இல்லை என்றாலும் அதில் நாம் திருப்திகொண்டே ஆகவேண்டும் என்ற உங்கள் எதிர்பார்ப்பும் இந்தத் தருணத்தில் இயற்கையானதே.  ஆனால் இந்த வகை உணர்ச்சி அரசியல் எதையும் கொண்டுவராது என்பது மாத்திரம் நாம் விளங்கிக் கொள்ள தவிர்க்கும் விடயமாகிவிட்டது.
26 வருடங்கள் நமக்கொரு பாராளுமன்ற பிரதிநிதி இல்லை என்பது அப்படி இருந்திருந்தால் அதனால் அடைந்திருக்கும் நன்மைகள், இல்லாதிருந்ததால் இழந்த நன்மைகள் என்ற அளவீட்டில் கிடைக்கும் முடிவின் அடிப்படையிலேயே நமது இன்றைய “ஒற்றை நியாயம்” சீர்தூக்கிப் பார்க்கப்படல் வேண்டும். கடந்த 26 வருடங்கள் என்பது போர் சூழலுக்கு உட்பட்டக் காலப்பகுதி. இலங்கையின் பிரதான தேசிய கட்சிகளில் இருந்த முஸ்லீம்கள் ஒப்பீட்டளவில் ஓரவுள நீதி நேர்மையுடன் அரசியல் செய்த காலத்துக்கு சற்று பிந்தியக் காலப்பகுதி.  அரசியல் விழிப்புணர்ச்சி பெரிதாக மூலைமுடுக்கெல்லாம் பரவாத காலப் பகுதி.  நாம் மெதுவாக உணர்ச்சி அரசியலுக்குல் வலிந்து கொண்டுவரப்பட்ட காலமும் அதுவே என்பதோடு இலங்கையின் அரசியல் போக்கை மாற்றியமைக்க காரணமாகிய காலப்பகுதி என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இலங்கை அரசியலில் சந்தர்ப்ப சூழ்நிலையால், ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் என்ற கட்சியின் ஊடாக இலங்கை சோனக முஸ்லீம்கள் எரியும் வீட்டில் பிடுங்கியது லாபம் என்ற அடிப்படையில் பலதை பிடிங்கிக் கொண்ட காலம். அதுவும் ஸ்ரீ.ல.மு.கா பிரதிநிதிகள் உள்ள இடங்கள் நம்மை விட சற்று கூடுதலாக அனுபவித்த காலம் அல்லது அக்கட்சியில் செல்வாக்கு செலுத்தியவர்களின் திடீர் முன்னேற்றம் நம் ஊரை சற்று கவலைப்படவைத்த காலம் இந்த 26 வருடத்துக்குள் அடங்குகின்றன. யுத்தம் இல்லாத இயல்பு நிலை ஸ்ரீ லங்காவில் இருந்திருக்க, நமக்கு இந்த பதட்டம் ஏற்பட்டிருக்காது. ஸ்ரீ.ல.மு.கா என்ற கட்சியும், இன்றைய பெளத்த கடும் போக்கு அரசியல் கட்சிகளும், பயங்கரவாதி ஞானஸாரவின் BJP( நாகப் பாம்பு) கட்சியும் கூட இருக்க வாய்ப்பும் இருந்திருக்காது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாம் மயிரிழையில் தம்பினோம் என்பதை அரசியல் கற்றுக்குட்டியும் அறியும்.  சிறுபான்மையினரான சோனக  முஸ்லீம்கள்தான் ஜனாதிபதி தேர்தலை தீர்மானித்தார்கள் என நாம் கூறிக் கொண்டாலும், சில வேளை இறுமாப்புக் கொண்டாலும் தமிழ் தரப்பு இந்தத் தேர்தலில் முனைப்புடன் வாக்களித்ததை தவிர்த்திருக்க,  அன்று தேர்தல் ஆணையாளரின், பொலீஸ் மாஅதிபரின், ராணுவ தளபதியின் ஆதரவு இல்லாமல் இருந்திருக்க இன்று குறிப்பாக முஸ்லீம்களின் நிலைமை கேள்விக் குறியாகவே இருந்திருக்கும். ஆகவே ஜனவரி வெற்றி நமது தனிப்பட்ட வெற்றியல்ல. நாட்டு மக்களின் வெற்றி, இலங்கையில் நல்லாட்சி ஏற்படவேண்டும் என்று விரும்பிய எல்லாரினதும் வெற்றி என்பதுடன் இந்த வெற்றி தொடர்ந்தும் வெற்றியாகவே இருக்க வேண்டுமானால் இந்த பொதுத் தேர்தல் என்பது கடந்த ஜனாதிபதி தேர்தலை விடவும் முகியமானது என்பதை நாம் மறத்தலாகாது.
ஆகவே இப்போது நம் முன்னே உள்ள கேள்வி  நாம் மீண்டும் இருண்ட காலத்துக்குள் பிரவேசித்து நம் இருப்பை கேள்விக்குறியாக்கப் போகின்றோமா என்பதே. இது பலருக்கு கற்பனையின் உச்சமாக தெரியலாம். ஆனால் அதிஉச்ச அதிகாரங்களை அனுபவித்து, தனது அடங்காத ஆசையினால் அதையும் இழந்து, இப்போது சாதரண பாராளுமன்ற உறுபினராக வர எத்தனிக்கும் மஹிந்தவின், அவர் குடும்பத்தின், அவர் கும்பலின், நாகப்பாம்பு கட்சியினர் உட்பட மேடையேற்ற காத்திருக்கும் சாத்தியமான விடயங்களை கூர்மையாக அவதானிக்கும்  எவருக்கும் இது கற்பனையாகப்படாது. நாட்டின் ஒட்டு மொத்த முஸ்லீம்களுக்கான பதுகாப்பு இதில் சிக்கியுள்ளது. நாட்டின் எதிர்கால அரசியல், ஒருமைப்பாடு, ஐக்கியம், செளஜன்யம், பொதுவான பொருளாதார முன்னேற்றம், சர்வதேச உறவு எல்லாமே இதில் தங்கியுள்ளது. ஆகவே சோனக முஸ்லீம் சமூகத்தின் நிலைபாடு இந்த தேர்தலில் முக்கியமானது. இந்தத் தேர்தல் என்பது நமது பிரச்சினை, இது இத்தேர்தலில் போட்டியிடுவோர்களின் பிரச்சினையல்ல. ஆகவே நம் முன்னால் உள்ள வேட்பாளர்களை அவர்கள் சார்ந்த கட்சி/குழுவை கேள்விக்குற்படுத்துவது முக்கியமாகின்றது.
இந்த அடிப்படையில் PPAF -ஒட்டகைக் குழுவின் ஒரு பகுதி-  புத்தளம் பிரதேச மக்களுக்கு அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதே தமது அமைப்பின் நோக்கம் என்றதே அல்லாமல் தாங்கள் தேர்தலில் குதிப்போம் என்று ஆரம்பத்தில் மக்களை அணுகவில்லை என்ற பொழுதிலும் இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. ஆனால் இவர்கள் வென்றெடுக்க துடிக்கும் (சுயேட்சை) பாரளுமன்ற பிரதிநிதித்துவதுக்கான நியாயங்கள் ஒன்றும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. இந்த சுயேட்சைக் குழுவின் முக்கியமான நிலைப்பாட்டை நோக்குவோமாயின்:
1. பிரதான கட்சிகளுக் கூடாக பாராளுமன்றம் சென்றால் கட்சிகளின் நிபந்னைகளுக்கு கட்டுப்பட வேண்டும் (சுயாதீனமாக இயங்க முடியாது).
2. எந்த கட்சி ஆட்சி அமைக்கின்றதோ அந்த கட்சியுடன் (நிபந்தையுடன்) சேரலாம்.
3. சுயேட்சையாக பாராளுமன்றம் செல்லும் போது பேரம் பேசி பலதை (மந்திரி பதவி கூட) பெற்றுக் கொள்ளலாம்.
4. PPFA யில் போட்டியிடும் யாரும் (PPAF பிரதிநிதிகள் தவிர) எந்த ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடவில்லை, ஆகவே அவர்கள் விரும்பியவாறு தன்னிச்சையாக இயங்கலாம்.
இதில் 1ம் 2ம் ஒன்றுக் கொன்று முரண்பாடாக தெரிவதோடு நிபந்தனை என்பது எப்போதும் சேரும் தரப்புகே உரியதல்ல. அவர்களை தேவை கருதி சேர்க்க தயாராக இருக்கும் தரப்புக்கும் அது உரியது. ஆகவே ஆட்சியமைக்கும் கட்சியுடன் சேர தயாராகவிருக்கும் தரப்பின் ஆதரவு தேவையில்லை என்றால் எதிர் கட்சி வரிசையில் இருப்பதை தவிர வேறு தேர்வு இல்லை. அந்த கட்டத்தில் ஊருக்கொரு எம்.பி  இருப்பார் ஆனால் அவரால் நாம் அடையப் போவதாக அவர்கள் சொல்லும் பயன் கிடைக்க வாய்ப்பில்லை. அதாவது அவர்களின் விளக்கம் 1ன் படி சுயாதீனமாக இருப்பார்(கள்) அவ்வளவுதான்.
சுயேட்சையாக செல்லும் எல்லாரும் ஆளும் கட்சியினால் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்றுமில்லை. அப்படி சேர்த்துக் கொள்ளப்பட்டாலும் நாம் விரும்பும் படி எல்லாம் மந்திரி பதவிகள் கிடைக்க வாய்ப்புமில்லை. நம் அரசியல் அனுபவத்தின் படி மந்திரிப்பதவி பட்டியலுடன் செல்ல காத்திருப்பவர்கள் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸே (ஸ்ரீ.ல.மு. காங்கிரஸை விட ஒரு வேளை அ.இ.ம.காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றுமாயின்  ஒன்றுக்கு மேற்பட்ட மந்திரி பதவிகளைக் கோரலாம்). ஆனால் அமையவிருக்கும்  நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி (யின் தேசிய அரசாங்கம்) இந்த விடயத்தில் மிகக் கவனமாகவே இருக்கும். அனேகமாக யார், யாருக்கு (வெற்றி பெரும் பட்சத்தில்) என்னென்ன மந்திரி பதவிகள் என்ற விடயம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. கடந்த ராஜ பக்ஷ அரசாங்கம் பொருத்தமில்லாத, தகுதியில்லாத, தேவைக்கு அதிகமான எண்ணிக்கையில் மாத்திரமல்ல லஞ்சப் போர்வழிகள் கூட மந்திரிகளாய்யிருந்து நாட்டுக்கு அவமானத்தை பெற்றுத் தந்ததும், நாட்டின் பொருளாதாரத்தை சுரண்டியதும் நாம் கண்ட விடயங்களே. அதே போலவே கண்டவரெல்லாம் வெளிநாட்டு தூதுவர்களாக நியமிக்கப்பட்டு நாட்டுக்கு களங்கத்தை ஏற்படுத்தியதை தவிர உருப்படியாக எதையும் காணக் கூடியதாக இல்லாமல் இருந்த இந்த இரண்டு விடயங்களிலும் ஜனாதிபதியும் கூட(தலை இடுகின்றார்) கவனமாக இருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன. அதாவது இந்த மந்திரிகள் நியமிக்கும் விடயத்தில் அவருக்கு இருக்கும் அரசியல் அமைப்பு ரீதியான அதிகாரத்தை மிகக் கவனமாக செயல்படுத்த ஆயத்தமாக இருப்பதால் கண்டவர் நின்றவர்கள் எல்லாம் இம்முறை மந்திரியாக முடியாது. ஆகவே இந்த PPAF ன் மந்திரி கனவு வெறும் பகற்கனவே. இந்த அடிபடையில் அவர்களின் 3ம் நியாயமும் பொய்க்கின்றது.
இதைவிட, இந்த ஒட்டகை குழுவில் உள்ள, PPFA உறுப்பினர் இல்லாதவர்கள், தங்கள் சுயாதீனம் பாதிக்கப்படாதவாறு, மிகச் சரியாக சொன்னால் தாங்கள் விருப்பம் போல்(கட்சி தாவல் உட்பட) நடந்து கொள்ளலாம் என்ற 4 காவது விடயம் ஆபத்தான ஒரு நிலைப்பாடாகும். இதில் வெறும் ஊர்/தேர்தல் தொகுதியின் நலனை விட ஒட்டு மொத்த சமூக நலனும் தங்கியுள்ளது. ஆகவே நமது பிழையான நடவடிக்கை மூலம்  எவ்வளவு தூரம் அது சமூகத்தை பாதிக்கும்  என்பதை இரண்டு உதாரணங்கள் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
2010 தில் ஸ்ரீ லங்காவில் சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வாழந்த பகுதிகளில் கிறிஸ் பூதங்கள் நடமாடியபோது,( கொழும்பிலோ, ஹம்பந்தோட்டையிலோ அல்லது சிங்களவர் பெரும்பான்மையாக வாழ்ந்த பகுதிகளிலோ கிறிஸ் பூதங்கள் இறக்கிவிடப்படவில்லை) அதிலும் குறிப்பக புத்தளத்தில் மக்களின் இயல்பு வாழ்கையை பூதங்கள் குலைத்த போது, ஒட்டகைக் குழுவின் முதன்மை வேட்பாளர் பாயிஸ் அவர்கள் இந்த கிறிஸ் பூதம் “வெறும் கற்பனை” என்று ஊர் மக்களை நம்பவைக்க முயன்ற விடயம். இது வெறும் கற்பனை என்பது அவரின் கற்பனையா அல்லது இது பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்று பணிக்கப் பட்டாரா என்பது தொடர்பாக ஒரு பகுதி மக்கள் இன்னும்  சந்தேகத்திலேயே  உள்ளனர். அது மாத்திரமல்ல இது தொடர்பான சம்பவம் புத்தளத்தில் நிகழ்ந்தேறிய போது பாயிஸ் அவர்கள் பிலிப்பையின்ஸில் இருந்தாகவும் குற்றம்சாட்டப் படுகின்றது. எனினும் சந்தேகத்தின் பயனை அவருக்கே வழங்கினாலும், அண்மைய விடயம் அவரை ஒரு நேர்மையான அரசியல்வாதி என்ற ஸ்தானத்தில் வைக்க முடியாதவாறு செய்துவிட்டது.
அதாவது 2014ன்முடிவில்  பாயிஸ் அவர்கள் ஊடகத்துறையை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கும் ரங்காவின் “மின்னல்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராஜ பக்ஷ்வுக்கு வக்காலத்து வாங்கிய விடயம். இது ஊர் மக்களை விட நாடு தழுவிய ரீதியிலே முஸ்லீம்ளுக்கு மத்தியில் விஷனத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் இன்றும் அதை நியாயப்படுத்தும் பாயிஸின் ஆதரவாளர்கள் அது ராஜ பக்ஷ்வுக்கான நன்றிக் கடனாக சொல்கின்றனர். இது ஏதோ தனிப்பட்ட ஒருவர் இக்கட்டான நிலையில்  மற்றவருக்கு உதவியது போலவும், அந்த நன்றியை மறக்காமல் இந்த நிகழ்சியில் ராஜ பக்ஷ்வை ஆதரித்துப் பேசியதாகவும் சமாளிக்க முற்படுகின்றனர். நாட்டின் ஒரு பகுதிக்கு பன்முகப்படுத்தப்பட்ட வரவு-செலவி திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட பணத்தில் அபிவிருத்திக்கு அனுமதியளிப்பதென்பது ஒருவரின் தனிப்பட்ட விருபத்துடன் சேர்ந்த விடயமல்ல.. இது  அரசாங்கத்தின் கடமையின்பால் பட்டது. அதிகாரம் முழுக்க தன் கையில் வைத்திருந்த ஆட்சித் தலைவரின் கடமையின்பால் பட்டது. இதற்கு “செஞ்சோற்று” கடனளித்தல் வியாக்கியானம் சற்றும் பொருந்தவில்லை.
புத்தளம் தவிர்ந்த ஏனைய பகுதி முஸ்லீம்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உட்பட்டிருந்த போது, மஸ்ஜிதுகள் தாக்குதலுக்குட்பட்டிருந்த போது நம்மூருக்கு சம்பந்தமில்லாத அஸ்வர், காதர் போன்றோர் இலங்கை முஸ்லீம்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, நாட்டில் எல்லாமே சுமுகமாக நடக்கின்றது, (பழைய) ஜானாதிபதி முஸ்லீம்களின் நண்பன் என சர்வதேசத்தின் கண்களை கட்ட முயன்றபோது  நாம் ஏன் இவர்கள் மீது கோவப்பட்டோம், கொதித் தெழுந்தோம்? அப்படித்தான் பாயிஸின் மின்னல் நிகழ்வும் ஸ்ரீலங்காவின் ஏனைய பகுதி (முஸ்லீம் )மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி இருந்தது என்பதோடு, சுமார் இரண்டரை வருடம் அரச ஆதரவுடன் நடந்த இனக்குரோத நடவடிக்கையை வெளிப்படையாக கண்டித்தமைக்காக  ஆட்சியாளர்களால் வேண்டுமென்றே சிறையில் அடைக்கப்பட்ட அஸாத் சாலியுடனான கருத்து பறிமாறலில் ராஜா பக்ஷவை நியாயப்படுத்த முனைந்த நிகழ்வு அஸ்வர், காதர் போன்றோரின் நிலைப்பாட்டுக்கு எந்த வகையிலும் குறைவில்லாததாகவே பார்க்கப்பட்டது. ஆகவே நாம் புத்தளத்துக்குத்தான் பிரதிநிதி ஒருவரை தேடுகின்றோம் என்றாலும் அவர் ஒட்டு மொத்த சமூகத்துக்கும் பிரயோசனமில்லாவிட்டாலும், சமூகத்துக்கு பாரமாக  இருக்க முடியாதென்பது முக்கியமாகும். ஆகவே ஒட்டகைக் குழுவினரின் “சுயாதீனமாக இயங்கல்” என்ற அவர்களின் 4காம் நிலைப்பாடும் பிரச்சினைக் குரியதாகின்றது.
இதைவிட அண்மையில் நடந்தேறிய இரண்டு முக்கிய விடயங்களும், ஒன்று PPAF பின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரும், தேர்தல் போட்டியாளர்களில் ஒருவருமான பொறியியலாளர் ஜிப்ரி அவர்கள் தனது பேட்டி ஒன்றில் புத்தளத்தில் அ.இ.ம.காங்கிரஸ் சார்பாக யானை சின்னத்தில் போட்டியிடும் மூத்த அரசியல்வாதி நவவி அவர்களைவிட ஸ்ரீ.ல.மு.கா  தங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக கூறியிருந்தது கவனத்தில் எடுக்க வேண்டிய விடயமாகும்.  ஸ்ரீ.ல.மு.கா  உயிர் வாழ்வதற்கான தனது கடைசி மூச்சை இழுத்துக் கொண்டிருக்கும் போது, நாடு தழுவிய ரீதியில் ஸ்ரீ.ல.மு.கா ஒரு நயவஞ்சக் கட்சி என்று மக்கள் நிராகரிக்கும் போது, அவர்களின் முன்னை நாள் ஆதரவுத் தளமான  கிழக்கு கோட்டையில் தொடர்ந்த வெடிப்புக்கள் விழும்போது, மிக வேகமாக சோனக முஸ்லீம் சமூகத்திற்கு ஒரு பாரமாக மாறிவரும் ஸ்ரீ.ல.மு.கா ஸை அளவிடும் சின்ன அரசியல் தெளிவும் இல்லாத நிலையில் புத்தள மக்களுக்கு அரசியல் வகுப்பெடுத்த PPAF ஸ்ரீ.ல.மு.கா ஸுடன் கூட்டுசேர சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே என கவலைப்படுவது  வியப்பாகவுள்ளது.
அடுத்த அம்சம் இதுவரையிலான ஒட்டகைக் குழுவின் செயல்பாடுகள் யாவையும் மொத்தமாக கேள்விக்குட்படுத்த போதுமானது. அதாவது PPAF ன் அங்கத்துவம் இல்லாமல் இந்த தேர்தலுக்காக கூட்டுச் சேர்ந்துள்ள ஏனையோர், பாயிஸ் உட்பட, எந்த காரணத்தைக் கொண்டும், எந்த சந்தர்ப்பத்திலும்  ராஜ பக்ஷவுடன் அல்லது அவரை ஆதரிக்கும் குழுக்களுடன் சேரப் போவதில்லை என்ற அறிவித்தல். ராஜ பக்ஷவின் குழுவினருக்கு ஆட்சி அமைக்கும் அளவு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்பதோ, ராஜ பக்ஷ் பிரதமராவார் என்பதோ என்றும் நிறைவேறாத பகற் கனவு என்றாலும் பெற்றி பெறும் ஒட்டகைக் குழு பாராளுமன்ற பிரதிநிதிக்கு உள்ள தெரிவு “ஒற்றையாக” ஒதுங்கி இருப்பது அல்லது ஆளும் ஐ.தே.ந.மு யுடன் இணைவது.  ஐ.தே.ந.மு. இணைவதானால் ஏன்  நாம் நேரடியாக ஐ.தே.க க்கு வாக்களிக்க முடியாது, அதன் மூலம் ஒரு பாராளுமன்ற பிரதிநிதியை தேர்ந்தடுக்க முடியாது.  ஒரே கல்லில் மூன்று(?) பா.ம உறுப்பினர்கள் நமக்கு தேவையில்லை. தேவையானது  நம்மால் தேர்ந்தெடுக்கப் படக்கூடிய ஒரு பா.ம. உறுப்பினர். அதுவும் ஆளப்போகும் கட்சியின் நேரடி உறுப்பினர்.
இறுதியாக, நம்பகத் தன்மையும், கன்னித் தன்மையும் ஒரே விதமானது என்பார்கள். இவை ஒரு முறை இழக்கப்படால் மீண்டும் அதை பெற்றுக் கொள்ள முடியாது. ஒட்டகை காரர்களும், யானையின் முகவர்களும் அரசியலில் நம்பகத்தன்மையை இழந்தவர்களாகவே நமக்கும் படுகின்றது. ஆகவே நேரடியாக தன் (யானை)கட்சியில், அதுவும் அரசாங்கம் அமைக்கப் போகும் (யானை) கட்சியில் போட்டியிடுபவர் நம் தெரிவாக ஏன் இருக்கக் கூடாது?
நம் ஊர்/தொகுதி என்ற அடிப்படையில் அதன் வளர்சியில், பின்னடைவில் நம் எல்லாருக்கும் பங்குண்டு. ஆகவே அது தொடர்பான விடயங்களில் கருத்துச்சொல்லும் உரிமையும் உங்களுக்குப் போன்று எனக்குமுண்டு என்ற அடிப்படையிலேயே பரஸ்பர புரிதலுடன் கருத்தாட அழைக்கின்றேன் வாருங்கள்.
– முஹம்மத்  எஸ்.ஆர்.நிஸ்த்தார்.

-Sonakar.Com-

Post a Comment

0 Comments