Subscribe Us

header ads

ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட எழுபதாம் ஆண்டு நினைவஞ்சலி



இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வர காரணமாக அமைந்த ஜப்பானின் முக்கிய நகரமான ஹிரோஷிமா மீது அமெரிக்கா குண்டு வீசிய 70-ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதில் ஜப்பானின் பிரதமர் ஷின்சோ அபே உட்பட பல வெளிநாட்டு பிரமுகர்கள் மவுன அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அமெரிக்காவின் எனோலா கே என்கிற B-29 குண்டு வீசுபவர் முதல் அணுகுண்டான 'லிட்டில் பாய்' குண்டை 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி ஹிரோஷிமாவின் மீது வீசினார். இரும்பைக் கூட உருக வைக்கும் 4000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் குண்டு வீசப்பட்ட இடத்தின் அருகிலிருந்த அத்தனையும் பஸ்பமாகின. சுமார், ஒரு லட்சத்து நாற்பதாயிரம் மக்கள் இதில் கொல்லப்பட்டனர். இதற்கு அடுத்த அணுகுண்டு ஜப்பானின் துறைமுக நகரமான நாகசாகியில் ஆகஸ்ட் 9, 1945 அன்று வீசப்பட்டு, எழுபதாயிரம் பேரை பலி வாங்கியது. இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15, 1945 அன்று ஜப்பான் சரணடைந்தது. 

உலக அளவில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த அணுகுண்டு தாக்குதல் நிகழ்த்த வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது என்றும், ஜப்பான் இந்தப் போரில் தோல்வியைத் தழுவ இருந்த நிலையில்தான் அமெரிக்கா இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாகவும் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ஹிரோஷிமா நகர அணுகுண்டு வீசப்பட்ட நாளான இன்று அமெரிக்காவின் ஆயுதங்கள் கட்டுப்பாட்டு துணைச் செயலாளரான கோட்டெ மோயெல்லெர் என்கிற மூத்த அதிகாரியும் நினைவஞ்சலியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.




Post a Comment

0 Comments