Subscribe Us

header ads

கோழி இறைச்சியில் அதிக புரதச்சத்து: ஆய்வில் தகவல்


நாம் உண்ணும் உணவில் சத்தான உணவு வகைகளை சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம் என்பது டாக்டர்களின் அறிவுரை. அசைவ உணவு வகைகளில் சிக்கனமான விலையில் சத்தான உணவு பொருளாக விளங்குவதில் சிக்கன் முதலிடம் வகிக்கிறது.

அதிலும், கறிக்கோழி இறைச்சியில் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான புரோட்டீன் சத்துக்கள் மிகுதியாகவும், கொலஸ்ட்ரால் (கொழுப்பு) குறைவாகவும் இருப்பதாக டாக்டர் சி.ஆர்.செல்வகுமார் கூறுகிறார். வெங்கடேஷ்வரா ஹேட்சரீஸ் நிறுவனத்தின் துணை பொதுமேலாளரான அவர் மேலும் கூறியதாவது:–

தமிழ்நாட்டில் கறிக்கோழி பண்ணைகள் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் 10 கோடி சதுரஅடியில் கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. கறிக்காக வளர்க்கப்படும் கோழிகளால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

முன்னேறிய நாடுகளில் உள்ளவர்கள் தாங்கள் உண்ணும் உணவில், உடலுக்கு தேவையான அளவுக்கு சத்துக்கள் அதாவது கலோரிகள் கிடைக்கும் வகையிலான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் இந்தியாவில் அந்த அளவுக்கு உணவு குறித்த விழிப்புணர்வு இல்லை.

சைவ உணவு சாப்பிடுபவர்கள் அரிசி சாதம், பருப்பு போன்றவற்றை சாப்பிடுகிறார்கள். அசைவ உணவுகளை பொறுத்தவரையில், கறிக்கோழி இறைச்சியில் அதிக புரதச்சத்து உள்ளது. ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி, மாட்டு இறைச்சியுடன் ஒப்பிடுகையில் கறிக்கோழியில் குறைந்த அளவில் தான் கொலஸ்ட்ரால் உள்ளது. கறிக்கோழி இறைச்சியை பொறுத்தவரை மக்களிடம் காலங்காலமாக தவறான எண்ணம் உள்ளது. கறிக்கோழி இறைச்சி சாப்பிட்டால் உடல் சூடு அதிகமாகி விடும் என்று சிலர் நினைக்கிறார்கள். அதில் துளியும் உண்மை இல்லை. மருத்துவ ரீதியாக அதிக அளவு கொழுப்புச் சத்து அதிக உடல் சூட்டை ஏற்படுத்தும்.

100 கிராம் சமைத்த கறிக்கோழி இறைச்சியில் 20.33 சதவீதம் புரதச்சத்து உள்ளது. ஆனால் மட்டனில் 18.2, பன்றி இறைச்சியில் 16, மாட்டு இறைச்சியில் 10.1 சதவீத புரதச்சத்து மட்டும் தான் உள்ளது. எனவே தான் மற்ற இறைச்சிகளை விட குறைந்த விலையில் சிறந்த புரதச்சத்து உணவாக கறிக்கோழி இறைச்சி திகழ்கிறது. 

கொழுப்பை பொறுத்த வரையில் 100 கிராம் சமைத்த கறிக்கோழி இறைச்சியில் 6.77 சதவீதம் மட்டுமே உள்ளது. ஆனால் மட்டனில் 24, பன்றி இறைச்சியில் 21, மாட்டு இறைச்சியில் 14.5 சதவீதமும் கொழுப்பு உள்ளது. மைசூரில் இயங்கி வரும் மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மைய ஆய்வில் இந்த தகவல்கள் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 

இறைச்சியை அதிகமாக சாப்பிடும் பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே வயதுக்கு வந்து விடுவார்கள் என்பது போன்ற கட்டுக்கதைகளை கூறுகிறார்கள். இது தவறானது. எந்த நிரூபணமும் இல்லை. பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே வயதுக்கு வருவதற்கும், கறிக்கோழி இறைச்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அதிக நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவது மற்றும் டி.வி., கம்ப்யூட்டர்களால் கண்களில் அதிக வெளிச்சத்தின் தாக்கம் போன்ற பல காரணங்களால் ஹார்மோன்கள் தூண்டப்பட்டு சிறு வயதிலேயே பெண் குழந்தைகள் வயதுக்கு வருகின்றனர். 

இதற்கும் கறிக்கோழி இறைச்சிக்கும் சிறு சம்பந்தமும் இல்லை.

கறிக்கோழிகளுக்கு அதிக அளவில் ஊசிபோட்டு வளர்க்கிறார்கள் என்ற எண்ணமும் பெரும்பாலான வர்களிடம் உள்ளது. இதுவும் தவறானது. குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை போலத்தான் இந்த கோழிகளுக்கு நோய் தாக்காத வகையிலும், கிருமி நாசினிகள் நீக்கத்துக்கு என்றும் சில ஊசிகள் போடப்படுகிறது. இந்த ஊசிகளின் திறன் 24 மணி நேரத்திற்குள் செயலற்று விடும். 40 நாட்கள் கழித்து தான் விற்பனைக்காக செல்லும் போது அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. மீன், ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி, மாட்டிறைச்சியுடன் ஒப்பிடுகையில் கறிக்கோழி இறைச்சியின் விலையும் குறைவு என்பதால் தான் தற்போது மக்கள் கறிக்கோழி இறைச்சியை விரும்பி சாப்பி டுகிறார்கள் என்றார்.

Post a Comment

0 Comments