நீனா டிபிரோ, கனடா நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற நடிகை. 'வாம்பயர் டைரி' திரைப்படத்தின் மூலம் உலக மக்களின் மனதை கொள்ளை கொண்டவர். ஹாலிவுட் வட்டாரத்தின் அழகு ராணியாக மிளிரும் நீனா, கடந்த மூன்று மாதங்களாக அலங்கார தொப்பிகளுடன் திரைப்பட விழாக்களுக்கு ஆஜராகிறார். கவ்பாய் ஹேட், பேன்சி ஹேட், மாடல் ஹேட், டிசைன் ஹேட் என அவரது கைப்பையில் வண்ணங்கள் நிறைந்த தொப்பிகள் இடம்பிடித்துள்ளன. திடீர் தொப்பி ஆர்வம் குறித்து ஹாலிவுட் வட்டாரத்து தோழிகள் கேட்க... டைட்டானிக் படத்தின் இரண்டாம் பாகம் மாதிரியிலான கதையை கூறி உள்ளார்.
நீனா, நடிப்புடன் வரலாற்று சார்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் கிளாஸ்குளோ பல்கலைக்கழகத்தில் டைட்டானிக் கப்பல் குறித்த முழுமையான ஆராய்ச்சிகளை தொகுத்து பேராசிரியர்களின் முன்னிலையில் சமர்ப்பித்திருந்தார். நீனாவின் தொப்பி ஆர்வத்திற்கும், டைட்டானிக் வரலாற்றிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறதாம். அதை நீனாவே விவரித்தார். இதில் நமக்கு தெரிந்த டைட்டானிக் படத்தின் கதையும், மூழ்கடிக்கப்பட்ட டைட்டானிக் உண்மைகளும் வெளிவந்தன.
"உலகின் முதல் சொகுசுக் கப்பலான டைட்டானிக்கின் முழுப்பெயர் ஆர்.எம்.எஸ்.டைட்டானிக் (RMS TITANIC). இங்கிலாந்தின் மிகப்பெரிய கப்பல் நிறுவனமான ஒயிட் ஸ்டார் லைன் (White Star Line) நிறுவனம் இதை உருவாக்கியது. கப்பல் கட்டும் பணி 1909-ல் மார்ச் 31-ந் தேதி தொடங்கி, 1911-ம் ஆண்டு மே 31-ந் தேதி முடிந்தது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்ட நவீன கப்பலாக துறைமுகத்தை அலங்கரித்து கொண்டிருந்தது. டைட்டானிக் கப்பலை பெண்ணாக கருதியதால் அதனை பெண் பாலிலே (She) அழைத்தனர். 882.6 அடி நீளம், 175 அடி உயரம், 52,310 டன் எடையுடன் 9 தளங்களைக் கொண்டதாக இருந்த டைட்டானிக் செல்வந்தர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. இக்கப்பலில் 2,435 பயணிகளும், 892 பணியாட்களும் பயணிக்கலாம். ஆபத்து காலத்தில் உதவும் வகையில் 20 உயிர்காப்புப் படகுகளும் சேர்க்கப்பட்டிருந்தன. இதுவே உலகின் மிகப்பெரிய நீராவி ஆடம்பர கப்பலாகும்.
இங்கிலாந்தின் சவுத்தாம்டன் (Southampton) நகரில் இருந்து கிளம்பி செர்பர்க், பிரான்ஸ், குயீன்ஸ்டவுன் மற்றும் அயர்லாந்து (Cherbourg, France Queenstown, Ireland) வழியாக அமெரிக்காவின் நியூயார்க் நகரை சென்றடைவதாக திட்டமிடப்பட்டிருந்தது. புறப்படும்போதே டைட்டானிக் கப்பலுக்கு தடங்கல், 'நியூயார்க்' என்ற கப்பலின் மூலமாக ஏற்பட்டுள்ளது. டைட்டானிக் கப்பலில் பிரமாண்டமான இயந்திர இறக்கைகள் இருந்ததால் இவை சுழல ஆரம்பித்ததும் அருகில் நின்று கொண்டிருந்த நியூயார்க் என்ற அந்த வர்த்தக கப்பல் டைட்டானிக் கப்பலின் அருகில் ஈர்க்கப்பட்டுள்ளது. இதனை கண்டு மிரண்ட மாலுமிகள் கப்பலின் இயக்கத்தை நிறுத்தி நியூயார்க் கப்பலை பாதுகாப்பாக விலக்கி, சுமார் 1 மணி நேரம் தாமதமாகவே புறப்பட்டுள்ளனர்.
ஆங்கில கால்வாயைத் தாண்டியதும் பிரான்சில் சேர்பூர்க்கில் நிறுத்தப்பட்டு கூடுதல் பயணிகள் ஏற்றப்பட்டனர். மீண்டும் அடுத்த நாள் அயர்லாந்து, குயீன்ஸ்டவுன் போன்ற இடங்களில் நிறுத்தப்பட்டு நியூயார்க்கை நோக்கிய பயணம் தொடங்கியது. குழந்தைகள், பெண்கள் என 531 பேரும், ஆண்கள் 1,692 பேருமாக மொத்தம் 2,223 பயணிகள் இருந்தனர். இரண்டு நாட்கள் சுமுகமாக கடந்த டைட்டானிக் கப்பலுக்கு ஏப்ரல் 14-ந் தேதி ஆபத்து காத்திருந்தது.
இதமான வெப்பநிலை மாறி கப்பல் முழுவதும் உறைநிலையை அடைந்தது. இரவு நேரம் என்பதால் கப்பல் மிகவும் அமைதியாக இருந்தது. பனிமூட்டமும், கடுங்குளிரும் கடலை கண்காணிக்கும் பணியாளர்களை கடுமையாக சோதிக்க, கப்பலின் போக்கிலே சென்றுள்ளனர். டைட்டானிக் கப்பலுக்கு முன்பாக சென்று கொண்டிருந்த அமெரிக்கா என்ற கப்பலில் இருந்து "வழியில் பனிப்பாறைகள் உள்ளது. என்ஜினின் செயல்பாட்டை குறைத்து கொண்டு மெதுவாக வாருங்கள்'' என்ற அபாய செய்தியை அனுப்பி உள்ளனர். இருப்பினும் இந்த தகவல் டைட்டானிக் கப்பலை வந்தடையவில்லை. இப்படி வேகமாக பயணித்த டைட்டானிக் கப்பல், நள்ளிரவு 11.40 மணிக்கு வட அட்லாண்ட்டிக் பெருங்கடலில் பனிப்பாறை ஒன்றின் மீது பலமாக மோதியது. கப்பலை பனிப்பாறையில் மோதாமல் இருக்க வேறு திசையில் திருப்ப மேற்கொண்ட முயற்சி பலன் அளிக்கவில்லை.
12,000 அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட டைட்டானிக் கப்பலின் ஒரு பகுதி
டைட்டானிக் கப்பலில் இருந்த திசை காட்டும் கருவி சரியாக செயல்படாததே விபத்திற்கு காரணம் என கப்பலில் பயணம் செய்த கேப்டன் சார்லஸ் லைட்டோலரின் பேத்தி லூயிஸ் பேட்டன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில் "டைட்டானிக் கப்பலுக்கு முன்னால் பனிக்கட்டி மிதப்பதைக் கண்டு பிடித்து, கப்பலை இடது பக்கமாக திருப்பச் சொன்னார்கள். ஆனால் அதைத் தவறுதலாகப் புரிந்து கொண்டு வலது பக்கமாக திருப்பி விட்டார்கள்'', என்றும் புத்தகத்தில் தெரிவித்துள்ளார். இவரின் 'குட் காட்' என்ற புத்தகம் 2010-ம் ஆண்டு வெளிவந்தது. ஆரம்பத்தில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த திசை திருப்பும் தவறை தற்போது மறந்துவிட்டனர். குறிப்பாக மறைத்துவிட்டனர்.
ஆடம்பர பயணத்திற்காக வடிவமைக்கப்பட்ட டைட்டானிக் கப்பலை தரமற்றதாக உருவாக்கி இருந்ததை லூயிஸ் பேட்டன் சுட்டி காண்பித்திருந்தார். அதை என்னுடைய ஆய்வுகளின் வழியே நிரூபித்திருக்கிறேன்” என்றவர் சில சான்றுகளை பகிர்ந்துள்ளார்.
"கடல் போக்குவரத்து பாய்மரக் கப்பல்களில் இருந்து நீராவிக் கப்பல்களுக்கு மாற்றம் பெற்ற காலகட்டத்தில் இரண்டு வெவ்வேறான திருப்பு முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. நீராவிக் கப்பல்களில் ரட்டர் கட்டளை (Rudder Orders) என்பதையும், பாய்மரக் கப்பல்களில் டில்லர் கட்டளை (Tiller Orders) என்பதையும் பயன்படுத்தி உள்ளனர். இவையிரண்டும் ஒன்றுக்கொன்று முற்றிலும் எதிரெதிரானவை. இவை இரண்டையும் டைட்டானிக் கப்பலில் உபயோகித்துள்ளனர். இதன்படி கப்பலை ஒரு திசையில் இருந்து மறுதிசைக்கு திருப்ப ஒரு முறையில் வலது பக்கமும், மறுமுறையில் இடது பக்கமும் திருப்ப வேண்டும். இப்படி மாற்றி மாற்றி தொடர்ச்சியாக திருப்பினால் மட்டுமே கப்பலின் திசையை மாற்ற முடியும். ரட்டர் கட்டளை மற்றும் டில்லர் கட்டளை இவ்விரண்டு தொழில்நுட்பங்களும் டைட்டானிக் கப்பலுக்காகவே வடிவமைக்கப்பட்டிருந்தன. தனித்துவமாக தயாரிக்கப்பட்ட முறை என்பதால் டைட்டானிக் கப்பலின் உரிமையாளர் புரூஸ் இஸ்மே இந்த ரகசியத்தை வெளியிடாமல் பாதுகாத்து வைத்திருந்தார். இதுவும் டைட்டானிக் கப்பலின் அழிவிற்கு காரணமாக அமைந்துள்ளது. பனிப் பாறையை கடலின் நடுவே பார்த்ததும் பணியாளர்கள் இயல்பான முறையில் திருப்ப கப்பல் பனிப் பாறைகளை நோக்கி சென்று விபத்துக்குள்ளானதாக சார்லஸ் லைட்டோலர், லூயிஸ் பேட்டனிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அதிகாரப்பூர்வ விசாரணையில் லைட்டோலர் இதனைத் தெரிவிக்கவில்லை.
விபத்திற்குள்ளான கப்பலின் பாகங்கள் 12,000 அடி ஆழத்தில் மண்ணில் புதைந்தன. 1985-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பாலர்டு, பிரான்சைச் சேர்ந்த ஜீன் லூயிஸ் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில் கப்பலின் உதிரி பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதை உலோகவியல் (மெட்டாலர்ஜி) துறையில் அதிக அனுபவம் வாய்ந்த என்ஜினீயர்கள் டிம் போக், ஜெனிபர் ஹ¨ப்பர் மெக்கர்ட்டி ஆகியோருடன் இணைந்து ஆராய்ச்சி மேற்கொண்டனர். சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கப்பலின் அடிப்பகுதியை இணைப்பதற்கு தரம் குறைவான ஆணியை பயன்படுத்தி உள்ளனர்.
இதனால், கப்பலின் ஒரு பகுதி மற்ற பகுதிகளை விட உறுதித் தன்மை குறைவாக இருந்திருக்கிறது. அந்தப்பகுதி பனிப்பாறையில் இடித்ததும் உடைந்துவிட்டது என்று ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்தது.
பிரமாண்ட தோற்றத்தில் உருவாக்கப்பட்ட டைட்டானிக் கப்பலை தரமானதாகவும் உருவாக்கி இருக்கலாம். தரக்குறைவு, தொழில்நுட்ப ரகசியம் என 1,517 பேரின் உயிரை பலி வாங்கிவிட்டனர். லூயிஸ் பேட்டனின் புத்தகத்திற்கு என்னுடைய ஆய்வுகள் வலுசேர்த்துள்ளன. டைட்டானிக் கப்பலின் வரலாற்றில் இயற்கையின் செயல்களை விட மனிதனின் தவறுகள் தான் அதிகமாக இருக்கின்றன. இதனை உலகிற்கு வெளிக்காட்டவே 'டைட்டானிக் ஹேட்ஸ் ஆப்' என்ற அமைப்பை உருவாக்கி தொப்பிகளின் வாயிலாக டைட்டானிக்கின் உண்மை கதையை வெளிப்படுத்தி வருகிறேன். டைட்டானிக் படத்தில் இடம்பெற்ற ரோஸ் கதாபாத்திரத்தை நினைவு கூற தொப்பிகளை பயன்படுத்துகிறேன்” என்று நீண்ட நெடிய வரலாற்றை கூறி முடித்தார்.
நீனாவின் வண்ண தொப்பிகளில் இப்படி ஒரு சோகம் இருப்பதை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்...!
* டைட்டானிக் கப்பலில் செல்ல தோராயமாக மூன்றாம் வகுப்பிற்கு 36 டாலர்களும், இரண்டாம் வகுப்பிற்கு 66 டாலர் களும், முதல் வகுப்பிற்கு 125 டாலர்களும் மற்றும் டீலக்ஸ் வகுப்பிற்கு 4500 டாலர்களும் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. நூறு வருடத்திற்கு முன்பு 4500 டாலர் என்பது பெரிய தொகை. அந்தக்காலத்தில் ஒரு வீட்டையே 1000 டாலருக்கு வாங்க முடியுமாம்!
* விபத்து நடந்தவுடன் டைட்டானிக் கப்பல் உதவி கோரிய போது அருகில் இருந்த கப்பல் ஆர்.எம்.எஸ். கார்பதியா (RMS Carpathia). சுமார் 93 கிலோ மீட்டர் தொலைவில் இருந்துள்ளது. இது வந்தடைய 4 மணி நேரமாகும் என கணக்கிடப்பட்டது. ஆர்.எம்.எஸ். கார்பதியா சரியாக 4.10 மணிக்கு டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்திற்கு வந்து உயிர்காக்கும் படகில் பிழைத்தவர்களை காப்பாற்றியது. படகில் இருந்தவர்கள் ஒரு சிலர் குளிர் தாங்காமல் இறந்து விட்டார்கள். இந்த விபத்தில் மொத்தமாக 1,517 பேர் இறந்து விட்டார்கள். பணியாளர்களுடன் சேர்த்து 710 பேர் உயிர் பிழைத்தார்கள்.
* டைட்டானிக்கை இயக்கிய கேப்டன் எட்வர்ட் ஜான் ஸ்மித் (Edward John Smith) தான் மாலுமிகளிலேயே மிகுந்த அனுபவம் பெற்றவராக விளங்கியவர். கப்பல் மூழ்கும் போது கடைசியாக இவர் என்ன செய்து கொண்டு இருந்தார் என்று பல்வேறு ஊகங்கள் கூறப்படுகின்றன. செய்தி அறையில் பரபரப்பாக இருந்தார் என்றும், அறையினுள் அமைதியாக சென்று விட்டார் என்றும், தண்ணீரில் குதித்து ஒரு குழந்தையை காப்பாற்ற முயற்சித்தார் என்றும் பல்வேறு செய்திகள் உலவுகின்றன. இவரை கவுரப்படுத்த இங்கிலாந்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது.
டைட்டானிக் கப்பலில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளின் மிகப்பெரிய பணக்காரர்கள் பயணம் செய்திருந்தனர். இதில் அமெரிக்காவை சேர்ந்த மில்லியனர் நான்காவது ஜான் ஜேக்கப் அஸ்டரும் (John Jacob Astor IV) ஒருவர். 18 வயதில் கர்ப்பம் தரித்திருந்த தனது மனைவி மேட்டலீனின் பிரசவத்திற்காக நியூயார்க் செல்ல பயணப்பட்டிருந்திருக்கிறார். விபத்தில் கப்பல் மூழ்க ஆரம்பித்ததால், உயிர் காக்கும் படகில் பெண்கள் மற்றும் குழந்தைகளை ஏற்றி அனுப்ப தொடங்கினர். இதில் ஆண்களை அனுமதிக்காததால் ஜான் ஜேக்கப் கப்பலிலேயே இருந்து கொண்டார். டீலக்ஸ் வகுப்பில் பயணம் செய்ததால் சகல வசதிகளும் இவருக்கு கிடைத்தது. இருப்பினும் உயிர்காக்கும் படகில் அனுமதிக்கப்படவில்லை. இதனால் 22-ந் தேதி இறந்த உடலாக கடலில் மீட்கப்பட்டார். இறப்பின் போதும் பல ஆயிரம் டாலர்கள் பணத்துடனே இருந்துள்ளார். பல லட்சம் மதிப்பிலான பண மூட்டைகளுடன் கடலில் மிதந்ததால் இவரை எளிமையாக கண்டுபிடித்துவிட்டனர்.


0 Comments