Subscribe Us

இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்: பாடல் வரிக்கு புத்திலக்கணமாக வாழ்ந்து மறைந்த அப்துல் கலாம்...



வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்? - இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் - இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்ற வாசகங்கள் எல்லாம் சில தமிழ் சினிமா பாடல்களில் வரும் வெற்று வரிகள் மட்டுமல்ல.., 

ஒவ்வொரு தனிமனிதரும் தங்களது வாழ்நாளில் கடைபிடித்தே தீரவேண்டிய தத்துவ முத்துகள் என்ற கொள்கையுடன் வாழ்ந்து மறைந்த முன்னாள் ஜனாதிபதி அமரர் அப்துல் கலாம், தனது வாழ்நாளில் எவ்வளவு நேர்மையானவராகவும், வாய்மையாளராகவும், எளிமையானவராகவும் இருந்துள்ளார்? என்பதை விவரிக்கும் வியப்பூட்டும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக 'பாரத ரத்னா' அப்துல் கலாம் சென்றிருந்தபோது, அந்நிகழ்ச்சியின் இணை ஒருங்கிணைப்பாளரான பிரபல 'வெட் கிரைண்டர்' தயாரிப்பு நிறுவனத்தினர், விழா மேடையில் அவருக்கு ஒரு கிரைண்டரை நினைவுப் பரிசாக அளித்து, கவுரவித்தனர்.

மேடை மரியாதை கருதி, அந்தப் பரிசை ஏற்றுக்கொள்ள விரும்பாத அப்துல் கலாமின் இல்லத்துக்கு புதிதாக ஒரு கிரைண்டரும் தேவைப்பட்டது. எனவே, அன்பளிப்பாக அதை ஏற்றுக்கொள்ள இயலாது என மறுத்துவிட்ட அவர், அந்த கிரைண்டரின் சந்தை விலை மதிப்பின்படி, 4 ஆயிரத்து 850 ரூபாய்க்கான காசோலையை அந்த நிறுவனத்தின் பெயருக்கு தனது கையொப்பமிட்டு, எழுதித் தந்தார்.

அதை பெற்றுக்கொண்ட நிறுவனத்தார்.., அப்துல் கலாம் என்னும் அந்த மாமேதையின் நினைவாக அவரது கையொப்பத்துடன் வந்த அந்த காசோலையை பொக்கிஷமாக கருதி பத்திரப்படுத்திக்கொண்டனரோ, என்னவோ..?

அந்த காசோலைக்குரிய தொகை தனது வங்கிக் கணக்கில் இருந்து நீண்ட நாட்களாக எடுக்கப்படாமல் இருப்பதை அப்துல் கலாமின் கவனத்துக்கு அவரது உதவியாளர்கள் கொண்டு சென்றனர். நினைவுப் பரிசாக பெற்ற பொருளின் விலையை தானாக முன்வந்து காசோலையாக அளித்த அவரது கண்ணியத்தைவிட, அவரது நேர்மையான அடுத்தகட்ட நடவடிக்கை அந்த கிரைண்டர் நிறுவனத்தை திக்குமுக்காட வைத்து விட்டது.

உடனடியாக அப்துல் கலாமின் அலுவலகத்தில் இருந்து அந்த கிரைண்டர் நிறுவனத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. சுமார் இரண்டு மாத காலமாக கலாம் அளித்த காசோலை மாற்றப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டிய அவரது உதவியாளர், உடனடியாக அதை வங்கியில் டெபாசிட் செய்யும்படி கலாம் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.

இது பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கமான நடைமுறையாக இருக்கலாம். ஆனால், அதற்கடுத்து, அப்துல் கலாம் விடுத்த 'அன்பு மிரட்டல்' அவர் நேர்மையானவர் மட்டுமல்ல.., கண்டிப்பானவர் என்பதையும் நம் அனைவருக்கும் உணர்த்தியுள்ளது.

இப்போதே அந்த காசோலையை வங்கியில் டெபாசிட் செய்யாவிட்டால், நீங்கள் தந்த கிரைண்டர் உடனடியாக உங்களுக்கு திருப்பி அனுப்பப்படும் எனவும் அப்துல் கலாம் அறிவுறுத்தியதாக அவரது உதவியாளர்கள் கூறியதை கேட்ட அந்த நிறுவனத்தார் திகைத்துப் போய் விட்டனர்.

அப்துல் கலாமின் மறைவுக்கு பின்னர் சில முகநூல் நண்பர்கள் மூலமாக, அப்துல் கலாமின் கையொப்பத்துடன் கூடிய அந்த காசோலையின் படத்துடன் இந்த அரிய தகவலும் வெளியாகியுள்ளது.

Post a Comment

0 Comments