Subscribe Us

header ads

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் ஏன் கிடைக்கவில்லை?

மக்களே இது உங்களின் தீர்ப்புக்காக. 



சாய்ந்தமருதில் முஸ்லிம் காங்கிரஸ் எதிரிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து பேரினவாதிகளின் அனுசரணையுடன், முஸ்லிம் காங்கிரசின் பலமான கோட்டைகளை உடைப்பதற்காக உள்ளூராட்சிமன்றம் என்ற புதுவிதமான கோசத்தை கையில் எடுத்துக்கொண்டு அரசியல் செய்யகின்றனர். 



சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்ற கோரிக்கையானது இன்று நேற்று உருவானதல்ல. இது 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வலுப்பெற்றிருந்தது. இக்கோரிக்கையை முதன் முதலில் முன்வைத்தவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள்.



இதன் முன்னோடியாகவே எமது சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச செயலகம் முஸ்லிம் காங்கிரசினால் வழங்கப்பட்டது. இந்தப் பிரதேச செயலகம் சாதரணமாக பெறவில்லை. மாறாக முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் உள்ளுக்குள் இருந்துகொண்டு தலைவருடன் நடத்திய போராட்டங்கள் ஏராளம். சந்திரிக்காவின் அரசாங்கத்தில் பலமான சக்தியாக மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் இருந்தும், உடனடியாக இதனை பெறுவதில் தடங்கல்கள் இருந்தது. 



இன்று முஸ்லிம் காங்கிரசின் எதிரிகள் தனியான உள்ளூராட்சி மன்றத்தை முஸ்லிம் காங்கிரஸ்தான் தடுத்தது என்று பொய்யான பரப்புரைகளை மேற்கொள்கிறார்கள். அத்துடன் தங்களின் அரசியலுக்காக சுய விளம்பரம் பெறும்பொருட்டு கூட்டங்களை நடத்தி முஸ்லிம் காங்கிரசுக்கும், அதன் தலைவருக்கும் வசைபாடுகின்றனர். இதனை ஒரு வெற்று கோசமாகவும், துரும்பாகவும் பயன்படுத்துகிறார்களே தவிர, உள்ளூராட்சி மன்றம் பெறும் நோக்கம் இவர்களிடமில்லை.



சாய்ந்தமருதுக்கான தனியான சபை கோரிக்கை உச்சத்திலிருந்த 2010 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சராக அதாஉல்லா பதவி ஏற்றதும், பிரதேச சபையாக இருந்த தனது ஊரை இரண்டு சபைகளாக பிரித்தார். ஒன்றை மாநகர சபையாக தரம் உயர்த்தி தனது அதிகாரத்தை காண்பித்தபோது சாய்ந்தமருதுக்கும் சேர்த்து தனியான சபையை வழங்கியிருக்கலாம். அப்போது முஸ்லிம் காங்கிரஸ் எதிர்த்தரப்பு வரிசையில் இருந்தது. 2012 ஆம் ஆண்டில்தான் அரசுடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்துகொண்டது. ஆனால் முஸ்லிம் காங்கிரசை விமர்சிப்பவர்கள் உரிய அதிகாரம் கொண்ட அமைச்சரான அதாஉல்லாவை விமர்சிக்கவில்லை.



அத்துடன் மகிந்தவின் செல்லப்பிள்ளையாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் இருந்தார். அவரை தேசியத்தலைவர் என்று கூறித்திரியும் அவரது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களால் ரிசாத் பதியுதீனிடம் சென்று உள்ளூராட்சி மன்றத்தை பெற முயற்சிக்காதது ஏன்? 


அப்படி முயற்சித்திருந்தால் ரிசாத் பதியுதீனால் ஏன் பெற்றுக்கொடுக்க முடியவில்லை?

பெற்றுக்கொடுக்க முடியாத ரிசாத்தை ஏன் விமர்சிக்கவில்லை? அவரது கட்சியின் செயலாளராக வை.எல்.எஸ். ஹமீத் இருக்கும் வரை எதிர்காலத்தில் எமதூருக்கு ரிசாத்தினால் எதனை செய்ய முடியும்?  


மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் முஸ்லிம் காங்கிரசின் நிலை என்னவென்பது சிறு பிள்ளையும் அறிந்தவிடயம். கட்சிப்பிளவை தடுக்கும் பொருட்டு, பெயரளவில் அமைச்சராக இருந்ததே தவிர எந்தவிதமான அதிகாரங்களும் இருக்கவில்லை. மாறாக முழு அதிகாரங்களும் பொருந்திய மகிந்தவின் செல்லப்பிள்ளைகளான அதாஉல்லா, ரிசாத் பதியுதீனால் உள்ளூராட்சி மன்றத்தினை வழங்கமுடியாமல் போனதேன்? 



அதாஉல்லா உள்ளூராட்சி மன்றம் வழங்குவதற்கு முன்வந்ததாகவும், அதனை ஹக்கீம் தடுத்துவிட்டார் என்றும் விமர்சிக்கின்றார்கள். மகிந்தவின் அரசில் அதாஉல்லா, ரிசாத் போன்றவர்களின் அதிகாரத்தை தடுக்கின்ற அளவுக்கு தலைவர் ஹக்கீமிடம் அதிகாரம் வழங்கப்பட்டிருந்ததா?  



ஐந்து வருடங்களாக உள்ளூராட்சி அமைச்சராக இருந்தும் எமதூருக்கு சபை வழங்காமல் காலத்தை கடத்திவிட்டு, கடந்த ஜனவரி மாதம் அதுவும் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வழங்க முற்பட்டாராம் அதாஉல்லா. யாருக்கு கதை சொல்லுவது? சாய்ந்தமருதில் உருவாகும் சபை முஸ்லிம் காங்கிரசின் சபையாக இருக்கும் என்பது அதாஉல்லாவுக்கு தெரியும். தனது எதிரியான முஸ்லிம் காங்கிரசுக்கு ஒரு மேலதிக உள்ளூராட்சி மன்றம் ஒன்றை உருவாக்குமளவுக்கு அதாஉல்லா விரும்புவாரா?  



கல்முனை மாநகர முதல்வராக சிராஸ் மீராசாகிப் இருந்தபோது எமது உள்ளூராட்சி மன்றம் சம்பந்தமாக வாயே திறக்கவில்லை. அவர் நினைத்திருந்தால் மாநகர சபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கலாம். 



அதுபோல சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் வந்தால் தனக்கு முதலமைச்சர் அல்லது அமைச்சர் பதவி கிடைக்காமல் போய்விடும் என்றும், தவிசாளர் ஒருவர் எமதூரில் உருவானால் தனது தனியுரிமைக்கு வேட்டு வைக்கப்பட்டுவிடும் என்றும் நினைத்து பின்கதவால் அதாவுல்லாவுடன் சேர்ந்துகொண்டு எமது உள்ளூராட்சி மன்றத்தை தடுத்தவர்களில் மாகாணசபை உறுப்பினர் ஜமீலையே சாரும். 



இப்போது இவர்கள் இருவரும் முஸ்லிம் காங்கிரசை விமர்சிப்பதுடன், சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி மன்றம் பெற்றுதருவதாக மக்களை உசுப்பேத்துகிறார்கள்.  



அத்துடன் இன்றைய ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சரவையில் எமதூருக்கான உள்ளூராட்சி மன்றத்துக்கான அனைத்து முயற்சிகளும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையினால் மேட்கொண்டிருக்கின்ற வேளையில் எதிர்பாராதவிதமாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது.

இது சம்பந்தமாக கடந்த ஏப்ரல் மாதம் தலைவர் ஹக்கீமின் தலைமையில் சாய்ந்தமருது பள்ளிவாசல் நிருவாகத்தினர்களும், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் சேர்ந்து உள்ளூராட்சி மாகான சபைகள் அமைச்சர் கரு ஜயசூரியவை சந்தித்து தங்களது கோரிக்கையை முன்வைத்தனர்.

இது தாமதமானதையிட்டு முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை விமர்சித்தார்களே தவிர, உரிய அதிகாரங்கள் குவிந்து கிடக்கின்ற அமைச்சர் கரு ஜெயசூரியவையோ, பிரதமரையோ விமர்சிக்கவில்லை. இதன்மூலம் இவர்களது உண்மை முகத்தை அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது.



இந்த தாமதத்தை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை பிரதமரிடம் சுட்டிக்காட்டியது. அத்துடன் ஐ.தே.கட்சியுடன் செய்துகொண்ட தேர்தல் உடன்படிக்கையிலும் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சிமன்ற கோரிக்கை முக்கிய இடத்தை வகிக்கின்றது. இதனாலேயே தலைவர் ஹக்கீம் அவர்கள் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் வழங்கப்படும் என்று பகிரங்கமாக கூறியுள்ளார். அத்துடன் ஓட்டமாவடியில் கடந்த வாரம் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் மகாநாட்டில் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றத்தை வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த வாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் கல்முனையில் நடைபெற்ற கூட்டத்தில், தேர்தலின் பின்பு சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சிமன்றம் வழங்கப்படும் என்று பகிரங்கமாக உறுதியளித்துள்ளார்.  



எனவே எமக்கு தனியான பிரதேச செயலகம் பெற்றுத்தந்ததும், நாளைக்கு தனியான உள்ளூராட்சி மன்றத்தினை பெற்றுத்தர இருப்பதும் முஸ்லிம் காங்கிரஸ்தான். உள்ளூராட்சி மன்றத்தினை துரும்பாகவைத்து பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப காழ்ப்புணர்ச்சி கொண்டு முஸ்லிம் காங்கிரசை அழிக்க முற்படும் சுயனலவாதிகளிடம் எமது கட்சியை பாதுகாப்போம்.

மத்தியகுழு, சாய்ந்தமருது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்

Post a Comment

0 Comments