தைரியமாக துணிந்து சமூகத்திற்காக தீர்மானங்களை எடுக்க முடியாத, கோழைத்தன அரசியல் தலைமைத்துவங்கைள நம்பி இனியும் நாம் ஏமாந்துவிடக் கூடாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வரிப்பத்தாஞ்சேனை, இறந்தாப்பிட்டி முனை, சம்மாந்துறையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதுதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீன் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியினை தீர்மானிக்கும் கட்சியாக இருந்தது. இன்று அது எந்த ஆட்சிக்கும் தேவையற்ற பலமில்லாத கட்சியாக மாறிவிட்டதுடன் பேரம் பேசும் சக்தியினையும் இழந்துவிட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த தேர்தலில் ஒரு ஆசனத்தையே பெறும்.
முன்னாள் ஜனாதிபதிகளான ஆர்.பிரேமதாச மற்றும் சந்திரிக்கா குமாரணதுங்க ஆகியோர் ஜனாபதியாக அமர்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் பெரும் பாடுபட்டார்.
அவரது மறைவிற்கு பின்னர் தலைவராக வந்த ரவூப் ஹக்கீம் முஸ்லிம் சமூகத்தின் விடயத்தில் பொடு போக்குடன் நடந்து கொண்டார் .
மறைந்த தலைவர் அஷ்ரப் இந்த கட்சியினை உருவாக்கி இம்மக்களுக்கு எதனையெல்லாம் பெற்றுக்கொடுக்க முடியுமோ அதனை பெற்றுக்கொடுத்துவந்தார். ஆனால் அவரது மறைவின் பின்னர் இந்தக்கட்சியின் சாரதியாக அமர்ந்த ஹக்கீம் எதனை செய்து கொடுத்துள்ளார்.
அவரது 15 வருட தலைமைக்காலத்துக்குள் வெறும் உரிமைகள் என்று பேசி பேசி காலத்தை ஓட்டியதுடன் பாராளுமன்ற கதிரைகளை சூடாக்கியதை தான் செய்தார். அன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியினை தீர்மானிக்கும் கட்சியாக இருந்தது. இன்று எந்த ஆட்சிக்கும் தேவையற்ற பலமில்லாத கட்சியாக மாறிவிட்டது.
கடந்த இரு ஜனாதிபதி தேர்தலிலும் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வராமல் இருப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சிக்கு உதவி செய்தார். ஆனால் மஹிந்த வென்றார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவா, மைத்திரியா என்று இருந்த போது நாங்கள் மைத்திரிதான் வெல்ல வேண்டும் என்று தபால் வாக்களிப்புக்கு முன்னைய தினத்தில் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்குமாறு வேண்டினோம்.
ஆனால் ரவூப் ஹக்கீம் அன்றைய தினத்தில் வேண்டினார், மனச்சாட்சி படி வாக்களியுங்கள் என்று. தையரியமாக துணிந்து சமூகத்திற்காக தீர்மானங்களை எடுக்க முடியாத கோழைத்தனமான அரசியல் தலைமைத்துவங்கைள நம்பி நாம் இனியும் ஏமாந்துவிடக் கூடாது.
பசியால், பட்டினியால் வாடுகின்ற ஒருவனுக்கு உணவைக்கொண்டு கொடுப்பது தான் தத்துவ ரீதியில் நியாயப்படுத்தப்படக் கூடிய காரணமாக இருக்கும். மாறாக இன்று இந்த காங்கிரஸ் அம்மக்களுக்கு ஏதையெல்லாம் பெற்றுத் தருவதாக பிதற்றுகின்றது. இவ்வளவு காலமும் எதனையும் பெற்றுத்தராத ரவூப் ஹக்கீம் இன்னும் எதனையாவது பெற்றுத் தருவார் என்று இளவு காத்த கிளி போல் வாக்காளர்கள் இருப்பீர்கள் என்றால், உங்களை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்.
அஷ்ரப் இந்த கட்சியினை ஆரம்பித்து கூட்டங்களுக்கு செல்கின்ற போது அவரை நோக்கி கற்கள் வந்தன. இருந்த போதும் தமது பணியினை செய்தார். இன்றும் அதேவேலையினை இறக்காமத்திலும் அட்டாளைச் சேனையிலும் செய்கின்றனர். கூட்டங்களை குழுப்புவதற்கு அடியாட்களை கற்கள் சகிதம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அனுப்புகின்றது.
இந்த கற்களுக்கு நாம் பயந்தவர்கள் அல்ல. சத்தியத்தினையும், நேர்மையான அரசியலினையும் மக்களுக்கு கொண்டு செல்லும் பணிக்கு எதிராக வரும் அனைத்து சவால்களையும் அல்லாஹ்வின் உதவி கொண்டு எதிர்கெள்ளத் தாயராகவுள்ளோம்..
இந்த நாட்டில் உள்ள 23 இலட்சம் முஸ்லிம்களின் எதிர் காலத்தை தனிப்பட்ட சுயலாபங்களுக்காக அடகு வைக்கும் கைங்கரியத்திற்கு நாம் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம்.
இந்த நாட்டில் சிறுபான்மை சமூகத்தின் குரல் வலையினை நசுக்கி அடிமை வாழ்வினை வாழச் செய்வதற்கு சிங்கள கடும்போக்கு அமைப்புக்கள் செயற்பட்ட போது அதனை அடக்கி மக்களை அச்சமற்ற சூழலில் வாழ்வதற்கான உத்தரவாதத்தை தாருங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கூறினோம்.
அரசுக்குள்ளும், அமைச்சரவைக்குள்ளும் இருந்து போரடினோம். ஆனால் அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படியானவர் தான் மீண்டும் தேர்தலில் போட்டியிடவந்துள்ளார்.
இவரை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்பதில் சில முஸ்லிம் வேட்பாளர்கள் முயற்சிக்கின்றனர். அது வெறும் கனவாகும். மஹிந்த ராஜபக்ஷவின் ஏஜெண்டுகளாக செயற்படும் நபர்கள் இந்த ஒப்பந்தத்தினை பாரமெடுத்துள்ளனர். இவர்களுக்கு மக்கள் நல்ல பாடத்தை புகட்ட வேண்டும் என்றும் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் மேலும் தெரிவித்தார்.

0 Comments