Subscribe Us

header ads

அவன்தான் உலகத்தில் முதன்முறையாக அணுகுண்டு வீசிய பெரும் பாவத்தைப் பெற்றுக்கொண்டவன்.

அமெரிக்க விமானப் படையில் அவன் ஒரு வீரன்.


இரண்டாம் உலகப் பெரும் போரில் அவனுக்கு இடப்பட்ட கட்டளையை இனிதே முடித்ததற்காக அரசாங்கம் அவனுக்கு உயர்ந்த விருது வழங்கியது பல்லாயிரம் டாலர் பணமுடிப்பும் வழங்கியது.


அதற்கு முன்னரே அவனது பெயர் உலகச் செய்தித் தாள்கள் அனைத்திலும் வந்துவிட்டது. அமெரிக்க ஏடுகளோ அவனை வாழ்த்தி வாழ்த்தி வானத்திலேயே கொண்டுவைத்துவிட்டன.

பெற்ற பட்டத்தோடும் பண முடிப்போடும் அந்த வீரன் பீடுநடை போட்டு இல்லத்துக்கு வந்தான்.

தன் அன்பு மனைவி தன்னை எப்படி எல்லாம் வரவேற்பாள் என்று கற்பனை செய்துசெய்து, அவனது இதயம் பூரித்துப்போய் இருந்தது.


'டக்... டக்’ என்ற பட்டாளத்து வீரனின் பூட்ஸ் ஒலி கேட்டு அந்த மங்கை வாசலுக்கு விரைந்தோடி வந்தாள்.

அவளது முகத்தில் மகிழ்ச்சி இல்லை. மருட்சியே இருந்தது. கண்களிலே களிப்புக் கூத்தாடவில்லை; அனலையும் புனலையும் கக்கிக்கொண்டு இருந்தன.
''நில்... உள்ளே வராதே...''


தன் அன்பு மனைவி எரிமலையாகி நிற்பது கண்டு அவன் ஒரு கணம் திகைத்தான். அருகில் நின்ற தன் குழந்தையை எட்டிப் பிடிக்க முயன்றான்.

'தொடாதே... உன் பாவக் கரங்களால் என் குழந்தையைத் தொடாதே.


அவன் எவ்வளவோ முயன்று பார்த்தான். என்றாலும், அவளை அவனால் அமைதிகொள்ளச் செய்ய முடியவில்லை.

இப்படி, கட்டிய மனைவியாலேயே துச்சமென மதிக்கப்பட்டுத் துரத்தப்பட்ட பரிதாபத்துக்கு உரிய அந்த மனிதன் யார் ?


அவன்தான் கிளவ்டி ஈதர்லி.

அவன்தான் ஹிரோஷிமா மீது முதன்முதலாக அணுகுண்டு வீசியவன்.

அவன்தான் உலகத்தில் முதன்முறையாக அணுகுண்டு வீசிய பெரும் பாவத்தைப் பெற்றுக்கொண்டவன்.

ஹிரோஷிமா மீதும், நாகசாகி மீதும் குண்டு வீசப் பல போர் விமானங்கள் பறந்து சென்றன. ஆனால், முதல் குண்டை, அதற்கான பட்டனைத் தட்டிவிட்டு வெடிக்க வைத்தவன் கிளவ்டி ஈதர்லி.


அவனுக்கு உயர்ந்த விருதும் பண முடிப்பும் அளிக்கப்பட்ட செய்தியை அவனது இல்லாள் முதலில் செவியுற்றபோது, இன்பத்தின் எல்லையைத் தாண்டி ஓடத்தான் செய்தாள்.

ஆனால், அடுத்து அவள் தொலைக்காட்சியிலே கண்ட ஹிரோஷிமாவின் அவலக் காட்சிகள், ஒரே நிமிடத்தில் லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொன்று குவிக்கப்பட்ட கோரக் காட்சிகள், பெற்றோரை இழந்து தேம்பித் தேம்பி அழும் குழந்தைகளின் அழு குரல்கள், அவளது உள்ளத்தை இடித்துவிட்டன.

ஹிரோஷிமாவிலே கை இழந்து, கால் இழந்து, கண் இழந்து அணுக் கதிர் வீச்சால் உடலெல்லாம் வெந்துபோய் உயிரோடு வெந்துகொண்டு இருந்த மக்களின் கதறல் அவளது இதயத்தைக் கதறவைத்தது.

இத்தகைய கொடிய பாவத்தைச் செய்தவனா தன் கணவன்?’ என்று நினைத்தபோது, அந்தப் பேதை பைத்தியம் பிடித்த நிலைக்கு ஆளாகிவிட்டாள்.


அதனால்தான் தன் கணவனை, ''ஓடு... ஓடு... உலகம் மன்னிக்காத பாவத்தைச் செய்தவனே... ஓடு... ஓடு...'' என்று அவள் துரத்தினாள்.

அதுவரை ஈதர்லிக்கும் தான் எத்தகைய 'கைங்கரிய’த்தைச் செய்திருக்கிறோம் என்பது தெரியாது.

ஐயோ! இட்ட கட்டளையைத்தானே நான் செய்து முடித்தேன் என்று அவனது இதயம் அழுதது. என்றாலும், அவள் மன்னிக்கத் தயாராக இல்லை.


அப்பாவி மக்கள் மீது கோழைத்தனமாகக் குண்டு வீசிக் கேவலமான வெற்றி தேடிக்கொள்ள முனைந்தவர்களுக்கு என்றுமே மன்னிப்பு கிடையாது என்று அவள் இடி முழக்கம் செய்தாள். தெருக்களிலே ஓடினான் ஈதர்லி.

அவனுடைய நண்பர்கள் அவனை வெறுப்போடும் வேதனையோடும் பார்த்தார்கள்.
தான் செய்த பாவத்துக்கு ஈடாகப் பெற்ற பரிசுத் தொகையை அப்படியே ஹிரோஷிமா மக்கள் நிவாரண நிதிக்கு அளித்தான்.


அளித்த கையோடு வீடு நோக்கி ஓடி வந்தான்.

நீ செய்த கொடுமைக்கு இது பிராயச்சித்தம் ஆகாது என்று அவன் மனைவி கூறிவிட்டாள்.


ஐயையோ என்று மீண்டும் அவன் வீட்டைவிட்டு ஓடினான்.


ஹிரோஷிமாவைப் பற்றிய திரைப்படங்கள் வெளிவந்தன.

அந்தப் படங்களில் அநாதையாக விடப்பட்ட ஆயிரமாயிரம் மக்களின் சோகக் கதைகள் சித்திரிக்கப்பட்டன.

இந்தப் படங்களைப் பார்த்த அமெரிக்க மக்கள் ஈதர்லியைக் கண்டபோது எல்லாம் 'இவன்தான் அந்தக் கொடியவன்’ என்று சுட்டுவிரல் நீட்டி அவனைக் குற்றவாளி ஆக்கிக்கொண்டே இருந்தார்கள்.

அவன் இதயம் குழம்பியது. பட்டாளத்து வீரர்களிடம் யுத்த எதிர்ப்புப் பிரசாரம் செய்தான்.

அவனுக்குக் கிடைக்கவிருந்த உயர்ந்த பதவி பறிபோயிற்று.

என்றாலும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஒன்றும் அறியாத மக்கள், இருந்த இடம் தெரியாமல் அழித்ததற்கு இதுவும் பரிகாரமாகத் தெரியவில்லை.

அவன் தெருக்களிலே பிரசாரம் செய்தபோதுதான் அரசாங்கம் விழித்தது.


ஈதர்லி அணுகுண்டை எதிர்த்துப் பிரசாரம் செய்வது அன்றைய நிலையில் ஆபத்தாகத் தென்பட்டது.

ஆனால், அவன் மீது என்ன நடவடிக்கை எடுப்பது?


ஒரு நாள் தனது இல்லத்தின் முன்பே நரம்பு ஒன்றை அறுத்துக்கொண்டு ஈதர்லி இரத்த வெள்ளத்தில் கிடந்தான்.


ஆம்! இந்த உலகத்தில் இருந்தே விடைபெற விரும்பி தற்கொலை செய்துகொள்ள முயன்றான்.

ஆனால், அவனுக்கு டாக்டர்கள் உயிர்ப் பிச்சை அளித்துவிட்டார்கள்.


அவன் மருத்துவமனையில் நினைவு பெற்று எழுந்தபோது, ஐயோ! நான் இன்னும் உயிருடனா இருக்கிறேன்? என்று அலறினான்.

மாதங்கள் சில மறைந்தன. ஊரும் உலகமும் அவனைக் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்திய நிலைமை மாறி, ஒவ்வொரு நிமிடமும் அவனது உள்ளமே அவனைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திக்கொண்டு இருந்தது.


இந்த நிலையில், அவன் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது அதிகாரிகளுக்குப் புரிந்துவிட்டது.


ஈதர்லி பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டான். அங்கும் அரைப் பைத்தியங்கள் அவனை அடையாளம் கண்டுகொண்டன.


ஒருநாள் திடீரென்று ஈதர்லி பைத்தியக்கார விடுதியில் இருந்து மறைந்துவிட்டான்.
பைத்தியக்கார விடுதியில் இருப்பதைவிடச் சிறையில் இருப்பதே தனக்குச் சரியான தண்டனையாக இருக்க முடியும் என்று எண்ணினான்.


ஓர் இடத்தில் திருடினான். ஆனால், அவன் எண்ணம் ஈடேறவில்லை. மீண்டும் பைத்தியக்கார விடுதிக்கே அனுப்பப்பட்டான்.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் 'அவனுக்குப் பைத்தியம் தெளிந்துவிட்டது’ என்று டாக்டர்கள் அவனை வெளியே அனுப்பியபோது... மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன், கல்வஸ்டன் என்ற இடத்தில் ஒரு கடையைக் கொள்ளை அடித்தான்.

அவன் கொள்ளை அடித்தது 162 டாலர்கள்தான். அவன் எண்ணம் ஈடேறிவிட்டது.


ஈதர்லி சிறை சென்றான். அவனோடு அணுகுண்டு வீசச் சென்ற டிப்பெட் உட்பட நால்வர் இன்று அமெரிக்க இராணுவத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறார்கள்.
ஆனால், ஈதர்லி தனக்குரிய உயர்ந்த பதவியைச் சிறைச்சாலையில் தேடிக்கொண்டுவிட்டான்.


என்றைக்குமே ஈதர்லியைப் போன்றவர்களை உலகம் மன்னிக்காது.

இன்றைக்கும் ஜப்பானிலே அணுக் கதிர்வீச்சால் அவதிப்படுகிற ஆயிரம் ஆயிரம் மக்கள் என்றைக்குமே அவனை மன்னிக்க மாட்டார்கள்.

ஆனால் ஒன்று, உலகில் உள்ள போர் வெறியர்களுக்கு ஈதர்லியின் வாழ்க்கை நல்லதோர் படிப்பினையாக இருக்கும்.


ஈதர்லி ஏவிய கணைதான். எய்யப்பட்ட அம்புதான்! அவனுக்கே இந்த நிலை என்றால், நெறி தவறிப் போர் வெறியில் நிலை தடுமாறி படை கொண்டுவரும் பாவக் கரங்களுக்கு ?

ஹிரோஷிமா மீதும், நாகசாகி மீதும் குண்டு வீசப் பல போர் விமானங்கள் பறந்து சென்றன. ஆனால், முதல் குண்டை, அதற்கான பட்டனைத் தட்டிவிட்டு வெடிக்க வைத்தவன் கிளவ்டி ஈதர்லி.

#‪#‎2ம் உலகப் போரில் ஹிரோஷிமா மீது அமெரிக்கப்படைகள் அணுகுண்டு வீசியதின் 70 ம் வருட நினைவு நாள் இன்று##

-Razana Manaf-

Post a Comment

0 Comments