எதிர்வரும் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க பிரதமரானால் நாட்டின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படும். நாட்டுக்கு எதிரான சட்டமொன்று பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டால் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது என முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
2002 ஆம் ஆண்டு ரணில் விக்கிரசிங்க பிரதமராக இருந்தபோது பாராளுமன்றத்திற்கு தெரியாமல் இரகசியமாக விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் ஒப்பந்தமொன்றை செய்துகொண்டார். இந்த ஒப்பந்தம் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தமையினால் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இரண்டு வருடங்களில் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டார்.
ஆனால் தற்போதைய அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தினூடாக ஜனாதிபதிக்கு எந்தகாரணம் கொண்டும் பாராளுமன்றத்தை நான்கரை வருடங்களுக்கு முன் கலைக்க முடியாது.
மேலும் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் தேர்தலில் பிரதமரானால் தேசிய அரசாங்கமொன்றை உருவாக்குவதாக கூறுகின்றார். தற்போது தேசிய அரசாங்கத்திலுள்ள கட்சிகளான ஜாதிக ஹெல உறுமய ,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளுக்கிடையில் கொள்கை ரீதியில் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன. இந்நிலையில் இவர்களால் நாட்டிற்கு தேவையான எந்த சட்டத்தையும் உருவாக்க முடியாமல் குழப்பமான நிலைமை ஏற்படும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ள கோரிக்கைகளை பெற்று கொடுத்தால் நாட்டில் ஏற்படும் நிலைமையை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.ரணில் விக்கிரமசிங்க இரண்டு வருடங்கள் பிரதமர் பதவி வகித்து வடக்கு கிழக்கில் விடுதலை புலிகளின் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தம் செய்துகொண்டு நாட்டை இரண்டாக பிளவுபடுத்தும் நிலைமையை ஏற்படுத்தினார்.
இம்முறை பொருத்தமில்லாத கட்சிகள் மற்றும் நபர்களை இணைத்துக் கொண்டு அமைக்கவிருக்கும் குழப்பகரமான அரசாங்கத்திற்கு பதிலாக நிரந்தரமான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு மக்கள் அணிதிரண்டுள்ளனர்.
மேலும் உலகில் முதற்தடவையாக பயங்கரவாதிகளுக்கு அதிகாரமுள்ள நிர்வாக எல்லையொன்று இருப்பதாக சட்டபூர்வமாக ஏற்றுக்கொண்டவர் ரணில் விக்கிரமசிங்கதான்.
எனவே எதிர்வரும் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க பிரதமரானால் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவுடன் நாட்டிற்கு அச்சுறுத்தலான சட்டங்களை இயற்றும் போது 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது.அத்துடன் அது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக அமையும் என்றார்.
0 Comments