ஜனவரி எட்டாம் திகதி நாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரட்சியை முன்கொண்டு செல்லும் வகையிலும் நல்லாட்சியையும் இணக்கப்பாட்டு செயற்பாட்டையும் தொடர்வதற்கும் பெரும்பான்மையான மக்களின் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து சிறந்த சமூகத்தை கட்டியெழுப்பவதுடன் இணக்கப்பாட்டுடன் கூடிய அரசாங்கத்தை உருவாக்குவோம். அனைவருக்கும் சம சந்தர்ப்பங்களை வழங்கும் புதிய நாட்டை கட்டியெழுப்புவோம் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ஜனவரி எட்டாம் திகதி நாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரட்சியை முன்கொண்டு செல்லும் வகையிலும் நல்லாட்சியையும் இணக்கப்பாட்டு செயற்பாட்டையும் தொடர்வதற்கும் பெரும்பான்மையான மக்களின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
தேர்தல் காலத்தில் மக்களின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்து தரப்பினருக்கும் எனது நன்றியை தெரிவிக்கின்றேன். நீதியானதும் நேர்மையானதுமான தேர்தலை இம்முறை நடத்த முடிந்துள்ளது. அவ்வாறான ஆரோக்கியமான சூழலை பாதுகாத்துக்கொள்வது எமது கடமையாகும்.
தற்போதைய நிலையில் வெற்றியாளர்கள் தோல்வியாளர்கள் என எவரும் பிரிந்து செயற்படவேண்டியதில்லை. ஒரு தாயின் பிள்ளைகளாக புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க இணைந்து செயற்படுவோம். புதிய யுகத்தின் சவால்களுக்கு முகம் கொடுத்து எமது தேசத்தை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்ல இணைந்து செயற்படுவோம்.
அவ்வாறான சவாலான செயற்பாட்டை முன்னெடுக்க எம்முடன் இணைந்து செயற்படுமாறு உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து சிறந்த சமூகத்தை கட்டியெழுப்புவோம். இணக்கப்பாட்டுடன் கூடிய அரசாங்கத்தை உருவாக்குவோம். அனைவருக்கும் சம சந்தர்ப்பங்களை வழங்கும் புதிய நாட்டை கட்டியெழுப்புவோம்.

0 Comments