-THE PUTTALAM TIMES-
2015.08.07
அன்பின் வாக்காளர்களுக்கு,
கடந்த 26 வருடங்களாக இழந்திருக்கின்ற பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை மீட்டெடுப்பதற்காக புத்தளம் மாவட்ட அரசில் விழிப்புணர்வு மன்றம் (PPAF) கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக முயற்சித்து வருவதை தாங்கள் அறிவீர்கள்.
வாக்குகள் சிதறடிக்கப்படாமல் இருப்பதற்காக, ஒன்றுபட்டு சுயேட்சையாக செயல்பட வேண்டும் என்ற கருத்தில், சமூகத் தலைமைகளும் பள்ளிவாசல் நிருவாக சபைகளும் கட்சிகளுக்கிடையில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்த எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிவுற்றதே வரலாறு.
விகிதாசார தேர்தல் முறையில், சிறுபான்மை மக்களை அதிகமாகக் கொண்டிருக்கும் பத்தளம் தொகுதிக்கு ஒரு பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய வியூகத்தின் அடிப்படையில் அமைதியான முறையில் நாங்கள் (PPAF) தேர்தல் களத்தில் செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.
புத்தளம் தொகுதி மக்களால் மேற்கொள்ளப்படும் குறித்த அரசியல் நகர்வை தகர்ப்பதற்கும் சிதைப்பதற்கும் வன்னி அமைச்சர் ஜனநாயக விரோத சூழ்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார். தனது பணப் பலத்தைக்கொண்டு வேட்பாளர்களை விலை பேசவும் வாக்காளப் பெருமக்களுக்கு கையூட்டல்கள் அளிக்கவும் பகீரதப் பிரயத்தனம் செய்து வருகின்றார்.
வேட்புமணுத் தாக்கல் செய்வதற்கு முன்னரே அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவியை எம்மை விட்டுப் பிரித்து எடுத்துவிட்டார். அதன் பின்னரும் எஸ்.ஏ. எஹியா, லாபிர் (கொட்டராமுள்ளை), நவாஸ்தீன் (சிலாபம்) ஆகியோரையும் விலை பேசி பிரித்துவிட்டார். இந்த நடவடிக்கை புத்தளம் மாவட்டம் இதுவரை செய்யாத, காணாத புதிதாக நுழைவிக்கப்பட்ட மட்டகரமான அரசியல் நடவடிக்கையாகும். இந்த நிலை தொடர்ந்தால் எதிர்வரும் காலங்களில் புத்தளம் நிரந்தர அரசியல் அநாதையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
புத்தளம் பிரதேச மக்களின் ஜனநாயக உரிமையில் அநாவசியமாகத் தலையிடும் மாபெரும் அநியாயத்தை செய்து வருகின்றார். மக்கள் மத்தியில் விரோதத்தையும் பகையையும் காழ்ப்புணர்வுகளையும் கட்டவிழ்த்துவிட்டு தனது சுயநல அரசியலை சட்ட விரோதமாக முன்னெடுக்கின்றார்.
இதன் காரணமாக மக்கள் மத்தியல் பல அசம்பாவிதங்களும் மோதல்களும் குழப்பங்களும் ஆங்காங்கே உருவாகத் துவங்கியுள்ளது. பிரதேசவாதத்தையும் கட்சி வெறியையும் இன மோதலையும் உருவாக்கும் இந்த நாசகார முயற்சியை உலமாக்கள், புத்திஜீவிகள், பள்ளிவாசல் நிருவாகங்கள், கோவில் தர்மகர்த்தாக்கள், இளைஞர்கள், பெண்கள் அனைவரும் பகிரங்க வேண்டுகோள் விடுப்பதன் மூலம் தடுப்பதற்கு அவசர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
புத்தளம் தொகுதியையும் தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்துக்கொள்ள தன்னிடம் விலை போய் இருக்கின்ற வேட்பாளர்களை எதிர்காலத்தில் பயன்படுத்த மாட்டார் என எவருக்காவது உத்தரவாதம் அளிக்க முடியுமா?
வன்னி அமைச்சரின் செயல்பாடுகள் புத்தளம் தொகுதி மக்களின் நலனையும் ஒற்றுமையும் வெகுவாகப் பாதிக்கும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புவதுடன், இது விடயத்தில் தாங்கள் மௌனமாக இருப்பதுவும் இப் பாதகங்களுக்கு மறைமுகமாக உதவுவதாக அமையும் என்பதையும் கூறிக்கொள்கின்றோம்.
ஒட்டகம் சின்னத்தில் புத்தளம் தொகுதி சிறுபான்மை பாராளுமன்றப் பிரதிநிதியைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான 25,000 வாக்குகள் உறுதியாகிவரும் இச் சந்தர்ப்பத்தில் வன்னி அமைச்சரின் செயல்பாடுகள் புத்தளத்தின் அரசியல் எதிர்காலத்தை சூன்யமாக்கும் நடவடிக்கை என்பதை மீண்டும் நினைவுபடுத்துகின்றோம்.
புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணர்வு மன்றம்


0 Comments