-Mohamed Iflal-
பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் நாட்கள் மிகவும் சொற்பமாகவே எஞ்சியுள்ள நிலையில்; புத்தளம் சிறுபான்மை வேட்பாளர்கள் எந்தக் கட்சியில் களமிறங்குவது தொடர்பில் இன்னும் தீர்க்கமான முடிவினை எடுத்ததாக தெரியவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிறுபான்மை வேட்பாளர் மாத்திரமே தேர்தலுக்கான தயார்படுத்தல்களை மும்முரமாக எடுத்து வருகின்ற பொழுதிலும்; ஏனையவர்கள் தத்தமது கட்சிகளில் வேட்பாளர் வாய்ப்பினை பெறுவதற்கும் தமது கட்சியினை தேர்தலில் போட்டியிடச் செய்வதற்கும் தம்மால் முடிந்த கடினமான முயற்சிகளை எடுத்து வருகின்றார்கள்.
ஏற்கனவே எம்மைப் போன்ற பொதுத் தரப்பினர் ஆலோசித்ததை போல; புத்தளத்தின் அனைத்து முன்னணி சிறுபான்மை அரசியல்வாதிகளும் தத்தமது கட்சிகளை துறந்து, கட்சிகளில் தாம் வகிக்கும் பதவிகளை விட்டுக்கொடுத்து, புரிந்துணர்வு அடிப்படையில் பொதுக் கூட்டமைப்பில், பொது சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஒரு சில அரசியல் தரப்பினர் இணக்கம் தெரிவித்து வருவதாக அறிய முடிகின்றது.
கட்சிகளுக்கு மத்தியில் இணக்கப்பாடு உருவாக்க முடியாத சந்தர்ப்பம் காணப்படுகின்ற போதிலும் SLFP, SLMC, ACMC, JVP மற்றும் PPAF ஆகிய ஒவ்வோர் அரசியல் தரப்பினரிலிருந்தும் முன்னணி வேட்பாளர்கள் மூவருக்கு மேற்படாமல் இருவருக்கு குறையாமல் ஆசனப் பங்கீட்டை செய்வதன் மூலம் வேட்பனுவினை பூர்த்தி செய்யலாம்.
பாராளுமன்ற உறுப்புரிமையை பெறுவதற்கு ஆகக் கூடிய வாக்குகளின் எண்ணிக்கையாக சுமார் 40, 000 வாக்குகளையாவது ஒரே அணியில் பெற்று வெற்றிக் கொள்வதற்கு எல்லாத் தரப்பினரும் வெவ்வேறு பிரச்சாரங்களை முன்னெடுத்து எமது சமூகத்துக்கான பாராளுமன்ற ஆசனத்தை உறுதிசெய்ய முடியும்.
தேர்தலில் ஒரு ஆசனத்தையாவது வெற்றிக் கொண்டு, அதிக விருப்பு வாக்குகளை பெறுகின்ற வேட்பாளர் அல்லது அவர் சார்ந்த கட்சி மாத்திரமின்றி முழு புத்தளம் சமூகமும் குறித்த முயற்சியினால் எதிர்வரும் காலங்களில் நன்மையடையும் என்பது திண்ணம்.


0 Comments