ஹாரிபாட்டர் தொடர் நாவல்களை எழுதிய ஜே.கே. ரவுலிங்கின் அடுத்த படைப்பான ‘பெண்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் அண்ட் வேர் டு பைண்ட் தெம்’ திரைப்படம் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியிடப்பட உள்ளது.
சாகசங்கள், மாயாஜாலம் மற்றும் மந்திர தந்திரங்களும் நிறைந்த இந்த ஹாரிபாட்டர் கதை உலகெங்கிலும் உள்ள குழந்தைகளை ஈர்த்தது. எல்லோரும் ரசித்த கதை ‘வார்னர்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் திரைவடிவம் பெற்றது.
இந்த படத்திற்காக சிறந்த நடிகர் விருதைப் பெற்ற எடி ரெட்மயன் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஹாரிபாட்டர் தொடரின் முக்கிய நாயகியான ஹெர்மாயினி கேரக்டருக்கான தேடல் வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
தைரியமான மற்றும் புத்திசாலித்தனமான இந்த ஹெர்மாயினி கேரக்டருக்கு உலகெங்கும் ரசிகர்கள் உள்ளனர். இவரைப் போன்ற கதாபாத்திரமான மாடெஸ்டி கேரக்டருக்கு வார்னர் பிராஸ் நடத்த இருக்கும் தேர்வு லண்டனின் எக்ஸெல் மையத்தில் நடக்கவுள்ளது. இதில், 8 முதல் 12 வயதுள்ள சிறுமிகள் ஆர்வத்துடன் கலந்துகொள்ளவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘உலகெங்கிலுமுள்ள மந்திரவாதிகளின் கதையாக இது இருக்கும். ஹாரிபாட்டருக்கு முந்தைய கதையாகவோ, அதைத் தொடர்புபடுத்தும் விதத்திலோ இது இருக்காது. மாறாக நியூயார்க்கில் துவங்கும் இந்த கதை, மந்திரவாதிகளின் வாழ்வியல் அமைப்பு மற்றும் கட்டுப்பாடுகள் பற்றிய கதையாக அமையும்’ என ரவுலிங் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 17 ஆண்டுகளாக ஹாரிபாட்டரில் வரும் கனவு உலகத்தைவிட்டு வெளிவர விருப்பமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments