இன்று பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. வேலை செய்யும் இடங்களில் சந்திக்கும் நபரை இளம் பெண்கள் காதலிக்கிறார்கள். திருமணம் செய்து கொள்வதாக கூறும் பொய்யான வாக்குறுதியை நம்பி, தொடர் வற்புறுத்தலால் உடல் ரிதியான தொடர்புக்கும் சிலர் சம்மதித்து விடுகிறார்கள்.
புதிய காதலி கிடைத்து விட்டாலோ அல்லது வீட்டில் வேறு நல்ல இடத்தில் பெண் பார்த்து திருமண ஏற்பாடு செய்யும் போது பழைய காதலியை, காதலை கைவிட்டு விடும் சில ஆண்கள் இருக்கவே செய்கிறார்கள்.
காதல் இன்று பொழுதுபோக்காகி விட்டது. நீ ரொம்ப அழகு எனும் ஆணின் வார்த்தை பெண்ணை மகிழ்விக்கிறது. மயக்குகிறது. பல வருடங்கள் காதலித்தோம். திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி தந்ததால், சம்மதித்தேன், அவரால் இன்று கர்ப்பமாக உள்ளேன், என்னை ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு நடக்கிறது. இது போன்ற காதலித்து ஏமாற்றும் நபர்கள் பற்றிய செய்திகள் பத்திரிக்கைகளில் அடிக்கடி வருகிறது.
இருந்தும், செய்யக் கூடாத தவறை சில அப்பாவிப் பெண்கள் செய்து கொண்டேதான் இருக்கிறார்கள். தன் பெற்றோர் தனக்கு நல்ல வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பார்கள் என்று இவர்களுக்கு ஏன் தெரிவதில்லை?
நேரில் சந்திக்க வரச் சொன்னார். அவரது பேச்சில் மயங்கி காதலித்தேன். அவரிடம் என்னை இழந்துவிட்டேன். திருமணம் செய்து கொள்வதாக உறுதிமொழி கொடுத்தார். கர்ப்பம் ஆனதும் தொடர்பை துண்டித்துக் கொண்டார், பேசுவதை நிறுத்திக் கொண்டார் என புலம்பும் அபலைப் பெண்கள் ஏராளம்.
காதல் என்று நினைத்து கயவர்களின் தீய வலையில் விழுகிறார்கள் பெண்கள். போதாது என்று மிஸ்டு கால், பேஸ்புக் மூலம் காதல் பற்றிக் கொள்கிறது. இ-மெயில், சாட், மொபைல் கேமரா எல்லாம் சாட்சிகளாக உள்ளன. நகரங்களில், பேரூந்து நிலையங்களில் பூங்காக்களில் பள்ளிப்படிப்பைத் தாண்டாத சில பெண் பிள்ளைகள் தங்கள் காதலனோடு பொது இடங்களில் மறைவாக உட்கார்ந்து இருப்பதை பார்க்க நேரிடுகிறது.
இளம் பள்ளி வயதில் ஆண் நண்பர்கள் இருப்பதுதான் பெருமை என்ற தவறான தோழிகளின் தவறான போதனைகள் இவர்களை ஆட்டிவைக்கிறது.
பெண்கள் இதுபோல பிரச்சினைகளை தவிர்த்து கொள்ள மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் அனைவரிடமும் பழகவேண்டும். பார்த்தவுடன் யாரிடமும் பழகி அதிக நட்பு வளர்க்க கூடாது.


0 Comments