Subscribe Us

header ads

லேபராஸ்கோப்பி சிகிச்சையின் சிறப்புக்கள்

(டொக்டர் பாலாஜி ரவில்லா பாஸ்கரன்)
‘லேபரா’ என்றால் வயிறு. ‘லேபராஸ்கோப்பி’ என்பது வயிற்றுப் பகுதியில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளுக்காகவே அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சிகிச்சை. ஆயினும், தற்போது இன்னும் சில உள்ளுறுப்புகளைச் சரிசெய்யவும் உதவுகிறது.
பாரம்பரிய அறுவை சிகிச்சைகளின்போது, உடலின் மேற்படலங்கள் பதினைந்து சென்றிமீற்றர் அளவுக்குப் பிளக்கப்பட்டுச் செய்யப்படும். ஆனால் லேபராஸ்கோப்பிக் சிகிச்சையின்போது உடலைப் பிளக்கத் தேவையிராது. தொப்புள் பகுதியில் அல்லது பாதிக்கப்பட்ட உறுப்புப் பகுதியில் ஒரு மில்லி மீற்றர் அளவிலான சிறு துளை இடப்பட்டு, அதனூடாக ஒரு மெல்லிய குழாய் வழியே ஒரு ஒளிப்பதிவுக் கருவி உடலினுள் செலுத்தப்படும். உள்ளுறுப்புக்கள் மேல் இந்த ஒளிப்பதிவுக் கருவி உராயாமல் இருப்பதற்காக உடலினுள் ஒரு குறிப்பிட்டளவு காற்றழுத்தம் செலுத்தப்படும். அப்படிச் செலுத்தப்படுமிடத்து, தோலும் சதையும் மேற்புறமாகவும் உள்ளுறுப்புகள் கீழ்ப்புறமாகவும் விலகி வழிவிடும். இதனால் பெரிய இடைவெளி கிடைப்பதனால், உட்செலுத்தப்பட்ட ஒளிப்பதிவுக் கருவி மூலம் கிடைக்கும் காட்சிகளை வெளியே இருந்து சின்னத் திரை மூலம் தெளிவாகப் பார்க்க முடியும். அடுத்ததாக, ஏற்கனவே இடப்பட்ட துளைக்கு இருபுறங்களிலும் குறைந்தது இரண்டு முதல் நான்கு துளைகள் வரை இடப்பட்டு, அதன் வழியாக மெல்லிய உபகரணங்கள் உட்செலுத்தப்படும். இந்த உபகரணங்கள் மூலமே ஏனைய உள்ளுறுப்புக்கள் சற்று விலக்கப்பட்டு, தேவையான உறுப்பைத் தெளிவாகப் பார்த்து சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. பாரம்பரிய சிகிச்சைகளின்போது, நமது கைவிரல்களால் சில நுண்ணிய உடல் பாகங்களைத் தொட்டு சிகிச்சை அளிப்பதில் சிரமங்கள் இருந்து வந்தன. ஆனால், இந்த சிகிச்சையில் அந்த நுண்ணிய உறுப்புகளையும் துல்லியமாகச் சரிசெய்யலாம்.
லேபராஸ்கோப்பிக் சிகிச்சைகளுக்கு இன்னும் சில சிறப்புக்கள் இருக்கின்றன. பாரம்பரிய அறுவை சிகிச்சைகளின்போது சிகிச்சைகள் முடித்த பின், தையல் போடப்படும். அதன்போது ஒரு முடிச்சேனும் சற்றுத் தளர்வாக இடப்பட்டால், செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக்கே அர்த்தமற்றுப் போய்விடும். லேபராஸ்கோப்பிக்கில் வெட்டப்படும் உள்ளுறுப்புப் பகுதிகள் தேவை முடிந்ததும் உடனுக்குடன் பொருத்தப்பட்டு விடுவதால் இந்த அபாயம் தவிர்க்கப்படுகிறது. மயக்க மருந்து கொடுக்கும் தேவையும் மிகையாகக் குறைந்துவிடுகிறது.
பாரம்பரிய சிகிச்சையின் பின், நோயாளிகள் இருமும்போதும், தும்மும்போதும் வலி மிகையாக இருக்கும். ஆனால், உண்மையில் மனிதனின் தோல் மற்றும் தசைநார்களே வலியை மிதமாக உணரக்கூடியவை. லேபராஸ்கோப்பிக் சிகிச்சையின்போது சுமார் மூன்று சின்னஞ் சிறு துளைகள் மட்டுமே இடப்படுவதால், அந்த மூன்று இடங்களில் மட்டுமே வலி உணரப்படும். சிகிச்சைகள் வேகமாக முடியும் அதேநேரம், சிகிச்சை முடிந்த பின் மருத்துவமனையில் அதிக நாட்கள் தங்க வேண்டிய தேவையும் நோயாளிகளுக்கு இருக்காது.  
பெரும்பாலும் பெண்கள் தொடர்பான நோய்களுக்கே லேபராஸ்கோப்பி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவர்களுடைய கருப்பை, கருப்பைக் குழாய் போன்ற பகுதிகளில் பல வகையான கட்டிகள் தோன்றக்கூடும். அவ்வகையான கட்டிகளை அகற்றுவதற்கு மிகச் சிறந்தது லேபராஸ்கோப்பிக்தான். ‘எக்டோபிக்’ எனப்படும் கருக்குழாயில் கரு தங்கி உடைந்து போதல், தும்மும்போதும் இருமும்போதும் சிறுநீர் வெளியேறுதல் மற்றும் கருப்பை கீழிறங்குதல்  போன்ற பிரச்சினைகளுக்கும் லேபராஸ்கோப்பிக் ஒரு வரப்பிரசாதம். கருப்பை கீழே இறங்கியவர்களுக்கு அதை அகற்றாமல், மறுபடி மேலேற்றுவதையும் லேபராஸ்கோப்பிக் மூலம் செய்யமுடியும்.
இவை மட்டுமன்றி, மேலே குறிப்பிடப்பட்ட உறுப்புகளில் தோன்றக்கூடிய புற்றுநோய்களுக்கு ‘ரேடியோதெரபி’ என்கிற கதிர்வீச்சுச் சிகிச்சையை செய்யும் பட்சத்தில், அவர்களுக்குக் குழந்தைப்பேறு நிரந்தரமாக இல்லாமல் போதல் உட்பட பல பிரச்சினைகள் உருவாகும். இவ்வாறானவர்களுக்கும் லேபராஸ்கோப்பிக் ஒரு சிறந்த தீர்வாக அமைந்திருக்கிறது.
ஓரிரு பெண்களுக்கு, பிறப்புறுப்பு பெரிதாகவோ அல்லது தளர்ந்தோ போயிருக்கும். இவர்கள் ‘வெஜினோபிளாஸ்ரி’ எனும் ஒரு வகை பிளாஸ்டிக் சிகிச்சையை செய்துகொள்வதன் மூலம் மீண்டும் அவ்வுறுப்பு இறுக்கப்படும். இவை போன்ற உறுப்புகள் பெண்களுக்கென்றே தனித்துவமானவை என்பதனாலேயே, ஒப்பீட்டு ரீதியாக ஆண்களை விடப் பெண்களுக்கே இந்த சிகிச்சை பெருமளவில் பயன்படுத் தப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. தற்போது, லேபராஸ்கோப்பிக் ஒளிப்பதிவுக் கருவியின் முனையிலேயே ‘அல்ட்ரா சவுண்ட்’ வசதியும் இணைக்கப்பட்டுள்ளதால், பெண்களிடம் மட்டுமே தோன்றக்கூடிய பெரும்பாலான நோய்களைத் தீர்க்கக்கூடிய வசதி அதிகரித்துள்ளது.
இவை தவிர, முழங்கால் மூட்டுகளில் செய்யப்படும் ‘ஆர்த்ரோஸ்கோப்பி’ சிகிச்சையிலும் ஏனைய சில மூட்டு அறுவை சிகிச்சைகளிலும் லேபராஸ் கோப்பிக் பயன்படுத்தப்படுகிறது. இது தவிர, மூக்கில் செய்யப்படும் குறிப்பிட்ட சில சிகிச்சைகள் மற்றும் தைரொய்ட் பிரச்சினைகளுக்கும் லேபராஸ்கோப்பிக் துணை புரிகிறது. இனிவரும் காலங்களில், தொண்ணூறு சதவீதமான சிகிச்சைகளுக்கும் லேபராஸ்கோப்பிக் உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன். 
தகவல்: சென்னை அலுவலகம்

Post a Comment

0 Comments