பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள 9 பள்ளிக்கூடங்களில் இனிப்பு சாப்பிட்ட சுமார் 1,350 குழந்தைகள் திடீரென நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸில் உள்ள Surigao del Sur என்ற மாகாணத்தை சேர்ந்த 9 நகரங்களில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒரு தனியார் வாகனம் வந்துள்ளது.
வாகனத்தில் இருந்து 9 ஆண்கள் மற்றும் பெண்கள், பள்ளிகளிலிருந்த குழந்தைகளுக்கு இனிப்பு திண்பண்டங்களை விற்பனை செய்துள்ளனர்.
இதே போல், 9 நகரங்களிலும் உள்ள பள்ளிகளுக்கு சென்று அவர்கள் இனிப்புகளை விற்பனை செய்துள்ளனர்.
இனிப்புகளை சாப்பிட்ட பள்ளி குழந்தைகளுக்கு உடனடியாக வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி உள்ளிட்ட நோய்கள் ஏற்பட அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சுமார் 1,350 குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் திடீர் நோய் ஏற்பட்டது பதற்றத்தை உண்டாக்க பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக இன்று செய்தி வெளியிட்டுள்ள அந்த மாகாண ஆளுனரான Johnny Pimentel, ஒரே நேரத்தில் 9 பள்ளிகளுக்கு சென்று இனிப்புகளை விற்பனை செய்த அத்தனை நபர்களையும் பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு விற்பனை செய்யப்பட்ட இனிப்புகளின் விற்பனை காலம் முடிந்துவிட்டதா, அல்லது இனிப்புகளில் வேண்டுமென்றே விஷம் கலக்கப்பட்டதா என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய பொலிசார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1,350 குழந்தைகளில் 250 குழந்தைகள் வெள்ளிக்கிழமை மாலை வரை மருத்துவமனையிலேயே தங்கி இருந்து சிகிச்சை மேற்கொள்ளும் அளவிற்கு அவர்களின் உடல்நிலை மோசம் அடைந்ததாக தெரிவித்துள்ளனர்.
இனிப்புகளை விற்பனை செய்தவர்கள் அவர்களின் சொந்த ஊரை விட்டு சுமார் 300 கி.மீ தொலைவு வரை பயணம் செய்து வந்து இனிப்புகளை விற்பனை செய்ததுள்ளனர்.
மேலும், இனிப்புகளை பள்ளிக்குழந்தைகளை மட்டும் குறிவைத்து விற்பனை செய்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துவதால், விற்பனையாளர்களிடம் தீவிரமான விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


0 Comments