தண்ணீர் பாம்பைப் போல் தோற்றமளிக்கும் காட்டுப்பாம்பு ஒன்று அகோர பசியில் ஒரு ஓணானை முழுமையாக விழுங்கும் திகைக்க வைக்கும் காட்சிகளை புகைப்படக் கலைஞர் ஒருவர் அற்புதமாக படம்பிடித்துள்ளார்.
இந்தோனேஷியாவின் தெற்கு சுமத்ரா தீவில் உள்ள புகிட் பரிசன் தேசிய பூங்காவிற்குள், தனது சக நண்பர்களுடன் இரவு நேர நடைபயணத்தை மேற்கொண்ட காட்டுயிர் புகைப்படக் கலைஞரான நிகோலஸ் செகலெர்பா(32) என்பவர் இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார்.
இந்த காட்சியை நேரில் பார்த்த அவர் தனது அனுபவம் குறித்து கூறுகையில், “ நான் அந்த ஓணானை பார்த்த முதல் நொடியில் 1.8 மீட்டர் நீளமுள்ள அந்த காட்டுப்பாம்பும், 25 சென்டி மீட்டர் நீளமுள்ள அந்த கெமீலியன் காட்டு ஓணானும், ஒரு மரக்கிளையின் நுனியில் நேருக்கு நேராக நின்று கொண்டிருந்தது. அப்போது, தூங்கிக் கொண்டிருந்த ஓணான், பாம்பு மிகவும் நெருக்கத்தில் வந்த போதுதான் கண்விழித்தது. உடனே வெடுக்கென்று ஓணானின் தலையை கவ்விப் பிடித்த பாம்பு, கொஞ்சம் கொஞ்சமாக அதை விழுங்க ஆரம்பித்தது. இரண்டு மூன்று நிமிடங்கள் கழித்து, ஓணான் தனது உடலை ஆவேசமாக முறுக்கியது. அப்போதே, அது இறந்து விட்டது என்றுதான் நாங்கள் நினைத்தோம். ஆனால் 20 நிமிடங்கள் ஆன பின்பு, அது மீண்டும் தனது உடலை அசைத்தது. ஒரு வேளை, அது அனிச்சை செயலாகக் கூட இருக்கலாம். பாம்பு அந்த ஓணானை முழுமையாக விழுங்குவதற்கு சரியாக 29 நிமிடங்கள் ஆனது. ஒரு தொழில்முறை காட்டுயிர் புகைப்படக் கலைஞனாக என் அனுபவத்தில், ஊனுண்ணிகள்தான் இரையை இப்படிச் சாப்பிடும்.
அதுதான் இயற்கையின் விதி. ஆனால், ஒரு பாம்பு தன் தாடையை தன்னால் முடிந்த அளவுக்கு விரித்து, ஒரு இரையை சாப்பிடுவது பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தது.” என்றார்.





0 Comments