மக்கள் வென்றெடுத்த ஜனநாயகத்தை மீண்டும் சீர்குலைக்க மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடமளிக்க முடியாது. ஜனாதிபதி தேர்தலில் தோற்கடித்ததைப் போல் பொதுத் தேர்தலிலும் நாம் தோற்கடிப்போம். மஹிந்த ராஜபக் ஷ உட்பட நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சக்திகள் மாத்திரமே எங்களுக்கு எதிரிகளாவர். வேறு எதிரிகள் கிடையாது என களுத்துறை மாவட்ட ஐ.தே.கட்சி வேட்பாளர் ராஜித்த சேனரத்ன கூறினார்.
பேருவளை ஐக்கிய தேசிய முன்னணியின் காரியாலயத்தை திறந்து வைத்து பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பெருமளவிலான சிங்கள முஸ்லிம் மக்கள் பங்கு பற்றிய இக்கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது,
ஆகஸ்ட் 18 ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதம மந்திரியாக ரணில் விக்ரமசிங்கவும் இருப்பார். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அவருடன் இணைந்து நாட்டைச் சீரழித்து வருகின்ற சக்திகள் எமக்குள்ள எதிரிகள். இளைஞனாக இருந்த காலம்தொட்டு நாட்டிற்காக பாடுபட்டுள்ளேன். நாம் எந்த நாளும் வாழ்பவர்கள் அல்லர். இப்போது நாட்டை உருவாக்க எங்களுக்கு புதிதாக சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
நாம் மரணிப்பதற்கு முன் மலேசியா, சிங்கப்பூர், கொரியா போன்ற நாடுகளைப் போல நமது நாட்டையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் முக்கிய குறிக்கோளும் இதுவாகும். அதன் காரணமாகவே ஜனாதிபதியுடன் இணைந்து செயல்படுகின்றோம்.

0 Comments