Subscribe Us

header ads

பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு அழற்சி நோய்

டொக்டர் பிரிஸில்லா குணசேகர், D.G.O., M.D. (OG)., DNB (OG)

கர்ப்பப்பை, கருக்குழாய், கருமுட்டைப்பை ஆகியவற்றில் ஏற்படும் அழற்சியை இடுப்பு அழற்சி நோய் (PID-Pelvic Inflammatory Disease) என்போம். வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை கிருமிகளால் இது ஏற்படுகிறது.
ஒரு கிருமியோ அல்லது சில கிருமிகளோ சேர்ந்து இதை ஏற்படுத்தலாம். குறிப்பாக, குழந்தைப் பேற்றின்போது அல்லது கருச்சிதைவின்போது, இடுப்பு அழற்சி நோய் வர வாய்ப்புகள் அதிகம் உண்டு. அழற்சியால் புண் ஏற்பட்டு ஆறும்போது ஏற்படும் சுருக்கத்தால் உறுப்புகள் பாதிக்கப்படவும் கூடும்.
கருக்குழாயில் நோய்த் தொற்று ஏற்பட்டால் அழற்சி வந்தால், அக்குழாயின் உட்பகுதி ஒன்றோடு ஒன்று ஒட்டி கருக்குழாயில் அடைப்பு ஏற்படும். இதனால் துவாரம் சிறிதாகி விந்துக்களின் போக்குவரத்து தடைப்பட்டு குழந்தைப் பேறின்மை ஏற்படவும் வாய்ப்புள்ளது. முக்கியமாக கொனேரியா (Gonorrhea) எனும் பால்வினை நோயின் மூலம் 40 முதல் 60 சதவீதம் பெண்களுக்கு இது வருகிறது.
Chlamydia Trachomatis எனும் நுண்கிருமியால் கருக்குழாய் பாதிக்கப்பட்டு மலட்டுத் தன்மை ஏற்படுகிறது. சில சமயம் 10 சதவீதம் பெண்களிடம் இந்த நோய் தாக்கியிருப்பது தெரியாமலே இருக்கும்.
PID நோய் தாக்கினாலும் சில சமயம் அறிகுறிகள் இல்லாமல் இருக்கலாம். சில சமயம் அதிகமான அறிகுறிகளும் தென்படலாம். காய்ச்சல், அடி வயிற்று வலி, வெள்ளைப்படுதல், மாதவிடாயில் ஒழுங்கற்ற தன்மை, உடலுறவின்போது வலி என்பனவற்றை இதன் அறிகுறிகளாகக் கொள்ளலாம்.
வெள்ளைப்படுதலைப் பரிசோதிக்கும்போது, சில சமயம் சில கிருமிகளைக் கண்டறியலாம். ஸ்கேன் செய்து பார்த்தால், இடுப்பு அழற்சி நோய் முற்றிய நிலையில் கருக்குழாயில் தண்ணீர் தேங்கி சீழ் கோர்த்த நிலையில் Tubo Ovarian Complex / Pyosaiphinx போன்றவற்றைப் பார்க்கலாம்.
இடுப்பு அழற்சி நோய் அதிகமாகப் பாதிக்கும்போது வேறு சில நோய்களைப் போல அறிகுறிகள் தோன்றலாம். உதாரணமாக, குடல்வால் அழற்சி, கருமுட்டைப்பையில் உள்ள கட்டியில் இரத்தக் கசிவு, இடம் மாறிய கர்ப்பம் என்பன தோன்றலாம். இவ்வாறான அறிகுறிகள், பல நோய்களுக்கானவை போலத் தோன்றும்போது, இக்குழப்பத்தில் இருந்து மீண்டு, தெளிவாகக் கண்டறிய லேப்ராஸ்கோப்பி மிகவும் உதவுகிறது.
இந்நோய் பாதிப்பு மேலோட்டமானதாக இருந்தால், நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியால் சிலசமயங்களில் தானாகவே சரியாகிவிடும். ஆனால் பாதிப்பு அதிகமாக இருந்தால், கர்ப்பப்பையையும், கருக்குழாயையும் பாதிக்க நேரிடலாம்.
அதனால் ஆரம்ப நிலையில் சிகிச்சை அளிப்பது அவசியம். பாதிப்பின் தன்மையைப் பொறுத்து மருந்து அல்லது மருந்துடன் ஊசி தேவைப்படும். ஆரம்ப நிலையில் மருந்து அளிக்கப்படும். அடுத்த கட்டமாக மருத்துவமனையில் அனுமதித்து ஊசி மூலம் மருந்து ஏற்றப்படும். இதுமட்டுமன்றி, நோய்ப்பாதிப்புக்குள்ளான பெண்ணின் கணவருக்கும் சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும்.
கருக்குழாயின் அடைப்பின் காரணமாக மலட்டுத்தன்மை ஏற்பட்டால், அதைச் சரிசெய்ய கருக்குழாயில் அறுவை சிகிச்சை (Tuboplasty) செய்யவேண்டியிருக்கும். கருக்குழாயில் நிறைய அடைப்புகள் இருந்தால், குழந்தைப் பேற்றுக்காக, செயன்முறைக் கருத்தரிப்பு பரிந்துரைக்கப்படும்.
கர்ப்பப்பை, கருக்குழாயில் நோய்த்தொற்று இருக்கும்போது சிக்கல்கள் அதிகமாவதற்கு வாய்ப்புகள் உண்டு. முக்கியமாக, பால்வினை நோயாளிகள், ஒழுங்கற்ற பாலுறவு (பலருடனான உறவு) குழந்தைப்பேற்றைத் தடுக்கும் கொப்பர் ‘ரி’ அணிந்திருப்பவர்களுக்கும் இந்நோய் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
நோயின் பாதிப்பைப் பொறுத்து பல சிக்கல்கள் ஏற்படலாம். அவற்றுள் முக்கியமானது மலட்டுத்தன்மை. இதையொட்டி இடம் மாறும் கர்ப்பம், கருக்குழாய், கருமுட்டைப்பை என்பனவற்றில் விபரீதமான பிரச்சினைகள் ஏற்படலாம்.
இதைத் தடுக்க நினைப்பவர்கள், மேற்படி அறிகுறிகள் தோன்றுமிடத்து உரிய பரிசோதனைகளைச் செய்துகொள்வதும், பாலுறவு ஒழுக்கத்தையும் கடைப்பிடிப்பது அவசியம்.

Post a Comment

0 Comments