“வாக்கினிலே யினிமை வேண்டும்…
நினைவு நல்லது வேண்டும்…
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்…
கனவு மெய்ப்பட வேண்டும்”…
நினைவு நல்லது வேண்டும்…
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்…
கனவு மெய்ப்பட வேண்டும்”…
புத்தளம் பெரிய பள்ளி வரலாற்றிலே இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமான “புத்தளத்துக்கான எம்.பி.” என்னும் கனவை நனவாக்கும் வண்ணம் நடந்தேறிய அனைத்து கட்சிகளினதும், பொது நலன் விரும்பிகளினதும் கருத்தரங்கமானது ஒரு மறக்க முடியாத அத்தியாயம் என்றே கூறத் தோன்றுகின்றது.
தாய்ப் பள்ளி என்னும் மகத்துவத்தை கொண்டிலங்கும் புத்தளம் பெரிய பள்ளியின் அழைப்பை மரியாதை பொங்க ஏற்ற முக்கிய நான்கு கட்சிகளினதும் வேட்பாளர்களான கே.ஏ.பி,நஸ்மி,நவவி,அலிசப்ரி ஆகியோரும், அவர்களது பிரதிநிதிகளான எம்.எஸ்.எம்.ரபீக்,ஆசாத் ஆசிரியர்,அப்துல் ஹாதி,எஸ்.ஆர்.எம்.ஹிநாயதுல்லாஹ் ஆகியோரும்,ஜே.வீ.பீ.கட்சி சார்பாக சினான் அவர்களும் இந்த கருத்தரங்குக்கான அழைப்பை பெரிய பள்ளியூடாக விடுத்த உலமா-ஆசிரியர் சங்க பிரதிநிதிகளான மௌலவி சௌக்கி, நிஹ்ரீர் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பொது அணி என்னும் நிலைப்பாட்டை ஆரம்பத்திலிருந்தே எடுத்து வந்ததற்காக அழைக்கப்பட்ட PPAF குழுவினர் மட்டும் சமூகமளிக்கவில்லை…PPAF அணி சார்பாக பொது தேர்தலுக்கான வேட்பாளர்கள் தெரிவில் மும்முரமாக இருப்பதனால் 2 அல்லது 3 தினங்கள் கழித்து பெரிய பள்ளி நிர்வாகத்தை தாம் சந்திக்க தயார் என்று அவர்கள் கடிதம் அனுப்பியிருந்தனர்…
ஆரம்ப உரை நிகழ்த்திய கே.ஏ.பாயிஸ் பொது அணி என்னும் ஓரணி மட்டுமே வெற்றிக்கான கதவைத் திறக்கும் ஒரே வழி என்னும் கருத்துப்பட புள்ளி விபரங்களோடு தெரிவித்தார்…தான் பிறந்த மண்ணுக்காக தன் அமைப்பாளர் பதவி, கட்சி இரண்டையும் விட்டுக் கொடுத்து பொது அணியில் களமிறங்க முன் வந்ததாக சபையில் பிரகடனப் படுத்தினார்…

அவரின் இந்த கருத்துக்களை ACMC வேட்பாளர் அலிசப்ரி மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டதுடன், தானும் கே.ஏ.பி. வழியில் அமைப்பாளர், கட்சி என்பவற்றை துறந்துவிட்டு பொது அணியில் இணைய தயார் என்று சூளுரைத்தார்…
கட்சியே தன்னை அதன் சார்பான வேட்பாளராக தெரிவு செய்துள்ளபடியால் பொது அணியில் இணைவது சாத்தியமற்றது என்று அறிவித்த ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் நஸ்மி , என்றாலும் கட்சி மேலிடம் அனுமதித்தால் தானும் தயார் என்று இறுதியில் கூறினார்…அதற்காக இரு தினங்கள் அவகாசமும் கோரினார்…

எம்.பி. ஒருவரை பெற்றுக் கொள்வதற்கான ஒரே வழி முஸ்லிம் காங்கிரசில் போட்டியிடுவதுதான் என்று பலமாக வாதாடிய மு.கா. வேட்பாளர் நவவி அவர்கள் இறுதியில் இரு பெரும் கட்சிகளும் பொது அணியில் இணைந்தால் தாமும் தயார் என்று கூறினார்…
ஆக மொத்தத்தில் வெளிப்படையான நிலைப்பாட்டில் இரு கட்சிகளும், தளம்பலான நிலைப்பாட்டோடு இரு கட்சிகளும் தம் கருத்துக்களை வெளிப்படுத்திய நிலையில் கூட்டம் முடிவுற்றது…

இன்ஷா அல்லாஹ் நாளையிரவு பெரிய பள்ளி நிர்வாக சபையின் 21 உறுப்பினர்களின் பிரசன்னத்தோடு ஒரு கூட்டத்தை நடத்தி இன்று நடந்த கருத்தரங்கின் வாத பிரதிவாதங்களை அவர்களுக்கு வெளிப்படுத்தி பொது அணி சார்பான தனது நிலைப்பாடு பற்றி அறியத் தருவதாக பிரதம தர்ம கர்த்தா அல்ஹாஜ் ஜனாப் அவர்கள் கூட்ட முடிவில் கூறினார்…
யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், புத்தளம் மண்ணின் நலனுக்காக பொது அணிக்கு புத்தளம் பெரிய பள்ளி அனுசரணை வழங்க வேண்டும் என்று உலமா-ஆசிரியர் சங்க பிரதிநிதியான நிஹ்ரீர் வேண்டிக் கொண்டபோது, உலமா சபையின் அங்கீகாரத்தோடு தாம் ஆதரவளிப்போம் என்று பிரதம தர்ம கர்த்தா கூறினார்…
– I.N.M. நிஹ்ரீர்
-Puttalam Today-
0 Comments