நவ்பல் ஏ சமட்
உலகில் ஏற்பட்ட
இலத்திரனியல் புரட்சி காரணாமாக உருவான ஒலி மற்றும் ஒளி சாதனங்களின்
பெருக்கத்தினால் இன்று உலகம் பாரிய மாற்றம் கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஒளியானது
(வெளிச்சம்) பலவகைப்பட்டது. அவற்றிலிருந்து நாம் வெளிச்சத்தை பெற்றுக்கொள்கிறோம்.
வீட்டுப்பாவனைக்கு, தொழிற்சாலைகளுக்கு, வீதிப்போக்குவரத்துக்கு என பலவகைப்பட்ட முறையில் நாம் ஒளியை
பயன்படுத்துகிறோம். எனினும் இங்கு நாம் ஆராய்வது குடியிருப்பு இடங்கள் மற்றும்
பொதுத் தளங்களில் பயன்படுத்தப்படும் ஒளியையே ஆகும்.
ஆரம்பத்தில் நாம்
அனைவரும் மின்குமிழ் ஊடாகத்தான் ஒளியை / வெளிச்சத்தை பெற்றுக்கொண்டோம். அது
கூடுதலான மின்சார பாவனைக்கு இட்டுச்சென்றது. தற்காலத்தில் மின்குமிழ் பாவிக்கும்
நாடுகள் உண்டு என்ற போதிலும் உலகின் அதிகளவான நாடுகள் செலவினம் காரணாமாக ஒளி
சேமிப்பு மின்பாவனை சாதனங்களை அதிகரித்த வண்ணமுள்ளன. மின் குமிழ்களுக்கு மாற்றாக நீண்டகாலமாக
ரியுப் லைட் களே பயன்படுத்தப்பட்டு வந்தன. அவையே நமது வீடுகளையும்
பள்ளிவாசல்களையும் அலங்கரித்தன.
அதன்பிறகு CFL எனப்படும் அளவில்
சிறிதாக்கப்பட்ட அந்த மின்குமிழ்கள் பாவனைக்கு வந்தன. அவை துரிதமாக அணைத்து
தரப்பினரையும் கவர்ந்துகொண்டன. இலங்கையில் பொதுவாக கடந்த இரு தசாப்த காலமாக
அதிகரித்து வந்த இந்த வெளிச்ச சாதனங்களின் பாவனை குறிப்பாக நமது சமூகத்தின்
மத்தியிலே வீடுகளிலும் பள்ளிவாசல்களிலும் அதிகமாக பயன்படுத்தும் நிலை
காணப்படுகிறது.
அதில் முக்கியமாக
நாம் அவதானிக்க வேண்டிய விடையம் யாதெனில் நமது சமூகத்தில், சில வசதிபடைத்தவர்களுக்கு
மற்றும் நிர்வாகிகளுக்கு ஒரு பள்ளிவாசல்
அதிகபட்ச ஒளியால் அலங்கரிக்கப்பதன் மூலம் தமது கபுரு அறைகள் ஒளியூட்டப்படும் என்ற
ஒரு கருத்து காணப்படுவதனால் அவ்வாறு பள்ளிவாசல்களை அலங்கரிப்பதற்காகவும்,
ஒளியூட்டுவதற்காகவும் 120w, 180w, 200w போன்ற அதிக ஒளித்தன்மை சக்திகொண்ட CFL மின்குமில்களை வாங்கி
பொருத்தி வருவதைக் காணலாம்.
ஆனால் அவை கொண்டிருக்கவேண்டிய
குறிப்பிட்ட உயரம், ஒளி அளவு என்பவற்றை பொருட்படுத்தாது கவனியாது தாராளமாக
சக்திவாய்ந்த மின்ககுமிழ்களை பயன்படுத்தி வருகின்றனர். இதேபோன்று நகைக்கடைகளிலும்,
ஹோட்டல்களிலும், இவ்வாறு அதிக ஒளிகொண்ட மின்ககுமிழ்களை பாவிப்பதனை அவதானிக்க
முடியும். இவ்வாறு அதிக ஒளிகொண்ட மின்குமிழ்களை பாவனை செய்ய விரும்புவோர் அவற்றால் மனித உடலுக்கு ஏற்படும் தாக்கங்கள்
பாதிப்புக்கள் குறித்து ஒரு சொட்டும் அறியாமல் அறிவீனமாக நடந்துகொள்கின்றனர்.
இந்த மின்குமிழ்
ஒளிப்பாவனை குறித்து பல்வேறு ஆய்வுகள் உலகளவில் மேற்கொள்ளப்பட்டு வெளிவந்துள்ளன. குறிப்பாக,
ஜப்பான், மற்றும் மேற்கு நாடுகள் போன்றவற்றில் ஒளிப்பாவனை சாதனங்கள் தொடர்பாக
மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அனைத்தும் மனிதனுக்கு தீங்கு செய்பவை ஆகவே உள்ளன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதன்படி,
இவ்வாறான மின் குமிழ்களை பாவிப்பதால் பாரிய அளவில் Ultraviolet கதிர்வீச்சு போன்ற பலவகைப்பட்ட
கதிர்வீச்சுக்கள் இதனூடாக வெளிவருகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதன் தாக்கம்
மனித சருமத்தில் பல்வேறு தீங்குகளை ஏற்படுத்துபவையாக உள்ளதோடு தோல் புற்றுநோய் உட்பட
பல்வேறு நோய்கள் வரமுடியும் என ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் இந்த செயற்கை ஒளியூடாக
CFL(CFL) மனிதர்களுக்கு மறதியும், மூளைக் கோளாறுகளையும்
ஏற்படுத்தவல்லன என்று கூறுகின்றன. இவை வெளியிடும் ஒளி அதிர்வு காரணாமாக
பலவகைப்பட்ட கண்பார்வை தொடர்பான நோய்களும் உண்டாகின்றன என்பதை ஒளிக்கதிர்களை
வைத்து மேற்கொண்ட பரீட்சைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக LED என்ற மின்குமிழின்
ஒளிக்கதிர் வீச்சு 40 CPM units களாகவும் CFL மின்குமில்களின்
கதிர்வீச்சு 550 மேற்பட்ட CPM units களாகவும் அங்கு
காட்டப்படுகின்றது. மேலும் இன்னுமொரு ஆய்வில் LED குமிழ் ஊடாக 230hz ஆகவும் CFL ஊடாக 26740 hz அளவிலான அதிகபட்ச
இலத்திரனியல் காந்தக் கதிர்வீச்சு இருப்பதனையும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்னும்
ஒரு ஆய்வில் தொடர்ச்சியாக இந்த மின் ஒளிக்கு கீழால் ஒரு கர்ப்பிணி பெண்மணியை
வைத்து பரிசோதித்ததில் அவரது அவரது Blood Sugar மட்டம் அதிகரிப்பதனையும்
அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தவிர
இன்னுமொரு பாரிய தாக்கம் யாதெனில் இந்த மின்குமிழ்கள் கீழே விழுந்து உடையுமானால்
காணப்படும் ஒரு வகை நச்சுத்தன்மை கொண்ட வாயு வெளியேறுகின்றது. அவற்றை சுவாசிக்க
நேர்ந்தால் நுரையீரல் புற்று நோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதேபோன்று உடைந்த
துண்டுகளில் காணப்படும் இரசம் உடலில் சேருமானால் அதுவும் பாரிய விளைவுகளை
ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு உண்டு.
இவ்வாறான பாரிய
விளைவுகளை உண்டுபண்ணுகின்ற இந்த மின்குமில்களை பாவிப்பதனால் மனிதனுக்கும்
சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சிலர் கவலை கொள்வது அறியத்தக்கது.
இதனால் குறைந்த தாக்கம் கொண்ட LED மின்குமிழ்களை பாவிக்கும்படி கருத்துக் கூறுகின்றனர்.
மக்கள் அதிகமாக
ஒன்றுகூடுகின்ற வியாபாரத்தலங்களிலும், பள்ளிவாசல்களிலும், கடைகளிலும் இத்தகைய
மின்குமில்களை பாவிப்பதானது ஒரு சமூகத்தின் அழிவுக்கே இட்டுச்செல்கிறது. இவ்வாறான
மின்விளக்குகளை பாவிப்பதானது ஒருவகையில் சூழல் மாசுபட்டு ஒரு சமூகம்
அழிந்துகொண்டிருப்பதனையும் அவதானிக்க முடியும்.
இவற்றுக்கான
பரிகாரமாக
1-
ஒன்றில் சக்தி குறைந்த 60w, 80w குறைந்த CFL வகைகளுக்கு மாற்றுவதோ இல்லாவிடின் LED போன்ற சற்று விலை
உயர்ந்த மின்குமிழ் பாவனைக்கு மாற்றப்படுவதோ தேவைப்படுகிறது.
2-
இல்லாவிடில் இதற்கான ஒளி அளவு மேற்கொள்ளும் கருவி உண்டு. அதனைப் பாவித்து மின்குமிழ் பொருத்தப்பட்டிருக்கும் உயரம் அதன் அகலம் அவற்றுக்கேற்ப பொருத்தமான அளவிலான மின்குமிழ் பாவனை மூலம் ஒளிச் சூழல் மாசுபாடுவதை தவிர்க்க முடியும்.
அதுவன்றி, ஒரு
சில செல்வந்தர்களின் ஆடம்பரத்திற்காக மேற்கொள்ளப்படும் இந்த ஒளியூட்டல் செயற்பாடுகளின்
காரணமாக பள்ளிவாசல் சூழல் மாசடைவதோடு ஒரு சமூகத்தை பலவகைப்பட்ட நோய்களுக்கு
தள்ளுகின்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே ஒவ்வொரு
பள்ளிவாசல் நிர்வாக சபையும் இது தொடர்பில் கவனம் செலுத்தி உரியவர்களின்
ஆலோசனைகளைப் பெற்று இப்பிரச்சினையை நிவர்த்திக்க முன்வரவேண்டும். குறைந்த பட்சம்
நோன்பு இருபத்தி ஏழிலாவது ஒரு மாற்றம் வருமாக இருப்பின் இத்தகைய ஒளித்தாக்கங்களில்
இருந்து நமது சமூகத்தை பாதுகாக்கலாம்.
அடுத்ததாக ஒலி (சத்தம்)
குறித்து,,,,
இலங்கையில்
பிரதானமாக ஒலித் துறையிலும் பாரிய அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது. அதிலும் இன்று எல்லா
பள்ளிவாசல்களிலும் ஒலிபெருக்கிகள் பாவிக்கப்படுவதோடு இதன்மூலம் அதான் (தொழுகை
அழைப்பு) அதிகபட்ச சனத்திற்கு கேட்க வைக்கும் ஒரு முயற்சியும் காணப்படுகிறது. இந்த
பாரிய அழைப்பு எவ்வளவு பயனளிக்குமென்றால், பெரிய பள்ளிவாசல்களில் முன் ஓர் இரண்டு
சப்புகளை/வரிகளை நிரப்பும் அளவே காணப்படுகிறது. எனினும் தொடர்ச்சியாக இந்த நிகழ்வு
நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
அதிலும் ஒவ்வொரு
வக்துகளுக்கு மாத்திரமன்றி விசேடமாக நோன்பு காலங்களிலும் தராவிஹ், பயான்
நிகழ்சிகளும் ஒலிபெருக்கிகளைக் கொண்டே இடம்பெறுகிறது. இங்கும் முஸ்லிம்
சமூகத்திற்கு பயானை கேட்க வைக்க வேண்டும் என்ற அபிலாசை அநேக பள்ளிவாசல்களில்
காணப்படுகிறது. இதனால் பாங்குக்கு அப்பால் பலதரப்பட்ட ஓதல்களும்
ஒலிபெருக்கியூடாகவே வெளிப்படுத்தப்படுகின்றன.
குறிப்பாக பள்ளிவாசல் உள்ளேயும் மனித காதுகள் கேட்கக்கூடிய அளவை மிஞ்சிய
சத்தத்தோடு குத்பா பிரசங்கம் நடைமுறையில் இருப்பது விசேடமாக கொழும்பு நகரில் அனுபவ
ரீதியாக அறியப்பட்டது. இதைத்தவிர முஸ்லிம்கள் செறிந்து வாழும் இடங்களில்
பள்ளிவாசல்களில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான நடவடிக்கை காரணமாக பள்ளிவாசல் அயலவ
வீடுகளில் இருக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால், மனிதனின்
செவிக்கு கேட்கக் கூடிய அளவை மிஞ்சிய சத்தம் மனிதனின் காது மற்றும் மூளை,
நுரையீரல் போன்ற இடங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இதனால்
70 DB
(decibel) க்கு மிஞ்சிய ஒலி சத்தம் தொடர்ச்சியாக ஒரு மனிதனின் செவிகளில் விழும்போது உடல்
அதிரும் போது மனிதன் பாரிய தாக்கத்திற்கு உட்படுவதோடு செவிக்கூறுகளை அழிக்கும்
சாத்தியம் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தவிர பலதரப்பட்ட காதிலே ஏற்படும்
கோளாறுகளுக்கு இந்த அதிகபட்ச ஒலிப்பயன்பாடே என்று ஆய்வுகள் கூறுகின்றன.
பள்ளிவாசல்களில் ஓர்
இரு வயது முதிர்ந்தவர்களுக்கு கேட்க வைக்கும் ஒரு முயற்சியாக இவ்வாறு சப்தத்தை
அதிகரிப்பதனது அப்பாவி மக்களின் செவிப்பாறைகளுக்கு செவிப்படைக்கும் பாதிப்பை
ஏற்படுத்துகின்றன. ஒரு பயானின் தெளிவும் கிரகிப்பும் அந்த பயானின் இனிமையான
சப்தத்தின் மட்டத்திலே காணப்படுகிறது. எனவே மக்களுக்கு இனிமையான பயான் தேவையா ?
அல்லது ஊண்டி அடிக்கும் சப்தமிக்க பயான் தேவையா? என்று யோசிக்க வேண்டும்.
இஸ்லாமிய
வரலாற்றில் இவ்வாறான ஒளி, ஒலியால் சூழல் மாசுபடுத்தும் நடவடிக்கைகள் எங்கும்
காணப்படவில்லை. ஆகவே மேற்குறிப்பிட்ட விடையங்களை ஒவ்வொரு பள்ளிவாசல்
நிர்வாகத்தினரும் கருத்தில் கொண்டு மனிதனுக்கு தீங்கு பயக்கும் ஒளி மற்றும் ஒலி
சாதனங்களை பயன்படுத்தாமல் இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும். அவ்வாறே எல்லோருக்கும்
கேட்கும் ஒரு பொதுவான ஒழுங்கில் சப்தங்களை மட்டுப்படுத்தி ஒலிபெருக்கிகளை
பாவிக்கப் பழக வேண்டும். இதுவே நமது சமூகத்தின் ஆரோக்கியத்திற்கும் அக புற
பாதுகாப்புக்கும் உகந்ததாக அமைய முடியும்.


0 Comments