எல்.ஏ.யூ.எல்.எம்.நளீர் –
மீண்டும் ஒரு தீர்க்கமான தருனத்திற்குள்
நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். அது தான் எதிர் வரும் பாராளுமன்றத்
தேர்தலுக்கு தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வது. இத்தேர்தலில் முஸ்லிம்
பிரதிநிதித்துவங்களை தக்கவைத்து கொள்ள ஒவ்வோர் கட்சியும் முறையே கிழக்கு,
மத்திய கொழும்பு, கண்டி மாவட்டம் என பகடைக்காய் உருட்டி வருகின்றனர்.
கண்டி மாவட்டத்தை பொறுத்தவரை ஐக்கிய
தேசியக் கட்சியின் பட்டியலுக்கு ஹாரிஸ்பத்துவ தேர்தல் தொகுதி யின்
அமைப்பாளரான அமைச்சர் ஹலீம், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவுஃப்
ஹக்கீம், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி, முன்னைநாள் ஐக்கிய
மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதிநிதி பைசர் முஸ்தபா, ஐக்கிய தேசியக்
கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் லாபிர் ஹாஜியார், சென்ற மாகாண சபைத்
தேர்தலில் ஐ.தே.க. பட்டியலில் போட்டியிட்டு அடுத்து உள்வாங்கப்படவுள்ள
முத்தலிப் ஹாஜியார், கண்டி மாவட்ட மூத்த முஸ்லிம் அரசியல் பிரதிநிதி காதர்
ஹாஜியார் என எழுவர் வேட்பு மனுவுக்காகக் கள்மிறங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக்
கட்சி வட்டாரத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
சென்ற பொதுத் தேர்தலின் போது, ஐக்கிய
தேசியக் கட்சியின் பட்டியலில் போட்டியிட்ட அமைச்சர் ஹலீம், அமைச்சர் ரவுஃப்
ஹக்கீம், காதர் ஹாஜியார் ஆகிய மூவரும் பாராளுமன்றத்திற்கு
உள்வாங்கப்பட்டமையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட
பைசர் முஸ்தபா 54 வருடங்களின் பின் சுதந்திரக் கட்சியின் பிரதிநிதியாக
பாராளுமன்றத்திற்கு தெரிவாகி சரித்திரம் படைத்ததும் கண்டி முஸ்லிம்களின்
தேர்தல் சாணக்கியத்தை எடுத்தியம்புகிறது.
எனினும், இன்றைய கண்டி மாவட்டத்தின் கள
நிலவரம் அன்றைய நிலைமைக்கு ஒத்ததாக இல்லை. ‘இனிமேல் கண்டி மாவட்டத்திற்கு
இறக்குமதி செய்யப்படும் அரசியல்வாதிகளுக்கு வாக்கினை தாரை வார்த்து ஏமாற
வேண்டாம்’ எனும் தொனிப் பொருளில் 2 வருடங்களுக்கு முன்பிருந்தே ஐ.தே.கவும்,
அமுக்க குழுக்களும் மக்கள் மத்தியில் தெளிவூட்டல்களை வழங்கி வருகின்றன.
இதற்கு ரவுஃப் ஹக்கீமையும், பைசர் முஸ்தபாவையும் முன்னுதாரணமாக
காட்டுகின்றனர்.
பொது பல சேனாவின் வீச்சம் அதிகமாயிருந்த
காலப்பகுதியில் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளின் பாராமுகம் குறித்தும்
விசனிக்கின்றனர். அது விடயத்தில் சிங்கள, தமிழ் அரசியல் பிரதிநிதிகள்
முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுத்ததையும், ஜே.வீ.பீ. முஸ்லிம்களுக்காகக்
களம் இறங்கியதையும் குறித்து நன்றி பாரட்டும் கண்டிய முஸ்லிம்களில் ஒரு
பிரிவினர்; ஜே.வீ.பியின் வெற்றியை உறுதிப்படுத்துவதே செஞ்சோற்றுக் கடன்
என்கின்றனர்.
இம்முறை தேர்தலும் கடந்த கால
பொதுத்தேர்தல்களிலிருந்து விலகி ஆட்சிமாற்றம் ஒன்றை நோக்கி விளைகிறது.
அவ்வாறான ஒரு சாத்தியக்கூறு உண்டாகும் பட்சத்தில் ஐ.தே.க பட்டியல்
வேட்பாளர்கள் கடந்த தேர்தலை விட அதிகளவு எண்ணிக்கையான விருப்பு வாக்குகளை
பெற்றுக்கொள்ள நேரிடும். முன்னாள் ஐ.தே.க வின் பொதுச்செயலாளர் திஸ்ஸ
அத்தனாயக்கா இல்லாத நிலையிலும் கண்டி மாவட்டத்தின் கட்சியின் வேட்பாளர்
பட்டியல் நிர்ணயத்தை லக்ஷ்மன் கிரியெல்லவே தம் கையில் வைத்திருப்பார்.
முஸ்லிம் வேட்பாளர்களது பணத்துக்காகவும், முஸ்லிம்களது வாக்குகளை அதிகம்
பெற்று சிங்கள் வேட்பாளர்களின் பாராளுமன்ற பிரவேசத்திற்கு வழி செய்யவும்
அவர் அதிகளவான முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு அனுமதிச் சீட்டு வழங்கக் கூடும்.
அவ்வாறு நிகழுமாயின் அதுவே முஸ்லிம் பிரதிநிதித்துவ இழப்புக்கான முதலாவது
படிக்கல் ஆகிவிடும்.
இவ்வாறான அரசியல் இடர்பாடுகள் இருக்கும்
நிலையிலேயே ஏழு முஸ்லிம்கள் ஐ.தே.க வேட்பு மனுவிற்கு முண்டியடிக்கின்றனர்.
இது சமூகத்தின் கண்டி மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை இழக்கச்
செய்யும் பாரிய நடவடிக்கையாகும். குறித்த மனுதாரர்களும் அவர்களது நலன்
விரும்பிகளும் இது விடையத்தில் கவனம் செலுத்தி சமூக நலன் கருதிய முடிவுகளை
எடுத்தால் மட்டுமே ஐ.தே.க வின் முஸ்லிம் பிரதிநிதித்துவம் பாதுகாகப்படும்.
ஐ.தே.க. பட்டியலில் இரு முஸ்லிம் வேட்பாளர்கள் என்பதே உசிதமான முடிவாகும்.
அது ஹலீமும் ஹக்கீமுமா அல்லது ஹலீமும் லாபிர் ஹாஜியாருமா என்பது
அத்தியாவசியமாகத் தீர்மானிக்கப்பட வேண்டிய ஒன்று.
இன்றைய நிலவரப்படி அமைச்சர் ரவூஃப் ஹக்கீம்
கண்டியில் ஐக்கிய தேசிய கட்சி பட்டியலில் போட்டியிட்டால் மாத்திரம்
பாராளுமன்றம் செல்லலாம், கட்சி தனித்து கண்டியில் போட்டியிடுமாயின் வெற்றி
கேள்விக் குறியானதாகும். கிழக்கின் முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொடுத்துள்ள
நிலையில் கிழக்கில் போட்டியிட்டால் மீண்டும் கிழக்கின் நாயகனாக வரும் ஒரு
தளத்தையும் அவர் செம்மைப்படுத்தி வைத்துள்ளார்.
பைசர் முஸ்தபாவின் பதிவு
கேள்விக்குறியாகவுள்ளது. அவர் கண்டி மறுக்கப்பட்டால் கொழும்பில் களம்
இறங்கலாம். ஐ.தே.க. பட்டியலில் இடம் கிடைக்காவிட்டால், ஜ.ம.சு.மு.
பட்டியலில் போட்டியிடலாம், அல்லது ஜனாதிபதி அவரை தேசிய பட்டியலில்
சேர்க்கலாம். அவர் களம் இறக்கப்பட்டால் கட்சி எதுவாயினும், அரசியல்
பின்னனியில் இருந்து சமூகத்திற்கு உரிய நேரத்தில் நல்ல பல சேவைகளை
செய்திருந்தும் கூட, தனது அரசியல் ஸ்திரத்தன்மையை குறித்த ஒரு பிரதேசத்தில்
நிலை நிறுத்திக் கொள்ளாததன் காரணமாக வெற்றி சிம்ம சொப்பணமாக இருக்கும்
என்பது வருத்தத்துக்குறிய உண்மையாகும்.
அசாத் சாலி ஐ.தே.கவில் போட்டியிடலாம்,
மறுக்கப்பட்டால் ஜனாதிபதியின் வெற்றியின் உறுதுணையாளன் என்ற வகையில்
ஐ.ம.சு.மு வில் கண்டியில் போட்டியிடலாம் அல்லது தனது சொந்தக் கட்சியில்
களம் இறங்கலாம். கண்டி தவறுமாயின் கொழும்பிலும் களம் இறங்கலாம். கண்டி
மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த மாகாண சபை தேர்தலின் போது சமூகத்துக்காக குரல்
கொடுத்தவர் என்பதற்காக மட்டுமே பிததியுபகாரம் எதிர்பாராது அவரை மத்திய
மாகாண சபைக்கு அனுப்பிவைத்த முஸ்லிம்கள் இன்று, பொது பல சேனாவின் உச்சகட்ட
நடவடிக்கையான அளுத்கமை தீ மூட்டலுக்கு அசாத் சாலியும், அவரது சகோதரர்
ரியாஸ் சாலியும், அலவி மெளலானாவும் ஏலவே சமூகத்தை காட்டிக்கொடுத்தமையே
காரணம் என நன்கு விளங்கி வைத்துள்ளனர்.ஊடகங்களில் அசாத் சாலி ஒரு உதார
புருஷராகத் தென்பட்ட போதிலும், அவரது தனிப்பட்ட வாழ்வானது முஸ்லிம்
சமூகத்துக்குள் ஏற்படுத்திய பாதிப்புகளை புடம்போட்டுக்காட்டும்
முஸ்தீபுகளில் அவரது எதிரணியினர் இறங்க ஆயத்தமாகி வருவதால் கண்டியிலோ,
கொழும்பிலோ எந்தக் கட்சியில் அவர் போட்டியிட்டாலும் இறுதியில் முஸ்லிம்கள்
அவர் பற்றி நல்லெண்ணம் கொள்ளப்போவதில்லை என்பது அவரது வெற்றியை
கேள்விக்குறியாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆளும் தரப்பிலும் எதிர் தரப்பிலும்
முஸ்லிம் பிரதிநித்துவங்கள் பாதுகாக்கப்படல் வேண்டும் என்பதே காலத்தின்
தேவையாக உள்ளது. எனினும், கடந்த கால அரசியலின் கசப்பான அனுபவங்கள்
ஐ.ம.சு.மு யில் போட்டியிடவுள்ள முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்
மனப்பக்குவத்தை கண்டிய முஸ்லிம்களுக்கு காலம் இன்னும் வழங்கவில்லை என்பதே
உண்மையாகும்.
சுமார் ஒரு இலட்சத்து நாட்பதினாயிரம்
முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டுள்ள கண்டி மாவட்டத்திலே எதிர்பார்க்கப்படும்
அதிக பட்ச வாக்களிப்பு 70 விழுக்காடாகும். அதில் தள்ளுபடியாகும் வாக்குகள்
போக மீதி 90,000 செல்லுபடியாகும் வாக்குகள் எனில், சகல கட்சிகளின்
முஸ்லிம் வேற்பாளர்களும் சுமார் 10 பேர் போட்டியிடுவார்களாயின் சராசரியாக
ஒருவர் பெறக்கூடிய வாக்குகள் 9,000 மட்டுமேயாகும். இந்த வாக்கினால்
ஜே.வீ.பி. போன்ற சிறு கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு எச்சத்தில் பாராளுமன்றம்
செல்லும் வாய்ப்பு உருவாகும். அதே சமயம் பிரதான கட்சிகளின் முஸ்லிம்
வேட்பாளர்கள் படுதோல்வி அடைவர்.
எதிர்வரும் தேர்தலில் , முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினதும் அவரது சிறு குழுவினரதும் அரசியல்
பிரவேசமும், மேடை வியாக்கியானங்களுமே பெரும்பான்மை, சிறுபான்மை மக்களிடையே
அரசமைக்க உகந்த கட்சி எது? பிரதமராகப் போவது யார்? என்பதை தீர்மானிக்கும்
சக்திகளாக விளங்கவுள்ள நிலையில், கண்டிய முஸ்லிம்களின் முஸ்லிம்
பிரதிநிதித்துவங்களை இம்முறை இழக்கத் துடிப்பவர்கள் முஸ்லிம் வாக்காளர்கள்
அல்ல, வேட்பாளர்களும் அவர்களது நெருங்கிய ஆதரவாளர்களுமேயாவர். எனவே
இவர்களால் அரசியல் அனாதைகளாக்கப்படவுள்ள கண்டிய முஸ்லிம் சமூகம் அரசியல்
விழிப்புணர்வு அடைய வேண்டும்.


0 Comments