Subscribe Us

header ads

சந்திரனில் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் அணிந்திருந்த சூட் காட்சிப்பொருள் ஆகின்றது: பாதுகாக்க 5 லட்சம் டாலர் குவிந்தது



அப்போலோ-11 விண்கலம் மூலம் சாகசப் பயணம் மேற்கொண்டு சந்திரனில் காலடித்தடம் பதித்த உலகின் முதல் மனிதராக 21-7-1969 அன்று புதிய விஞ்ஞான சாதனையை ஏற்படுத்தியவர், நீல் ஆர்ம்ஸ்ட்ராங். 

அதன் பின்னர் பல்வேறு கிரகங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளும், ஆராய்ச்சியாளர்களும் விண்வெளி ஆராய்ச்சித்துறை 
வரலாற்றில் இடம்பிடித்திருந்தாலும், உலகம் உள்ளளவும் மக்களின் மனங்களில் நீங்காத சிறப்பிடம் பிடித்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங், கடந்த 25-8-2012 அன்று காலமானார்.

அவர் சந்திரனில் முதன்முதலாக காலடி பதித்த நாளையும், மூன்றாம் ஆண்டு நினைவு நாளையும் சிறப்பிக்க விரும்பிய 
நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கின் அபிமானிகள், அமெரிக்க அரசுக்கு சில மாதங்களுக்கு முன்னர் ஒரு வேண்டுகோளை முன்வைத்தனர்.

சந்திரனுக்கு பயணமானபோது நீல் ஆர்ம்ஸ்ட்ராங் அணிந்திருந்த பிரத்யேக ‘சூட்’ தற்போது அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவரது சாதனையை உலக மக்கள் மீண்டும் நினைவுப்படுத்திக் கொள்வதற்கு வசதியாக அந்த சூட்டை வாஷிங்டன் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்பொருளாக வைக்க வேண்டும் என இங்குள்ள ஸ்மித்சோனியன் பயிலகம் கேட்டுக் கொண்டது.

நீல் ஆர்ம்ஸ்ட்ராங் அணிந்திருந்த சூட்டை பாதுகாக்கும் பேழை, மற்றும் அந்த சூட் சிதிலமடைந்துப் போகாமல் பாதுகாக்கக்கூடிய ‘த்ரிடி’ தொழில்நுட்ப புணரமைப்பு போன்றவற்றிற்காக இணையதளம் மூலமாக இந்நிறுவனம் நிதி திரட்டியது.

இந்த வேண்டுகோளுக்கு செவிமடுத்த 6,838 கொடையாளர்கள், இந்த உன்னத நோக்கத்துக்காக இதுவரை சுமார் 5 லட்சம் அமெரிக்க டாலர்களை அள்ளி வழங்கியுள்ளனர். இந்த நிதி திரட்டும் பிரசாரம் முடிய இன்னும் 20 நாட்கள் உள்ள நிலையில் மேலும் பல லட்சம் டாலர் நிதி குவியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

மொத்தப் பணத்தையும் வைத்து, அமெரிக்க அரசின் நிதியுதவியை எதிர்பார்க்காமல் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் அணிந்திருந்த பிரத்யேக சூட்டை காட்சிப்பொருளாக்கும் திட்டத்தை ஸ்மித்சோனியன் பயிலகம் விரைவில் நிறைவேற்றவுள்ளது.

அதன்பிறகு, நிலாவில் வடை சுட்ட பாட்டி கதை எல்லாம் பழங்கதை ஆகி, சந்திரனில் கால்வைத்த ஆர்ம்ஸ்ட்ராங் தாத்தாவின் வரலாறு மக்களின் மனதில் என்றென்றும் பசுமையாக நிலைத்திருக்கும் என்று நம்பலாம்.

Post a Comment

0 Comments