இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள்கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரை இலங்கை அணி வெல்லுமா என்பதுதான் இப்போது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களினதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
பாகிஸ்தான் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. ஒருநாள் தொடரின் கடைசிப்போட்டி நேற்றுமுன்தினம் ஹம்பாந்தோட்டை மைதானத்தில் நடைபெற்றது. இந்தப்போட்டியில் இலங்கை அணி 165 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இதில் அதிரடியை வெளிப்படுத்திய குஷல் பெரேரா 116 ஓட்டங்களை விளாசினார். மறுமுனையில் தில்ஷான் 62 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களைப் பெற்றார். இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 368 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 37.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்களை மாத்திரம் பெற்றும் 165 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. ஆனாலும் பாகிஸ்தான் 3–2என்ற அடிப்படையில் தொட ரைக் கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையில் எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாகின்றது 20 ஓவர் கிரிக்கெட் தொடர். இதன் இரண்டாவது போட்டி செப்டெம்பர் 1ஆம் திகதி நடக்கிறது. இவ்விரு போட்டிகளும் கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில்தான் நடக்கிறன.
இந்தப் போட்டிகளுக்காக இலங்கை அணியில் 5 புதுமுக வீரர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்த அணியில் பினுர பெர்னாண்டோ (வேகப்பந்து வீச்சாளர்), தசுன் ஷானக (சகலதுறை ஆட்டக்காரர்), ஜெப்ரே வந்தேர்சாய் (சுழற்பந்து வீச்சாளர்), ஷேகன் ஜயசூர்ய மற்றும் தனஞ்ஜய டி சில்வா (துடுப்பாட்ட வீரர்கள்) ஆகியோர் புதுமுக வீரர்களாக அறிமுகமாகின்றனர்.
லசித் மாலிங்க அணித் தலைவராக செயற்படுகின்றார். அதேபோல் அனுப வீரர் திலகரத்ன டில்ஷான், குஷால் பெரேரா, கித்ருவான் விதானகே, தனஞ்ஜய டி சில்வா, மெத்யூஸ், தசுன் ஷானக, சாமர கபுகெதர, ஷேகன் ஜயசூரிய, திசர பெரேரா, ஜெப்ரே வந்தேர்சாய், நுவன் குலசேகர, பினுர பெர்னாண்டோ, சத்துரங்க டி சில்வா, மலிந்த சிறிவர்தன ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசியும் ஐந்தாவதுமான ஒருநாள் போட்டியில் லசித் மாலிங்க அணியில் இடம்பெறவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடரின் முதலாவது 20 ஓவர் போட்டி ஜூலை 30ஆம் திகதியும்இ 2ஆ-வது போட்டி ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதியும் நடைபெறவிருக்கிறது.
ஏற்கனவே பாகிஸ்தானிடம் டெஸ்ட் தொடரையும், ஒருநாள் தொடரையும் இழந்துள்ள இலங்கை அணி 20 ஓவர் தொடரை நிச்சயம் கைப்பற்றியாக வேண் டும் என்பதுதான் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


0 Comments