பொதுத் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து இருபது வருடங்களுக்கு தேசிய அரசாங்கம் என்ற ரீதியில் இந்நாட்டை ஆட்சி செய்யும். இது விடயத்தில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லையென்று பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.
பெல்வத்தை சீனித் தொழிற்சாலையில் சீனி உற்பத்தியை ஆரம்பித்து வைத்தபின் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அடுத்து வரும் பொதுத் தேர்தலுக்குப் பிறகு இரு கட்சிகளையும் ஒன்றிணைத்து நாட்டின் ஆட்சியை முன்னெடுப்பதற்கு திடசங்கட்பம் பூண்டிருக்கின்றனர். இதுவரை காலமும் நாம் பிரிந்திருந்து செயல் பட்டது போதும். தொடர்ந்து அந்நிலை ஏற்படக் கூடாது. நாட்டை துரிதமாக அபிவிருத்தி செய்ய வேண்டிய பாரிய பொறுப்பும் கடப்பாடும் இவ்விருக் கட்சிகளுக்கும் இருந்து வருகின்றன. நோக்கமும் இலக்கும் ஒன்றாக இருக்கும் போது இணைந்து செயற்படுவதில் தவரேதும் இருக்க முடியாது. இவ் இணைவு மூலம் நாடு எதிர் நோக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை இலகுவில் ஏற்படுத்திக் கொள்ள முடியும். அடுத்து வரும் எமது தலைமுறையினருக்கு வளமானதோர் நாட்டை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
1977ம் ஆண்டு காலப்பகுதியில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் உருவாக்கப்பட்டது. அவ் வேளையிலேயே ஊவா மாகாணத்தின் பெல்வத்தையில் தொழிற்சாலையும் ஆரம்பமானது. கிராம எழுச்சி திட்டமும் முன்னெடுக்கப்பட்டது. இது போன்ற வேலைத்திட்டங்கள் தொடர்ந்து நடைமுறைப் படுத்தப் படும் போது நாடும் துரிதமாக அபிவிருத்தியடையும்.
நாட்டில் சக்தி மிக்க ஸ்திரமானதோர் ஆட்சி இருக்குமேயானால் வெளிநாடுகள் தமது பணத்தை இந்நாட்டில் முதலீடு செய்து வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பர். அத்தகையதோர் ஆட்சியை ஏற்படுத்தலே இரு தலைவர்களும் கங்கனம் கட்டி செயற்படுகின்றனர் எனவும் கூறினார்.
0 Comments