எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து மிக முக்கியமான அறிவித்தல் ஒன்றினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுக்கவுள்ளார்.
ஜூலை மாதம் முதலாம் திகதி புதன் கிழமையன்று இந்த அறிவிப்பு வெளியி டப்படும் என்றும் விஷேடமாக பாராளுமன்ற தேர்தல் குறித்த தனது நிலைப்பாட்டை உத்தியோகபூர்வமாக இதன் போது மஹிந்த ராஜபக்ஷ அறிவிக்க உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட கேசரிக்கு தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை, மெதமுலனையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து காலை 10.00 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்படும் என குறிப்பிட்ட முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர், இதன் போது பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். அரசியல் பிரமுகர்களுக்கு மேலதிகமாக முன்னாள் ஜனாதிபதி தனது அறிவிப்பை வெளியிடும் போது அவரது ஆதரவாளர்களும் மெதமுலனவில் ஒன்று கூடுவர் எனவும் ரொஹான் வெளிவிட்ட குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மெலும் தெரிவித்ததாவது,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செயற்பாட்டு அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பது குறித்து ஒவ்வொரு அரசியல் வாதியும் தத்தமது கருத்துக்களையும் ஊகங்களையும் வெளியிட்டு வருகின்றனர். அதே போன்று இன்னும் பல விடயங்கள் குறித்தும் பல இணையத்தளங்கள் ஊடாக பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகின்றன. இவை அனைத்திற்கும் ஜூலை முதலாம் திகதி பதில் கிடைக்கும்.
விஷேடமாக எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்த முக்கியமான தீர்மானம் அல்லது தனது நிலைப்பாட்டினை இதன் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அறிவிக்க உள்ளார். என்றார்.
இதேவேளை தேர்தல் தொடர்பில் நான் என்ன இறுதி முடிவு எடுத்துள்ளேன் என்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அறிந்து கொள்ள முடியுமென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று கண்டி தலதாமாளிகைக்கு சென்று மதவழிபாடுகளில் கலந்துகொண்ட அவரிடம் ஊடகவியலாளர்கள் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


0 Comments