புத்தளம் கொழும்பு வீதியின் பாலாவி சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பத்தலங்குண்டு பொலிஸ் காவலரன் பொறுப்பதிகாரியான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் படுகாயங்களுக்குள்ளாகி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து மேலதிகச் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று வியாழக்கிழமை மாலை பொலிஸ் பரிசோதகர் பயணித்த மோட்டார் சைக்கிளும், சிறிய ரக லொறி ஒன்றும் மோதி இடம்பெற்றுள்ள இவ்விபத்தில் அநுர நிக்கபிட்டிய எனும் பொலிஸ் பரிசோதகரே இவ்வாறு பலத்த காயங்களுக்குள்ளானவராவார்.
பலத்த காயங்களுக்குள்ளான பொலிஸ் பரிசோதகர் நேற்று கடமை நிமித்தம் அவரது மோட்டார் சைக்கிளில் முந்தல் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று பணியை முடித்துக் கொண்டு புத்தளம் நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
புத்தளம் திசையிலிருந்து வந்துள்ள சிறிய ரக லொறி பாலாவி சந்தியில் கல்பிட்டி வீதியில் திரும்புவதற்கு முயன்ற வேளை முந்தலில் இருந்து வந்து கொண்டிருந்த பொலிஸ் பரிசோதகரின் மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான பொலிஸ் பரிசோதகர் உடனடியாக அங்கிருந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவ்விபத்துடன் தொடர்புடைய லொறியில் பயணித்த எவருக்கும் எவ்விதக் காயங்களும் ஏற்படவில்லை எனினும் லொறியும், மோட்டார் சைக்கிளும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த புத்தளம் பொலிஸார் லொறிச் சாரதியைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.


0 Comments