-Alimdeen Saa-
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நாம் கடந்த 26 வருட காலமாக இழந்து வருகின்ற, புத்தளம் தொகுதியின் மூவின மக்களுக்கும், மாவட்டத்தின் தமிழ்பேசும் தமிழ், முஸ்லிம் மக்களுக்குமான பாராளுமன்றப் பிரதிநிதியை பெற்றெடுத்ததாக வேண்டும் என்ற சிந்தனை அதிகரித்து வருவதை புத்தளம் மாவட்டம் முழுவதும் காண முடிகிறது.
1989 ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையே நமது பாராளுமன்ற உறுப்பினரை இல்லாமலாக்கி இருக்கிறது என்று மேலோட்டமாக இழப்புக்கான காரணத்தைச் சொல்லி நாம் தப்பித்துக்கொண்டாலும் அதைவிடவும் இருக்கின்ற காரணங்களை கண்டறிய வேண்டிய தேவை உருவாகி இருக்கிறது.
ஒரு புறம் விகிதாசார தேர்தல் முறை தொகுதி முறையை ஒழித்து முழு மாவட்டமும் தேர்தல் மாவட்டமாக கணிக்கின்ற நிலைமையை உருவாக்கியதால் ஒவ்வொரு இனமும் தத்தமது இன வேட்பாளர்களுக்கு தமது வாக்குகளை வழங்குகின்ற இன(வாத) விகிதாசார தேர்தல் முறையாக இது மாற்றம் அடைந்தது. அது அப்படியிருப்பினும், நமது வேட்பாளர்கள் வெறும் ஓரிரண்டு ஆயிரம் வாக்குகளிலேயே தொல்வியைத் தழுவுகின்றார்கள் என்பதும் நமது இயலாமையையே பறைசாற்றுகின்றது.
இத்தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டு வந்த முதல் தேர்தலில், பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றுக்கு புறம்பாக மூன்றாவது அணியாக முஸ்லிம் காங்கிரஸ் களம் இறங்கியதும் நமது வாக்குகளை மூன்றாக பிரிப்பதற்கு காரணமாக அமைந்தது. முஸ்லிம் காங்கிரஸ் பிரித்துவிட்ட அந்த ஆறாயிரம் வாக்குகளை ஐக்கிய தேசிய கட்சியிலும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலும் போட்டியிட்ட வேட்பாளர்களான மர்ஹூம். பிஷ்ருல் ஹாபி, M.H.M. நவவி ஆகியோருக்கு வாக்குகளை வழங்கிவிட்டு, முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளரான டாக்டர். இல்லியாஸ் மாகான சபையோடு மாத்திரம் நின்றிருந்தால் அந்த இரு கட்சிகளிலும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை நாம் பெற்றிருக்க முடியும். அதே போன்றே 1994ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மர்ஹூம். வாரித் காலி அவர்களையும் பின்னர் வந்த தேர்தல்களில் கே.ஏ. பாயிஸ் அவர்களையும் களமிறக்கி கணிசமான வாக்குகளை பிரித்தெடுத்தது பாராளுமன்ற உறுப்பினர் இழப்புக்கு பிரதான காரணங்களில் ஒன்றாகும்.
அதேபோன்று நமது ஊரிலுள்ள உலமாக்கள், கல்விமான்கள், இளைஞர்கள், மாணவர்கள் போன்றோரை அரசியல் தலைமைகளிடமிருந்து பிரித்து, வேறாக்கி அரசியலுக்கும், சமூகத்துக்கும் இடையில் பெறும் இடைவெளியை ஏற்படுத்திவரும் நமதூரின் ஒரு இஸ்லாமிய இயக்கத்தின் இயக்கவாதமும் இதன் பிரதான காரணங்களில் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட வேண்டியதொன்றாகும்.
அரசியலை வெறும் சாக்கடையாகவே காட்டி, மூலை சலவை செய்யப்பட்ட இளைஞர் சக்திகளை தேர்தல் காலங்களில் அமைதிப்படுத்தி விடுவதும், வெற்றிபெறக்கூடிய வேட்பாளர்களை தோற்கடிப்பதற்காக ஏனைய வேட்பாளரை ஆதரிப்பதும் போன்ற இரட்டை வேடப்போக்கு “இயக்கவாத அரசியலின்” அப்பட்டமான கெடுபிடியாகும்.
இது அரசியலில் மாத்திரமின்றி சிறிய சங்கங்கள், இயக்கங்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம், அதிபர்கள், பள்ளிவாயல் தர்மகர்த்தாக்கள் என்று தமது இயக்கத்தை தவிர்ந்த ஏனைய இயக்கங்களின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுவானவர்கள் என்று யாரையும் விட்டுவைக்காத ஏக-ஆதிபத்திய செயற்பாடு வேரூன்றியிருப்பதையும் பிரித்தறிய வேண்டிய தேவை சமூகத்திற்கு ஏற்பட்டுள்ளது.
உதாரணமாக, மர்ஹூம். பிஷ்ருல் ஹாபி, நவவி ஆகியோரை தோற்கடிக்க டாக்டர். இல்லியாஸ், பாயிஸ் ஆகியோரை பயன்படுத்தியதும், பின்னர் பாயிசை தோற்கடிக்க ஏனைய வேட்பாளர்களை பான்படுத்தியதும், நாம் நேரில் கண்டறிந்த உண்மைகளாகும். இச்செயற்பாடு வெளிப்படையாக இல்லாமல், வெறும் “அமுக்கக் குழு” என்ற நிலையிலிருந்து “தமது இயக்கத்தின் எதிர்கால தேவைக்காக நிகழ்காலத்தை இல்லாதொழிப்பது” என்பது சியோனிச சிந்தனையின் இறக்குமதியாகும். இதனால், சமூகம் எந்தளவு பாதிப்புக்களை சந்தித்தாலும், அது தமது “இயக்கம்” என்ற தரப்படுத்தலில், அதைப்பற்றி அலட்டிக்கொள்பவர்களாக அவர்கள் இல்லை.
அத்தோடு, தேர்தல் நாளன்று எதுவித கவலையுமின்றி ஆற்றுக்குப் போவதும், சுற்றுலாச் செல்வதும், வீட்டில் முற்று முழுதாக ஓய்வெடுப்பதும், என்று வாக்களிக்கச் செல்லாமலும், வாக்களிக்க தூண்டாமலும் தாமும், தன்பாடும் என்றிருக்கின்ற சமூகத்தின் இன்னொரு பகுதியினரின் செயற்பாடுகளும் இன்னொரு காரணமாகும்.
மேற்படி காரணங்களை பிரித்தறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, சமூகத்தின் சகல தரப்பும் செயற்பாட்டாலே இம்முறையாவது பாராளுமன்றம் சாத்தியமாகும்.


0 Comments