சாலை விபத்தில் தந்தையைப் பறி கொடுத்த 2 வயது பெண் குழந்தைக்காக ’ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்’ பாடிய காவலரை பொதுமக்கள் பாசத்துடன் 'ஹீரோ’ என்று அழைத்து வருகின்றனர்.
அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் சாலை விபத்தால் ஒரு வாகனம் சாலையை விட்டு அருகிலுள்ள புல்வெளிக்குள் சீறிப் பாய்ந்தது. விபத்துக்குள்ளான காருக்கு பின்பாக காரில் வந்து கொண்டிருந்த காவலர் ஒருவர், இந்த கொடூர காட்சியைப் பார்த்து பதறி, தனது காரை சாலையோரமாக நிறுத்தி விட்டு கார் கவிழ்ந்து கிடந்த புல்வெளியை நோக்கி வேகமாக ஓடினார். அங்கு அவர் பார்த்த காட்சி அப்படியே அவரை உறைய வைத்து விட்டது.
விபத்துக்குள்ளான காருக்குள் வீறிட்டு அழுது கொண்டிருந்த குழந்தையை தூக்கிக் கொண்ட காவலர், ரத்த வெள்ளத்தில் கிடந்த அப்பாவைப் பார்த்து அழுது கொண்டிருந்த குழந்தையை சாந்தப்படுத்துவதற்காக 'ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்’ என்று எல்லையற்ற அன்போடு இனிமையாகப் பாடிக் கொண்டிருந்தார். மனதை நெகிழச் செய்யும் இந்தக் காட்சியை தனது செல்போனில் படமெடுத்த அந்த ஓட்டுனர் இதை தனது பேஸ்புக்கில் பதிவேற்ற அது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவ அந்தக் காவலரை அனைவரும் நாயகனாகக் கொண்டாடி வருகின்றனர்.
இதுகுறித்து, அந்தக் காவலர் நிக் ஸ்ட்ரக் கூறுகையில், “அந்தக் குழந்தையை கையில் அள்ளிய நொடியில் அது என்னுடைய குழந்தை என்றுதான் நினைத்தேன். எனக்கும் 2 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அவளது அழுகையை நிறுத்துவதற்காகப் பாடினேன். ஒவ்வொரு குழந்தைக்குமே தந்தை மிகவும் அவசியமனவர். எப்படியோ அந்த குழந்தைக்கு என்னால் முடிந்த உதவியை செய்ததற்காக சந்தோஷப்படுகிறேன். சாகும் வரை இந்த நாளை என்னால் மறக்க முடியாது.” என்றார்.
விபத்துக்குள்ளன காரில் கணவன் மனைவி மற்றும் அவர்களது 4 குழந்தைகள் பயணித்துள்ளனர். தந்தை சம்பவ இடத்திலேயே இறந்து விடவே தாயார் உட்பட மற்ற குழந்தைகள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


0 Comments