-NMCC-
சிங்கள முஸ்லிம் மக்களின்
உணர்வுகளைப் புரிந்து மறிச்சுக்கட்டி முஸ்லிம்களது மீள்குடியேற்றம் தொடர்பில்
நியாயமான கருத்துக்களை மக்களுக்கு பகிர வேண்டுமே தவிர அப்பாவி
மக்களின் மனங்களில் நச்சுக்கருத்துக்களை திணிக்க வேண்டாம் என வடக்கு முஸ்லிம்
பிரஜைகள் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவ்வறிக்கையில் மேலும்
தெரிவித்ததாவது,
கடந்த இரண்டு மாதங்களுக்கும்
மேலாக மன்னார் மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விவகாரம் தேசிய அளவில்
பேசப்பட்டது. பொதுபலசென, சிஹல ராவய போன்ற
சிங்கள பொளத்த இனவாத அமைப்புக்கள் வடக்கில் முஸ்லிம்கள் வில்பத்து காட்டை அழித்தே
தமது மீள்குடியேற்றத்தை மேற்கொண்டுவருகின்றார்கள் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து
சில சமூக வலைத்தளங்கள் இலத்திரனியல் ஊடங்களும் வில்பத்து தொடர்பான பிரச்சினையை
பூதாகரமாக்கின.
புலிகளால் பலவந்தமாக
வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்கள் கால்நூற்றாண்டு கால அகதி வாழ்கையின் பின்னர்
தமது சொந்த நிலங்களில் மீள்குடியேறி வருகின்ற நிலையில் அதனைத் தடுக்கும் ஒரு
சூழ்ச்சியாக மறிச்சுக்கட்டி கரடிக்குளி, பாலைக்குழி, போன்ற கிராம முஸ்லிம் மக்கள்
அமைச்சர் ரிஷாட் பதிவுதீன் அவர்களது உதவியுடன் வில்பத்து காட்டை அழித்து குடியேறி
வருகின்றார்கள் என்ற வதந்தியையும் இவ்வூடகங்களே பரப்பி வந்தன.
மறிச்சுக்கட்டி தொடர்பான
வாதப்பிரதிவாதங்கள், நேரடி கள விஜயங்கள், சந்திப்புக்கள், அறிக்கைகள் சமர்ப்பிப்பூடாக
அனைத்து தரப்பினரும் ஓரளவு தெளிவுபெற்றிருக்கும் இவ்வேளையில், மீண்டும் வேதாளம்
முருங்கை மரம் ஏறியது போன்று இலங்கை தனியார் வானொலி நெத் எப் எம் மறிச்சுக்கட்டி
முஸ்லிம்களது மீள்குடியேற்றம் தொடர்பில் பல்வேறு பொய்களையும் இனத்துவேச கருத்துக்களையும்
பரப்ப ஆரம்பித்துள்ளன.
நேற்று 15-06-2015 காலை இடம்பெற்ற “விரித்து
சுரல்” எனும் நிகழ்ச்சி மூலமாக நெத் எப் எம் வானொலி வில்பத்து
தொடர்பான அப்பட்டமான பொய்களையே செய்தியாக சொல்லிச்சென்றது நடுநிலையாக
சிந்திக்கின்ற அனைத்து உள்ளங்களையும் கவலைகொள்ளச் செய்துள்ளது. வில்பத்துவில்
காடுகள் வெட்டப்பட்டு நாசம் செய்யப்படுவதாகவும் பாக்கிஸ்தான், பங்களாதேஷ் போன்ற
நாடுகளிலிருந்து வந்துள்ள முஸ்லிம்களை இங்கு குடியமர்த்தும் ஒரு திட்டம்
இடம்பெறுவதாகவும் அதனை அரசியல் அதிகாரமிக்க ஒரு முஸ்லிம் அமைச்சரே
மேற்கொண்டுவருவதாகவும் பல்வேறு போலியான குற்றச்சாட்டுக்களை மிக மோசமான பாணியில்
சொல்லிச்சென்றது.
உண்மையில் தேசிய ரீதியில்
வானொலி நடத்தும் ஒரு ஊடகம் சிங்கள மக்களை ஆத்திரமடையச்செய்யும் ஒரே நோக்கத்திற்காக
முஸ்லிம்களுக்கெதிரான நச்சுக் கருத்துக்களை பிழையான விதத்தில் திணிப்பதானது
ஜனநாயகம் நிலைகொண்டுள்ள ஒரு நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயலாகும். ஊடக
சுதந்திரம் என்ற போர்வையில் மக்கள் மத்தியில் விரிசலை உண்டுபண்ணும் இத்தகைய
ஊடகங்களை மக்கள் இணங்கண்டு கொள்ள வேண்டும்.
பேருவளை இன வன்முறை
சம்பவத்தின் போதும் பலரை இணைத்து இவ்வாறான முஸ்லிம் சிங்கள இன முருகல்
அதிகரிக்கும்படியான கருத்துக்களையே இவ்வானொலி வெளியிட்டு வந்தது. அவ்வாறே தம்புள்ள
பள்ளிவாசல் அகற்றும் நடவடிக்கையிலும் முஸ்லிம்களுக்கெதிரான கருத்துக்களை
பரப்புவதிலே முன்னின்றது.
இவ்வாறான இனவாதத்தை தூண்டும்
கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்புவதுதான் ஊடக சுதந்திரமா? ஒரு தனி நபருக்கும்
அதன் மக்கள் குழுமத்திற்கும் எதிராக அரசு நடவடிக்கை எடுக்கும்வரை தாம்
ஓயப்போவதில்லை என சபதம் பூண்டு நச்சுக்கருத்துக்களை மக்கள் மத்தியில் திணிக்கின்ற
பணியினையே இந்த ஊடகம் மேற்கொண்டுவருகின்றது.
கடந்த 2013 ஆண்டு தொடக்கம்
“பெலும்கள” எனும் நிகழ்ச்சியூடாக இந்த வானொலியானது இதுவரை சுமார் ஆறு
நிகழ்சிகளை வடக்கு முஸ்லிம்களுக்கெதிராக நடத்தியுள்ளதோடு மிகவும் கேவலமான மோசமான
சொற் பிரையோகங்களையும் பயன்படுத்தியுள்ளது. உண்மையில் வடக்கு முஸ்லிம்களையும்,
இம்மக்களை தமது சொந்த பூர்வீகத்தில் மீள்குடியமர்த்தும் முயற்சி எடுத்துவருகின்ற
முஸ்லிம் அமைச்சருக்கெதிராகவும் இந்த
வானொலி பல்வேறு தடைகளையும் முட்டுக்கட்டைகளையும் இடையூறுகளையும் தனது கருத்து
பலத்தால் மேற்கொண்டு வருகின்றது.
சுமார் கால்நூற்றாண்டு காலம்
பாதிக்கப்பட்ட மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறுகின்ற முயற்சியை தடுக்கும்
வகையில், அப்பாவி சிங்கள மக்களை தூண்டி விட்டு இனப்பிளவை உண்டுபண்ண முயற்சிக்கும்
இத்தகைய படுமோசமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஊடகச்செயர்பாட்டை சமூக
முன்னேற்றத்திற்காவும் நீதிக்காவும் உழைக்கும் சிவில் அமைப்புக்கள், சட்டத்தரணிகள்
எதிர்த்து சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறே இந்த அரசாங்கம் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் உரிமைகளுக்கு
மதிப்பளித்து இனத்துவேசத்தை கிளறுகின்ற இத்தைகைய ஊடக நிறுவனகளுக் கெதிராக வேடிக்கை
பார்க்காமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு முஸ்லிம் பிரஜைகள்
ஒன்றியம் வலியுத்துகின்றது.


0 Comments