Subscribe Us

header ads

வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நகரங்களின் பட்டியல் துபாய், அபுதாபி


வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மத்திய கிழக்கு நாடுகளில் அதிக செலவுள்ள நகரமாக துபாயும், அபுதாபி முன்னணியில் இருக்கின்றன.

சர்வதேச மனிதவள நிறுவனமான மெர்சர், உலக அளவில் சுமார் 207 நாடுகளில் நடத்திய ஆய்வில் வாழ்வதற்கு அதிக செலவாகும் நகரங்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதன்படி மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள நகரங்களில் துபாயும், அபுதாபியும் முன்னணியில் உள்ளன.

வீட்டு வசதி, போக்குவரத்து, உணவு, உடைகள், வீட்டு உபயோகப்பொருட்கள், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் மீது எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

உலக நாடுகளின் பட்டியலில் துபாய் 23–வது இடத்திலும், அபுதாபி 33–வது இடத்திலும் உள்ளது. இவைகள் 2014–ம் ஆண்டு முறையே 67 மற்றும் 68–வது இடத்தில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டைக்காட்டிலும் துபாய் 44 புள்ளிகள் அதிகம் பெற்று முன்னணியில் உள்ளது. இதன்படி அபுதாபியைவிட துபாய் செலவு அதிகமுள்ள நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரம் 77–வது இடத்திலும், பஹ்ரைனின் மனாமா நகரம் 91–வது இடத்திலும், கத்தாரின் தோஹா நகரம் 99–வது இடத்திலும், ஓமனின் மஸ்கட் மற்றும் குவைத் ஆகிய இரு நகரங்களும் 117–வது இடத்திலும், சவுதி அரேபியாவின் ஜித்தா 151–வது இடத்திலும் உள்ளன.

உலக அளவில் அதிக செலவுள்ள நகரம் பட்டியலில் முதல் இடத்தை அங்கோலா நாட்டின் தலைநகர் லுவாண்டா நகரம் இடம் பெற்று உள்ளது. 2–வது இடத்தை சீனாவின் ஹாங்காங் நகரம் பிடித்திருக்கிறது.

இந்தியாவில் மும்பை நகரமே அதிக செலவுள்ள நகரமாக குறிக்கப்பட்டு உள்ளது. இது உலக அளவில் 74–வது இடத்தை பிடித்து உள்ளது.


டெல்லி 134–வது இடத்தை பிடித்து உள்ளது. சென்னை 157–வது இடத்தை பிடித்து உள்ளது. சென்னை பெங்களூரை விட முன்னணியில் உள்ளது. பெங்களூர் 183–வது இடத்தை பிடித்திருக்கிறது. கொல்கத்தா 193–வது இடத்தை பிடித்திருப்பதாக ஆய்வு விவர பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments