பி. முஹாஜிரீன்
நாட்டின் உயர் கல்வி அபிவிருத்திக்காக அரசாங்கத்தினால் புதிய வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு கூடுதலான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சின் செயலாளர் பி. றன்புர தெரிவித்தார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் புதிதாக ரூபா. 90 மில்லியன் நிதியில் நிர்மாணிக்கப்படவுள்ள சிற்றுண்டிச்சாலைக்கான அடிக்கல் நடும் வைபவம் மற்றும் புதிதாக ரூபா 16 மில்லியன் நிதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மாணவர் விடுதி திறப்பு விழா பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ். முகம்மது இஸ்மாயில் தலைமையில் நேற்று (13) சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
உயர் கல்வி அமைச்சின் செயலாளர் பி. றன்புர தொடர்ந்து உரையாற்றகையில்,
தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஏனைய பல்கலைக்கழகங்களை விட குறுகிய காலத்துக்குள் கல்வியில் மட்டுமல்ல பௌதீக வள அபிவிருத்தியிலும் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளதையிட்டு பல்கலைக்கழக நிர்வாகத்தினரை பாராட்டுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
பல்கலைக்கழகத்தில் காணப்படும் மாணவர் விடுதி மற்றும் பௌதீக வள பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு மிக விரையில் நடவடிக்கை எடுப்பேன்.
நாட்டின் சனத் தொகைக்கேற்ப எமது நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திலும் உயர் கல்வி பயின்ற பட்டதாரிகள் உருவாக வேண்டும் என்பது அரசின் இலக்காகும். அப்போதுதான் நாடு அபிவிருத்தி அடைவதோடு சிறந்த பிரஜைகளை உருவாக்க முடியும்.
தென்கிழக்கு பல்கலைக்கழகம் இப்பிராந்தியத்திற்கு மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் அதன் கல்விச் செயற்பாட்டை விருத்தி செய்து முன்னணியில் திகழ்கின்றது. இப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ். முகம்மது இஸ்மாயிலின் பாதவிக்காலமான கடந்த ஆறு ஆண்டுகளுக்குள் பல்கலைக்கழகம் பல்வேறு வளர்ச்சிகளை கண்டுள்ளது. அந்த வகையில் நான் இவ்விடத்தில் பாராட்டுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன் என்றார்.
இவ்வைபவத்தில் அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஜெயசுந்தர, பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார் மற்றும் பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments