எட்டு ஆண்டுகளாக நடந்துவரும் ஐ.பி.எல். தொடரில், தொடர்ந்து சிறப்பாக ஆடி மற்ற அணி வீரர்கள் மற்றும் ரசிகர்களால் ஆச்சரியத்துடனும், பொறாமையுடனும் பார்க்கும் அணியாக உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.
தற்போதைய சென்னை அணியில் கேப்டன் மகேந்திர சிங் தோனி, டிவைன் பிராவோ, டு பிளிசிஸ், மைக்கேல் ஹசி, மோகித் சர்மா, அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா என பல திறமையான சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்கள் உள்ளார்கள். இவர்களை கொண்டு சிறப்பாக ஆடுவது பெரிய விஷயம் இல்லை. ஆனால் ஐ.பி.எல். தொடரின் ஆரம்ப ஆண்டுகளில் தோனி, ஹைடன் போன்ற சில முக்கிய வீரர்கள் மட்டுமே சென்னை அணியில் இருந்தார்கள். ஆனால் அப்போதும் சென்னை அணி தொடர்ந்து வெற்றி பெற்றது. இதுவரை இரண்டு முறை கோப்பையை வென்றதுடன், 3 முறை இறுதி ஆட்டத்திற்கும், 2 முறை அரையிறுதிக்கும் முன்னேறியுள்ளது சென்னை அணி. இம்முறையும் புள்ளி பட்டியலில் முதல் இடத்திலிருக்கும் சென்னை ப்ளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
சென்னை அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் கேப்டன் தோனியும், பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் ஆகியோர் தான். இருவருக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. முக்கியமாக இருவருமே தத்தம் நாட்டு அணிகளின் மிக சிறந்த கேப்டனாக செயல்பட்டவர்கள். தோனி இன்னும் இந்திய அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இருவருமே எந்த சூழ்நிலையிலும் உணர்ச்சி வசப்பட்டாதவர்கள், மேலும் கிரிக்கெட் என்பது வெறும் ரன் மற்றும் விக்கெட் எடுப்பது மட்டும் அல்ல, புத்திசாலித்தனத்துடன், சூழ்நிலையை சரியாக கணித்து அதற்கு ஏற்ப சரியான முடிவுகளை எடுப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்கள்.
இருவருமே அணியை அடிக்கடி மாற்றுவதில் நம்பிக்கை இல்லாதவர்கள். ஒரு வீரரை அணியில் இருந்து நீக்குவதன் மூலம் அவரின் ஆட்டத்திறன் உயராது, மாறாக அவர் தொடர்ந்து விளையாடுவதன் மூலமே ஆட்டத்திறன் மேம்படும் என நம்புபவர்கள். இந்த தொடரில் சரியாக பந்து வீசாத ஜடேஜாவை அணியில் இருந்து நீக்கவேண்டும் என பலரும் கூறிய போதும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்தனர். அதன் பலனாக கடந்த சில ஆட்டங்களாக ஜடேஜா சிறப்பாக பந்து வீசி அணியின் வெற்றிக்கு உதவி வருகிறார்.
மற்ற அணிகள் ஒவ்வொரு போட்டியிலும் இரண்டு மூன்று வீரர்களை மாற்றிய போது, தற்போது நடந்துவரும் தொடரில் சென்னை அணி தான் விளையாடிய முதல் 7 போட்டிகளில் ஒரே ஒரு மாற்றத்தைக்கூட செய்யவில்லை. மற்ற அணிகள் பல மணி நேரம் ஆலோசனை கூட்டம் நடத்தி புதிய திட்டங்களை வகுத்துக்கொண்டு களத்துக்கு வருகின்றன. ஆனால் முன் முடிவுகளுடன் விளையாடும் போது புதிய சிந்தனைகள் வருவது தடைபடுவதுடன், முன்பே போட்ட திட்டங்கள் தோல்வி அடையும் போது அடுத்து என்ன செய்வது என்று தடுமாற நேரிடலாம். எனவே திறந்த மனநிலையுடன் விளையாடுவதையே விரும்புகிறேன் என ஜென் துறவியை போல பேசுகிறார் தோனி.
நேற்று பஞ்சாப்பை எளிதாக வீழ்த்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தோனி மேற்கூறிய கருத்தையே தெரிவித்துள்ளார். அவரிடம் உங்கள் அணியின் தொடர் வெற்றிக்கு காரணம் என்ன என்று கேட்டபோது ”நாங்கள் அனைத்தையும் எளிதாக எடுத்து கொள்கிறோம். புதிய விஷயங்களை ஏற்றுக்கொள்கிறோம், தொடர்ந்து எங்களை மேம்படுத்திக்கொள்கிறோம். ஆரம்பத்தில் இருந்தே முக்கிய வீரர்களை மாற்றாமல் இருப்பதும், தொடர்ந்து பல ஆண்டுகள் சேர்ந்து விளையாடுவதால் வீரர்கள் தங்கள் திறமை மேம்படுத்திக்கொண்டுள்ளனர். மேலும் நாங்கள் இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பு அளிப்பது இல்லை ஆனால் புதிய கேப்டன்களை உருவாக்குகிறோம்” என தெரிவித்துள்ளார்.
இப்போதுவுள்ள வீரர்கள் மற்றும் தோனி - ஸ்டீபன் பிளம்மிங் கூட்டணி தொடரும் பட்சத்தில் இன்னும் பல ஆண்டுகளுக்கு ஐ.பி.எல். தொடரில் சென்னை அணியின் ஆதிக்கம் தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை.
0 Comments