முஸ்தபா முகம்மது மஸ்தான்
(B.A.Sp.Hons., M.Phil, Dip In Ed.)
(முன்னாள் பல்கலைக்கழக புவியியல் துறை
விரிவுரையாளர்)
இவ்வாய்வுக்
கட்டுரை வில்பத்து சரணாலய எல்லைக்குள் மீள்குடியேற்றம் அல்லது வீடமைப்பு திட்டம்
நடைபெறுகின்றதா என்பதை ஆய்வு செய்கிறது.
வில்பத்து தேசிய
பூங்கா.
.................................................
இலங்கையில்
இரண்டாவது பரப்பளவில் கூடியதான வில்பத்து சரணாலயம் ஏறத்தாள 130,000 ஹெக்டேயர் பரப்பளவைக்
கொண்டதாகும். இது புத்தளம் மாவட்டத்தின் வடக்கிலும் அனுராதபுர மாவட்டத்தின்
வடமேற்கிலும் பரவி உள்ளது. இத்தேசிய வனத்தின் ஒரு பகுதி மன்னார் மாவட்டத்தில்
முசலி பிரதேச செயலகப் பிரிவின் தென் எல்லையாக அமைந்துள்ள மோதரகம ஆற்றின் ஒதுக்கு காடாகக்
காணப்படுகிறது.
இலங்கையில் வனங்களையும்
வன விலங்குகளையும் பாதுகாப்பதற்கு தீவிர பாதுகாப்பான காடுகள் (யால, ஹக்கல)
இயற்கைப் பாதுகாப்பான காடுகள் (மின்னேறிய, கிரித்தல) சரணாலயங்கள் (விக்டோரியா
ரன்தெனிகல, தேசிய பூங்காக்கள் (யால, வில்பத்து) என பல முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
இவ்வகையில் வில்பத்து 1937ல் வனவிலங்கு தாவரங்களைப் பாதுகாக்கும் கட்டளைச்
சட்டத்தின் கீழ் தேசிய பூங்காவாக பிரகடனப்படுத்தப்பட்டது.
வில்பத்து
சரணாலயத்தின் எல்லையில் அமைந்துள்ள குடியிருப்புகளாக தெற்கே புத்தளம் மாவட்டத்தில்
உள்ள இலவன்குளம் கிழக்கே அனுராதபுர மாவட்டத்தில் அடங்கும் தல்கஸ்வெவ, ஹூனுவிலகம,
மகாவிலாச்சிய, பேமடுவ, தம்பியாவ, தந்திரிமலை, நொச்சிக்குளம், கப்பாச்சி, போன்ற கிராமங்கள் அமையப்பெற்றுள்ளன. இதன் வடமேற்கில்
மன்னார் மாவட்டத்தில் அடங்கும் முள்ளிக்குளம் மறிச்சுக்கட்டி, பாலைக்குழி மற்றும்
கரடிக்குழி ஆகிய கிராமங்கள் மன்னார் மாவட்டத்தில் வில்பத்து சரணாலய எல்லைக்கு
வெளியே அமைந்துள்ளன.
(பார்க்க படம் –1 வில்பத்து அமைவிடமும் எல்லைக்
கிராமமும்.)
வியாயடி
நீர்பாசனத் திட்டம்.
.......................................................................
வில்பத்து
சரனாலயத்தையும் வடமாகாணத்தையும் பிரிக்கும் எல்லையாக முசலி பிரதேசத்தின் தென்
எல்லையில் அமைந்துள்ள உப்பாற்றின் (மோதரகம ஆறு ) வடக்கு எல்லையில் அவ்வாற்றுக்குச்
சமாந்தரமாக காணப்படுவதே வியாயடி நீர்பாசனத் திட்டமாகும். இரண்டாம் அக்கர போதி
மன்னனின் காலத்திற்கு முன்னரே அமைக்கபட்ட (புரோகியர் 1937) இந்நீர்பாசனத் திட்டம்
இறுதியாக 1962ல் புனரமைக்கப்ட்டது. உப்பாற்றின் முகத்துவாரத்திலிருந்து 7 கிலோமீட்டர் கிழக்கே
காணப்படும் வியாயடி நீர்த்தேக்கம் அதற்கு மேல் 10 கிலோமீட்டர் கிழக்கில்
பில்மடு எனும் இடத்தில் உப்பாற்றில் அமைக்கப்பட்டுள்ள அணைக்கட்டில் இருந்து
நீரினைப் பெற்று மரிசுக்கட்டி பிரதேசத்தில் காணப்படும் 18 குளங்களுக்கும் அதன் கீழ்
உள்ள 2200 ஏக்கர் நெற்செய்கை
பரப்புக்கும் நீரினை வழங்குகிறது.
(பார்க்க படம் –2 வியாயடி நீர்பாசன திட்டம்)
மறிச்சுக்கட்டி
பிரதேசம்:
..............................................................
வியாயடி
நீர்பாசனத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட குடியிருப்புகளே மறிச்சுக்கட்டி
பிரதேச குடியிருப்புகளாகும். இங்கு மறிச்சுக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குளி,
முள்ளிக்குளம் ஆகிய குடியியருப்புகள் 165 சதுர கிலோமீட்டர் பரப்பினைக்
கொண்டுள்ளன. இங்குள்ள குடியிருப்புக்களில் தெற்கே உப்பாற்று முகத்தில்
முள்ளிக்குளமும் கிழக்கே புத்தளம் மன்னார் வீதியோரமாக மறிச்சுக்கட்டியும் இவ்வீதியிலிருந்து
ஒரு கிலோமீற்றர் கிழக்கில் பாலைக்குளியும் மறிச்சுக்கட்டிக்கு வடமேற்கே மூன்று
கிலோமீற்றர் தொலைவில் கரடிக்குளி கிராமமும் புராதன குடியிருப்புகளாக
அமையபெற்றிருந்தன.
இம்மக்களின் பிரதான வாழ்வாதாரமாக விவசாயம்
காணப்பட்டது. வியாயடி நீர்பாசனத் தொகுதியின் கீழ் காணப்படும் விவசாய நிலங்கள்
இம்மக்களால் பரம்பரை பரம்பரையாக பயன்படுத்தப்பட்டு வந்தன. மேலும் கரடிக்குளி
முள்ளிக்குளம் மக்களின் பிரதான தொழிலாக மீன்பிடி காணப்பட்டது. அத்துடன் பருவ
காலங்களில் காடு சார்ந்த சேகரித்தல் தொழிலிலும் ஈடுபட்டு வந்தனர்.
இன்று
ஆச்சரியப்படத்தக்க வகையில் மறிச்சுக்கட்டிப் பிரதேச மக்களின் யானை பிடித்தல்
முத்துக்குளித்தல் மற்றும் பெயர்ச்சிப் பயிர்ச்செய்கை என்பவற்றில் மிக நீண்ட
காலமாக சாதனைகள் படைத்த வரலாறும் இங்கு காணப்படுகிறது.
(பார்க்க படம் -3 மறிச்சுக்கட்டி பிரதேசம்.)
பலவந்த
வெளியேற்றம்:
................................................
இலங்கையின் இனப்பிரச்சினை
தீவிரமடைந்த போது 1990ம் ஆண்டு ஒக்டோபார் மாதம் இலங்கை அரசுக்கெதிராக ஆயுத
ரீதியாக போராடி வந்த தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் தனி ஈழக் கோரிக்கையில்
(ஆயுத முனையில்) வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் காணப்பட்ட ஒரு
லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பலவதமாக வெளியேற்றப்பட்டனர். இவ்வெளியேற்றத்தின்
போது மறிச்சுசுக்கட்டி பிரதேசத்தில் பன்னெடுங்காலமாக வாழ்ந்துவந்த முஸ்லிம்களும்
பலவந்தமாக வெளியேற்றப்பட்டு புத்தளம் மாவட்டத்தில் அகதிகளாக வாழ்ந்து வந்தனர்.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேல் அகதி வாழ்க்கை நீடித்தமையால் வாழ்விட மற்றும்
அடிப்படை வசதிகள் இன்றி பல்வேறு சவால்களுக்கும் முகம்கொடுத்து வந்த இம்மக்கள் தமது
தாயகத்தில் மீளக்குடியேறுவதை ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர்.
மீள்குடியேற்றம்:
..............................
2002-02-22 இல் மேற்கொள்ளப்பட்ட ரணில் பிரபா சமாதன உடன்படிக்கையைத்
தொடர்ந்து வடக்கு முஸ்லிம்கள் தமது தாயகத்தை தரிசிக்கலாயினர். வடக்கின் தமது
பூர்வீக குடியிருப்புகளில் தமது வாழ்வாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்நிலையில்
2004,2005 ஆண்டுகளில்
மீண்டும் யுத்தம் தீவிரமடைந்த போது இம்மக்கள் பூர்வீக கிராமங்களை விட்டு மீண்டும்
வெளியேற வேண்டி ஏற்பட்டது. இதன்போது 2007 ல் முசலிப் பிரதேசத்தைக்
கைப்பற்றும் நோக்கில் மேற்கொள்ளபட்ட இராணுவ நகர்வின் போது இங்கு வாழ்ந்த மக்கள்
முற்றுமுழுதாக வெளியேறினர். 2009ம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகள் தோற்க்கடிக்கப்பட்டமையினால்
வடக்கு முஸ்லிம்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலின்றி மீளக் குடியேறும் வாய்ப்புக்
கிடைத்தது.
மீள்குடியேற்ற
சவால்கள்:
.................................................................
வடக்கு
முஸ்லிம்கள் இரண்டு தசாப்தங்களாக எதிர்பார்த்திருந்த மீள்குடியேற்ற சூழ்நிலை 2009இன் பின்னர் ஏற்பட்டது. எனினும் இம்மக்கள்
மீள்குடியேறுவதில் பல்வேறு சவால்களை எதிர்நோக்கினர். அவர்களின் பூர்வீக
குடியிருப்புக்கள், வயல்நிலங்கள் முழுமையாக காடு படர்ந்திருந்தன. குளங்கள்
நீர்ப்பாசனக் கட்டமைப்புக்கள் சிதைந்திருந்தன. பாடசாலைகள், சமையஸ்தலங்கள் முழுதாக
சிதைவுற்றிருந்தன. இந்நிலையில் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில்
ஆக்கரீதியான முயற்சிகள் இலங்கை அரசாங்கத்தினாலோ சர்வதேச சமூகத்தினாலோ
முன்னெடுக்கப்படவில்லை. எனினும் தமது சுயவிருப்பின் பேரில் மீளக்குடியேற
முயற்சித்த இம்மக்களுக்கு சில அத்தியாவசியத் தேவைகள் வழங்கப்பட்டு வந்தன.
மீள்குடியேற்ற
வீடமைப்புத் திட்டம்:
...........................................................................................
இருபது வருடங்களாக
தமது பூர்வீகத்தை விட்டு வெளி மாவட்டங்களில் வாழ்ந்து வந்த மக்கள் மீளக் குடியேறுவதற்கான
வீடு மற்றும் அடிப்படை வசதிகளை அமைத்துக் கொடுக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
எனினும் அப்போது நடைமுறைப்படுத்தப்பட்ட இந்திய உதவி வீட்டுத்திட்டம் இம்மக்களின்
வீட்டுப் பிரச்சினைக்கு பேருதவியாக அமைந்தது. வடக்கிலுள்ள பல கிராமங்களுக்கும் அவை
பகிர்ந்தளிக்கப்பட்டன. இருப்பினும் தமது பூர்வீகத்தில் மீளக் குடியேற விரும்பிய
மக்களின் மிகக் குறைந்த தொகையினருக்கே இவ்வீட்டுத்திட்டம் பயனளித்தது.
இதனால்
வேறுவகையிலும் வீடுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய நிர்பந்தம் சமூக, அரசியல்
தலைமைகளுக்கு ஏற்பட்டது. இந்நிலையில் வெளிநாட்டு உதவி வீட்டுத்திட்டங்கள் சிலவும்
கிடைக்கப்பெற்றன. மறிச்சுக்கட்டி பிரதேசத்தில் கத்தார் அரசாங்கத்தின் நிதி
உதவியுடன் அல்ஜாசிம் வீட்டுத் திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.
1990 ம் ஆண்டு பலவந்த வெளியேற்றத்தின் போது மறிச்சுக்கட்டி,
பாலைக்குழி, கரடிக்குளி ஆகிய கிராமங்களின் 521 குடும்பங்களைச் சேர்ந்த 1980 பேர் வெளியேற்றப்பட்டனர்.
20 வருடங்களின்
பின்னரான மீள் குடியேற்றத்தின் போது 1320 குடும்பங்களைச் சேர்ந்த 4220 பேராக அதிகரித்துள்ளனர்.
இம்மக்களுக்குத் தேவையான வீட்டுக் காணிகளை பெற்றுக்கொள்வது பெரும் சவாலாகக்
காணப்பட்டது.
கிராம
அமைவிடங்களும் வீட்டுக் காணியும்:
............................................................................................
மறிச்சுக்கட்டி
பிரதேசத்தில் காணப்பட்ட குடியிருப்புகள் குளம் மற்றும் தாழ்நில நெற்செய்கைப்
பிரதேசங்களின் சூழலில் சிதறலாக குடியிருப்பு நிலங்கள் காணப்பட்டன. இவை அதிகரித்த
மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவாகவே காணப்பட்டன.
இங்குள்ள
பாலைக்குழி கிராமத்தை நோக்கின் தெற்கில் கால்வாய், குளம் கிழக்கில் காடும் மேற்கில்
பிரதான வீதி மற்றும் மறிச்சுக்கட்டி குடியிருப்பும் காணப்பட்டன. இதேபோல் மறிச்சுக்கட்டி
குடியிருப்புக்கு தெற்கே மோதரகம ஆறும் கிழக்கே குளம், மேற்கு முள்ளிக்குளம்
கிராமமும் நெற்செய்கைக் காணிகளும் காணப்பட்டன. அவ்வாறே பாலைக்குழி கிராமத்தின்
தெற்கில் முள்ளிக்குளம், மேற்கில் குளம் வயல் நிலங்களும் இந்து சமுத்திரமும் காணப்பட்டன.
எனவே
இக்கிராமங்களின் அதிகரித்த சனத்தொகைக்குரிய வீட்டுக் காணிகள் காணப்பட்ட வடக்குப்
பகுதி நோக்கி குடியிருப்புகளை அமைக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
மேலும் இப்பிரதேச
மக்களின் குடியிருப்பு மற்றும் வயல் நிலங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் 300 ஏக்கர் முள்ளிக்குள
கிராமப்பகுதி முற்றுமுழுதாக கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல்
மரிசுக்கட்டி கிராமத்தின் மத்தியில் உள்ள மரிக்காயர் தீவுப் பிரதேசம் இராணுவ
முகாமாகக் காணப்படுகிறது. எனவே இப்பிரதேச மக்களின் பூர்வீகக் குடியிருப்புக்களாகக்
காணப்பட்ட இவ்விரு பிரதேசங்களிலும் வாழ்ந்த மக்களுக்கும் வதிவிட காணிப் பிரச்சினை
ஏற்பட்டது. அத்துடன் வியாயடி பிரதான நீர்ப்பாசனக் குளத்தின் தெற்கு பிரதேசத்தில்
அமைந்துள்ள சுமார் நூற்றி என்பது ஏக்கர் பரப்புடைய இம்மக்களின் பூர்வீக வயல்
நிலங்களும் கடற்படை முகாமிட்டு அவர்களாலே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போதைய விமர்சனங்கள்:
..........................................................
மரிசுக்கட்டி
பிரதேசத்தில் பல நூற்றாண்டுகளாக பரம்பரையாக வாழ்ந்து வளம் பெருக்கிய மக்கள் கடந்த
இரண்டு தசாப்த காலமாக அங்கு வாழவில்லை. இதனால் குடியிருப்பு சூழல் மற்றும்
பொருளாதார அடிப்படைகள் அழிவடைந்த அதேவேளை காடுகள் சூழ்ந்துகொண்டன. இந்நிலையில்
மேற்கொள்ளப்பட்ட இம்மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் வீடமைப்புத் திட்டங்கள்
பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்கவேண்டி ஏற்பட்டுள்ளது.
வில்பத்து
சரணாலயத்தில் குடியேற்றம் நிகழ்கிறதா?
இலங்கை நிலஅளவை
திணைக்களத்தால் 1938 ஆண்டு வெளியிடப்பட்ட ஓரங்குலபடம், 1992ல் வெளியிடப்பட்ட (1:250
000 அளவுத்திட்ட) மெற்றிக்
தேசப்படம், 1990ம் ஆண்டு வெளியிடப்பட்ட (1:100 000) நிலப்பயன்பாட்டுப் படம், 2003ல் வெளியிடப்பட்ட 1:500
000 மெட்ரிக் படம், 1994ல் வெளியிடப்பட்ட 1:50
000 வீதிப்படம் ஆகிய
தேசப்படங்கள், 1956ல் எடுக்கப்பட்ட 1:40
000 அளவுடைய விமான
ஒளிப்படங்கள் , இன்றுவரை
வெளியிடப்படுகின்ற செய்மதிப்படங்கள் போன்ற அணைத்து படங்களையும் அவதானிக்கின்ற போது
வில்பத்து சரணாலய எல்லைக்குள்ளோ அதனைச் சூழ்ந்துள்ள ஒரு மைல் வரையான பாதுகாக்கப்பட்ட
வன எல்லைக்குள்ளோ வடமாகாண முஸ்லிம் குடியிருப்பு எதுவும் அமைக்கப்படவில்லை.
பூர்வீக
குடியிருப்புகளுக்கு வடக்காகவே தற்போதைய குடியிருப்புகள் அமைக்கப்படுகின்றன.
அதுவும் இங்கு
மறிச்சுக்கட்டி பிரதேச குடியிருப்பாளர்களுக்கு மட்டுமன்றி முள்ளிக்குளம் கிராம
மக்களும் இங்கு குடியேற்றப்பட்டுள்ளனர். அத்துடன் இப்பிரதேசத்திற்கு வடக்காக
அமையப்பெற்றுள்ள கொண்டச்சி, தம்பட்ட முதளிக்கட்டு, கூளான்குளம், முசலி மற்றும்
புதுவெளி கிராமங்களில் வாழ்ந்த காநியற்றவர்களுக்கான வீட்டுக் காணிகளும் இங்கு
வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதனை
உறுதிப்படுத்தும் வகையில் தற்போதைய மின்சக்தி எரிசக்தி அமைச்சரும் முன்னாள்
சுற்றாடல் துறை அமைச்சருமான கெளரவ சம்பிக்க ரணவக்க அவர்கள் 11.05.2015 ஊடக மாநாட்டில்
எழுப்பப்பட்ட கேள்விக்கு பின்வருமாறு பதிலளித்தார்கள். “வில்பத்து சரணாலயத்தில்
எதுவித சட்டவிரோத குடியிருப்புகளும் அமைக்கப்படவில்லை. மேலும் வில்பத்து
சரணாலயத்திலிருந்து ஒரு மைல் வரையான பிரதேசம் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.
இப்பகுதியில் எதுவித அபிவிருத்திப் பணிகளோ மீள்குடியேற்றமோ மேற்கொள்ள முடியாது. எதுவித சட்டவிரோத
குடியேற்றமும் இங்கு இல்லை என உறுதியாகக் கூறுகிறேன்”.
அரச காணிகளில்
அத்துமீறி குடியேறினார்களா?
மறிச்சுக்கட்டி
பிரதேசத்தில் தற்போது ஏற்படுத்தப்பட்டு வரும் குடியிருப்புக்கள் பூர்வீகமாக
மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த காணிகளிலேயே ஆகும். இங்குள்ள குடியேற்ற
திட்டங்களில் பெரும்பாலானவை அப்பிரதேச தனியார் பலருக்கு அனுமதிப்பத்திரம்
வழங்கப்பட்ட காணிகளாகும். அச்சூழலில் சில வீடமைப்புத்திட்டங்கள் அரச காணிகளிலும்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் இக்காணிகள் உரிய சட்ட நியமங்களின் அடிப்படையிலேயே
பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.காணியற்றவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு
அவர்களுக்கான காணிகள் காணிக்கச்சேரி மூலமாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு காணித்
துண்டொன்றை பெற்றுக்கொள்ள தகுதி உடையோரின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட்டு
பொருத்தமான காணிகள் பிரதேச செயலக அதிகாரிகளினால் அளவீடு செய்யப்பட்டு
பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
இக்காணிப்
பங்கீட்டு வரைபடங்கள் பெயர்ப்பட்டியல் அனுமதிப்பத்திரங்கள் பிரதேச செயலகத்தில்
காணப்படுகின்றன. இக்காணிகளை அடையாளப்படுத்தல் மற்றும் பற்றைக் காடுகளை அகற்றி
துப்பரவு செய்யும் பணிகள் அரசாங்க அதிபர், பிரதேச செயலாளரின் அனுமதியுடன்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஒதுக்குக்
காடுகளில் குடியேற்றங்கள் காணப்படுகின்றனவா?
மறிச்சுக்கட்டி
மீள்குடியேற்ற பிரதேசத்தில் மூன்றுவகையான ஒதுக்குக்காடுகள் காணப்படுகின்றன. ஒன்று
- வில்பத்து சரணாலயத்தின் வடமேற்கு எல்லை ஓரமாக உள்ள ஒரு மைல் வரையான
பாதுகாக்கப்பட்ட பிரதேசம். இரண்டு - உப்பாறு (மோதரகம) வடிநிலப்பிரதேசம். மூன்று - கல்லாறு
வெள்ளச்சமவெளி வடிநிலப் பிரதேசம்.
மேற்குறிப்பிட்ட
பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசங்கள் தெளிவாக எல்லையிடப்பட்டுள்ளன. வரைபடங்கள் மற்றும்
நேரடி அவதானிப்புகளில் இவ்வெல்லைகளை தெளிவாகக் காணலாம். இவ்வெல்லைகளுக்குள்
மீள்குடியேற்ற கிராமங்களோ கட்டிடங்களோ அமைக்கப்படவில்லை. என்பது தெளிவாகிறது.
இப்பிரதேசத்தில்
அமைக்கப்பட்டு வருகின்ற குடியிருப்புகளுக்கு மத்தியில் மறிச்சுக்கட்டி-சிலாவத்துறை
வீதியில் வனவிலங்குகள் நடமாடும் பிரதேச அறிவித்தல் பலகை இடப்பட்டுள்ளது. இவ்வாறான
அறிவித்தல்கள் இலங்கையின் பல பிரதான வீதிகளில் காணப்படுகின்றன. இவை பயணிகளின்
பாதுகாப்பை கருத்திற்கொண்ட வழிகாட்டுதலே ஆகும். ஆனால் ஊடகங்கள் இதனை சரணாலயங்களாக
காட்ட முயற்சிப்பது விந்தையாக உள்ளது.
வீட்டுத்திட்டதிற்கான
அனுமதி பெறப்பட்டதா?
நாட்டின்
எந்தவொரு பிரதேசத்திலும் மேற்கொள்ளப்படும் பெரியளவிலான நிர்மானப் பணிகள் மற்றும் அபிவிருத்தித்
திட்டங்களுக்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை (Central Environmental
Authority) இன் எழுத்து
மூல அனுமதி பெறப்படவேண்டும். தேவையேற்படுமிடத்து
குறிப்பிட்ட நிர்மாண பணி தொடர்பான (Initial Environmental
Examination) ஆரம்ப
சுற்றாடல் பரீட்சை அறிக்கை மற்றும் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை (EIA –
Environmental Impact Assessment), சூழல் முகாமைத்துவ திட்ட அறிக்கை (Environmental
Management Plan) போன்றவை
தயாரிக்கப்படவேண்டும். மேலும், பாதுகாக்கப்பட்ட வன ஒதுக்கீட்டுப் பகுதிகளில்
நிர்மாணப் பணி ஏதும் மேற்கொள்ளப்படுமிடத்து வன பாதுகாப்பு பணிப்பாளரின் எழுத்துமூல
அனுமது பெறப்படவேண்டும்.
மறிச்சுக்கட்டி
பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடமைப்பு திட்டமானது புதிதான ஓர் இடத்தில்
அமைக்கபட்ட ஒன்றல்ல. மாறாக பல நூற்றாண்டுகளாக மக்கள் வாழ்ந்து வந்த பல்வேறு விவசாய
கால்நடை வளர்ப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தி வந்த பூர்வீகக் காணிகளிலே
மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் இவை பாதுகாக்கப்பட்ட வனங்களில் மேற்கொள்ளப்படவும்
இல்லை. எனவே இவ்வீட்டுத் திட்டங்களுக்கு மேற்குறிப்பிட்ட வகையான அனுமதிகள்
பெறப்படவேண்டிய அவசியமும் இல்லை.
முடிவுரை:
இலங்கைத்திரு
நாட்டில் பூர்வீகக் குடிகளான வடக்கு முஸ்லிம்கள் பரம்பரையாக வடக்கில்
வாழ்ந்துவந்தார்கள். இவர்கள் தமது வாழ்விடங்கள் மற்றும் பொருளாதார
அடிப்படைகளிலிருந்து ஆயுதமுனையில் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள். அத்துடன் கடந்த
இருபது வருடங்களாக அகதிமுகாம்களில் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வந்தமையால்
கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். எனவே இவர்களின் மேற்குறிப்பிட்ட நிலையினை
கருத்திற்கொண்டு இம்மக்களுக்கு பொருத்தமான மீள்குடியேற்ற, வீட்டுத்திட்ட ஏனைய
உதவிகளை செய்துகொடுக்க வேண்டியது அரசாங்கத்தினதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளினதும்
தலையாயக் கடமையாகும்.
அகதிச் சூழலில்
மோசமாகப் பாதிக்கப்பட்ட இம்மக்களின் கடந்தகால தற்கால கசப்பான அனுபவங்கள் ஊடாக
இம்மக்களின் உண்மை நிலையினை தெளிவுபடுத்தி சராசரி பிரஜைக்கான உரிமைகளைப்
பெற்றுக்கொடுக்க வேண்டியது ஊடகங்களின் தார்மீகக் கடமையாகும்.
எனவே தற்போது
விமர்சிக்கப்படுகின்ற வடக்கு முஸ்லிம்களின் குறிப்பாக மறிச்சுக்கட்டி பிரதேச
மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக எதிர்மறையான கண்ணோட்டம் உடையவர்கள் குறிப்பிட்ட
பிரதேசத்திற்கு சென்று உண்மைகளை சரியாக அறிந்து அவற்றை தெளிவுபடுத்த வேண்டுமே தவிர
தவறான கற்பிதங்களை பல்லின சமூகத்திற்கு மத்தியில் பரப்பாது இன ஐக்கியத்தை
உருவாக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும். அரசியல் ரீதியான முரண்பட்ட
கருத்துடையவர்கள் தங்களது கருத்துப் பரிமாற்றத்திற்காக அப்பாவி மக்களின் அடிப்படைப்
பிரச்சினைகளை எதிர்மறையாகப் பயன்படுத்தலாகாது.
வடமாகாண
முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்படாமல் அவரவர் பூர்வீகங்களில்
தொடர்ந்தும் வாழ்ந்திருந்தால் அவர்களின் குடியிருப்பு மற்றும் பொருளாதார நிலங்கள்
இன்று இருப்பதைப் போல் பல மடங்கு விஸ்தரிக்கப்பட்டிருக்கும். எனினும் கடந்த இருபது
வருடங்களாக நாளாந்தம் மேற்கொள்ளப்படவேண்டிய நில விஸ்தீரணம் குறிப்பிட்ட ஒரு சில
ஆண்டுக்குள் சடுதியாக மேற்கொள்ளப்படுவதே இவ்வகை விமர்சனங்களுக்கு காரணமாகும். இவ்
உண்மையினைப் புரிந்துகொண்டு அதனை தெளிவுபடுத்த வேண்டியது ஊடகங்களின் தார்மீக கடமை
என்பதை இக்கட்டுரை மூலம் உணர்த்த விரும்புகிறேன்.




0 Comments