புங்குடுதீவு மாணவியின் கொலையைக் கண்டித்து வடக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். வடக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் அசாதாரண சூழலின் பின்னணியில் வேறு சிலரின் சூழ்ச்சிகள் உள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இக் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய குற்றவாளிகள் எப்படியேனும் தண்டிக்கப்படுவார்கள். ஆனால் பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
புங்குடுதீவு மாணவி கொலையுடன் தொடர்புபடுத்தி வடக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை மனிதாபிமானமற்ற வகையில் நடந்தேறியுள்ளது. பாடசாலை மாணவி மீதான வல்லுறவு மற்றும் அவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவருக்கும் தக்க தண்டனையை அரசாங்கம் பெற்றுக் கொடுக்கும். அதேபோல் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்ப சூழலையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ளும்.
இந்த சம்பவம் மிகவும் மோசமானதொரு விடயம். ஆயினும் இவ் விடயத்தில் சட்டப்படி தண்டனைகளை பெற்றுக்கொடுக்க வேண்டுமே தவிர பொது மக்கள் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது. அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் தமது கடமைகளை சரிவரச் செய்துவருகின்றனர். குற்றவாளிகள் என்ற சந்தேகத்தில் ஒன்பது நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றது. அவர்கள் குற்றவாளிகள் என உறுதிப்படுத்தப்பட்டால் சட்டத்திற்கு அமைய தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும். ஆனாலும் இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து வடக்கில் வேறு விதமான நடவடிக்கைகள் தலை தூக்கியுள்ளன. வடக்கில் கடையடைப்புகள் மற்றும் ஹர்த்தால் செயற்பாடுகள் மக்களால் மேற்கொள்ளப்படுகின்றமைக்கு பின்னணியில் வேறு சிலரின் அழுத்தங்கள் அமைந்துள்ளன.
வடக்கில் வாழும் சிங்கள மக்களை அங்கிருந்து வெளியேறக் கோரி அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதுடன் பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத செயற்பாடுகளை மீண்டும் வடக்கில் பரப்புவதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே இவற்றை உடனடியாக கட்டுப் படுத்துவதற்கான நடவடிக்கைகளை பாதுகாப்பு பிரிவினர் மேற்கொள்ள வேண்டும். வடக்கில் வன்முறை சம்பவங்களை மேற்கொள்ளும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
மாணவியின் கொலையை எந்த வகையிலும் நியாயப்படுத்தி குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. ஆனால் அதை காரணம் காட்டி பொது மக்கள் சட்டத்தை கையில் எடுப்பதற்கு எந்த உரிமையும் இல்லை. எனவே வடக்கில் நடந்துவரும் அசாதாரண சூழலை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். வடக்கில் வாழும் மக்களின் நிலைமைகளை குழப்பும் வகையில் ஒரு சிலர் தூண்டுதல்களை மேற்கொள்கின்றனர். வேறு ஒரு சிலர் எய்துள்ள அம்பு புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் தொடர்பு படுத்தப்பட்டு பிரிவினைவாதத்துக்கான சூழ்ச்சியை பலப்படுத்தியுள்ளது.
வடக்கில் பிரிவினைவாதத்துக்கான இறுக்கமான முடிச்சை போட முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன. அதை உடனடியாக கட்டுப் படுத்த வேண்டும். வடக்கில் பாது காப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் குறிப் பிட்டார்.


0 Comments