ஜிப்ரீல் (அலை) என் கையைப் பிடித்து என்னை அழைத்துக் கொண்டு வானத்திற்கு ஏறிச் சென்றார்கள். (பூமிக்கு) அண்மையிலுள்ள (முதல்) வானத்தை அடைந்த போது, வானத்தின் காவலரிடம், "திறங்கள்'' என்று கூறினார்கள். அதற்கு அவர், "யார் அது?'' என்று கேட்டார். "இதோ ஜிப்ரீல்'' என்று ஜிப்ரீல் (அலை) பதிலளித்தார். அதற்கு "உங்களுடன் வேறெவராவது இருக்கின்றாரா?'' என்று கேட்கப்பட்டது. அவர், "என்னுடன் முஹம்மது இருக்கின்றார்'' என்று பதிலளித்தார். "(அவரை அழைத்து வரச் சொல்) அவரிடம் (உம்மை) அனுப்பப்பட்டிருந்ததா?'' என்று கேட்கப்பட்டது. அவர், "ஆம், திறங்கள்'' என்றார்.
(முதல் வானத்தின் கதவு திறக்கப்பட்டு) நாங்கள் வானத்தில் மேலே சென்ற போது அங்கே ஒரு மனிதர் இருந்தார். அவரது வலப்பக்கத்திலும் மக்கள் இருந்தனர். இடப்பக்கத்திலும் மக்கள் இருந்தனர். அவர் தனது வலப்பக்கம் பார்க்கும் போது சிரித்தார். இடப்பக்கம் பார்க்கும் போது அழுதார். (பிறகு என்னைப் பார்த்து), "நல்ல இறைத் தூதரே! வருக! நல்ல மகனே வருக!'' என்று கூறினார். நான், "ஜிப்ரீலே! இவர் யார்?'' என்று கேட்டேன். அவர், "இவர் ஆதம் (அலை) அவர்கள். அவருடைய வலப்பக்கமும் இடப்பக்கமும் இருக்கும் மக்கள் அவருடைய சந்ததிகள். அவர்களில் வலப்பக்கம் இருப்பவர் சொர்க்கவாசிகள். இடப்பக்கத்தில் இருப்பவர்கள் நரகவாசிகள். ஆகவே தான் அவர் வலப்பக்கத்திலுள்ள தம் மக்களைப் பார்க்கும் போது சிரிக்கின்றார். இடப்பக்கம் பார்க்கும் போது அழுகின்றார்'' என்று பதிலளித்தார்.
(அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
நூல்: புகாரி 3342)
பிறகு நாங்கள் இரண்டாம் வானத்திற்குச் சென்றோம். "யார் அது?'' என்று வினவப்பட்டது. அவர், "ஜிப்ரீல்'' என்று பதிலளித்தார். "உங்களுடன் இருப்பவர் யார்?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "முஹம்மத்'' என்று பதிலளித்தார். ''அவரிடம் ஆள் அனுப்பப்பட்டதா?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "ஆம்'' என்று பதிலளித்தார். "அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை'' என்று சொல்லப்பட்டது.
பிறகு நான் ஈஸா (அலை) அவர்களிடமும், யஹ்யா (அலை) அவர்களிடமும் சென்றேன். அவ்விருவரும், "சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவு நல்வரவாகட்டும்'' என்று சொன்னார்கள்.
பிறகு நாங்கள் மூன்றாவது வானத்திற்குச் சென்றோம். "யார் அது?'' என்று வினவப்பட்டது. அவர், "ஜிப்ரீல்'' என்று பதிலளித்தார். "உங்களுடன் இருப்பவர் யார்?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "முஹம்மத்'' என்று பதிலளித்தார். ''அவரிடம் ஆள் அனுப்பப்பட்டதா?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "ஆம்'' என்று பதிலளித்தார். "அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை'' என்று சொல்லப்பட்டது.
பிறகு நான் யூசுஃப் (அலை) அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களுக்கு ஸலாம் உரைத்தேன். அவர்கள், "சகோதரரும் நபியுமாகிய உங்கள் வரவு நல்வரவாகட்டும்'' என்று சொன்னார்கள்.
பிறகு நாங்கள் நான்காவது வானத்திற்குச் சென்றோம். "யார் அது?'' என்று வினவப்பட்டது. அவர், "ஜிப்ரீல்'' என்று பதிலளித்தார். "உங்களுடன் இருப்பவர் யார்?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "முஹம்மத்'' என்று பதிலளித்தார். ''அவரிடம் ஆள் அனுப்பப்பட்டதா?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "ஆம்'' என்று பதிலளித்தார். "அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை'' என்று சொல்லப்பட்டது.
நான் இத்ரீஸ் (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு ஸலாம் உரைத்தேன். அவர்கள், "சகோதரரும் நபியுமாகிய உங்கள் வரவு நல்வரவாகட்டும்'' என்று சொன்னார்கள்.
(அறிவிப்பவர்: மாலிக் பின் ஸஃஸஆ (ரலி),
நூல்: புகாரி 3207)
"அவரை உயரமான தகுதிக்கு உயர்த்தினோம்'' என்ற (19:57) வசனத்தை ஓதினேன்.
(முஸ்லிம் 234, அஹ்மத் 12047)
பிறகு நாங்கள் ஐந்தாவது வானத்திற்குச் சென்றோம். "யார் அது?'' என்று வினவப்பட்டது. அவர், "ஜிப்ரீல்'' என்று பதிலளித்தார். "உங்களுடன் இருப்பவர் யார்?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "முஹம்மத்'' என்று பதிலளித்தார். ''அவரிடம் ஆள் அனுப்பப்பட்டதா?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "ஆம்'' என்று பதிலளித்தார். "அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை'' என்று சொல்லப்பட்டது. பிறகு நாங்கள் ஹாரூன் (அலை) அவர்களிடத்தில் சென்றோம். நான் அவர்களுக்கு ஸலாம் சொன்னேன். அவர்கள், "சகோதரரும் நபியுமாகிய உங்கள் வரவு நல்வரவாகட்டும்'' என்று சொன்னார்கள். பிறகு நாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம். "யார் அது?'' என்று வினவப்பட்டது. அவர், "ஜிப்ரீல்'' என்று பதிலளித்தார். "உங்களுடன் இருப்பவர் யார்?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "முஹம்மத்'' என்று பதிலளித்தார். ''அவரிடம் ஆள் அனுப்பப்பட்டதா?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "ஆம்'' என்று பதிலளித்தார். "அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை'' என்று சொல்லப்பட்டது.
நான் மூஸா (அலை) அவர்களிடம் சென்று ஸலாம் உரைத்தேன். அவர்கள், "சகோதரரும் நபியுமாகிய உங்கள் வரவு நல்வரவாகட்டும்'' என்று வாழ்த்தினார்கள். நான் அவர்களைக் கடந்து சென்ற போது அவர்கள் அழுதார்கள். "நீங்கள் ஏன் அழுகின்றீர்கள்?'' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர், "இறைவா! என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்திருந்து சொர்க்கம் புகுவார்கள்'' என்று பதிலளித்தார்.
பிறகு நாங்கள் ஏழாவது வானத்திற்குச் சென்றோம். "யார் அது?'' என்று வினவப்பட்டது. அவர், "ஜிப்ரீல்'' என்று பதிலளித்தார். "உங்களுடன் இருப்பவர் யார்?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "முஹம்மத்'' என்று பதிலளித்தார். ''அவரிடம் ஆள் அனுப்பப்பட்டதா?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "ஆம்'' என்று பதிலளித்தார். "அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை'' என்று சொல்லப்பட்டது.
நான் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று ஸலாம் உரைத்தேன். அவர்கள், "மகனும், நபியுமாகிய உங்கள் வரவு நல்வரவாகட்டும்'' என்று சொன்னார்கள். பிறகு பைத்துல் மஃமூர் எனும் வளமான இறையில்லம் எனக்குக் காட்டப்பட்டது.
(புகாரி 3207)
இப்ராஹீம் (அலை) அவர்கள் பைத்துல் மஃமூரில் சாய்ந்து கொண்டிருந்தார்கள்.
(முஸ்லிம் 234, அஹ்மத் 12047)
பைத்துல் மஃமூர்
நான் அதைக் குறித்து ஜிப்ரீடம் கேட்டேன். அவர், "இது தான் அல் பைத்துல் மஃமூர் ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகின்றார்கள். அவர்கள் இதிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வர மாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாகி விடும்'' என்று கூறினார்.
ஸித்ரத்துல் முன்தஹா
பிறகு "ஸித்ரத்துல் முன்தஹா' (என்ற இலந்தை மரம்) எனக்குக் காட்டப்பட்டது. அதன் பழங்கள் ஹஜ்ர் என்ற இடத்தின் கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகள் போல் இருந்தன.
(புகாரி 3207)
அல்லாஹ்வின் கட்டளைப்படி அதை மூட வேண்டியது மூடியதும் அது சிவப்பு மாணிக்கங்களாக அல்லது பச்சை மரகதங்களாக அல்லது அவற்றைப் போன்றதாக அது மாறி விட்டது.
(அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி),
நூல்: அஹ்மத் 11853)
அதன் வேர் பகுதியில் நான்கு ஆறுகள் இருந்தன. (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய) இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் (யூப்ரடீஸ், நைல் ஆகிய) இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. நான் ஜிப்ரீடம் அவற்றைக் குறித்துக் கேட்டேன். அவர், "உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ளவையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும், யூப்ரடீஸ் நதியும் ஆகும்'' என்று பதிலளித்தார்.
(புகாரி 3207)
மூன்று பாத்திரங்களில் மூன்று பானங்கள்
அப்போது என்னிடம் மூன்று கிண்ணங்கள் கொண்டு வரப்பட்டன. பால் கிண்ணம், தேன் கிண்ணம், மதுக் கிண்ணம் ஆகியன தாம் அவை. நான் பால் இருந்த கிண்ணத்தை எடுத்து அருந்தினேன். அப்போது என்னிடம், "நீங்களும் உங்களுடைய சமுதாயத்தாரும் இயற்கை மரபை அடைந்துள்ளீர்கள்'' என்று சொல்லப்பட்டது.
(அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி),
நூல்: புகாரி 5610)



0 Comments