Subscribe Us

header ads

இலங்கையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்திருந்தால் அசாத்சாலி ஞானசாரதேரராக மாறியிருப்பாரோ..???


மக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார்.
இலங்கையில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக இருப்பதினால் அவர்கள் விடயத்தில் கடும் போக்கு அமைப்பான பொதுபலசேனாவின் ஞானசார தேரர் முஸ்லிம்களை தினம் தினம் ஆத்திரமூட்டும் செயற்பாடுகளையும், கருத்துக்களையும்தான் தொண்மையான காலம் தொட்டு அண்மையான காலம் வரை வெளிபடுத்தி வருகின்றார். இந்த ஞானசாரதேரது கருத்துக்கள், நடவடிக்கைள் மூலம் ஆத்திரமடையாத ஒரு முஸ்லிம் கூட இலங்கையில் இருந்திருக்க மாட்டான் அந்த அளவுக்கு இவரது கருத்துக்கள் முஸ்லிம் சமூதாயத்தை கோபமூட்டும் படி இருக்கும்.
இனவாதி, கடும்போக்குவாதி ஞானசாரதேரரின் கருத்துக்களை எம்மால் எவ்வாறு சகித்துக் கொள்ள முடியவில்லையோ அதே போன்றுதான் தேசிய நிறைவேற்றுச் சபை உறுப்பினரும், ஐக்கிய முண்ணனியின் தலைவருமான அசாத்சாலி அவர்களின் சிங்கள மக்களை ஆத்திரமூட்டக் கூடிய வகையிலான கருத்துக்களை எவ்வாறு சிங்கள மக்கள்  சகித்துக் கொள்வார்கள்..???
அசாத்சாலி அவர்கள் நான் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கின்றேன், முஸ்லிம் சமூகத்துக்காக பாடுபடுகின்றேன் என்று மிக இழிவான விதங்களில் கருத்துக்களையும், ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களையும், அநாகரீக வார்த்தைப் பிரயோககங்களையும் பாவித்து ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். இதனை நினைக்கும் போது ஒரு வேளை முஸ்லிம் சமூகம் இலங்கையில் பெரும்பான்மையாக இருந்திருந்தால் அசாத்சாலி அவர்கள்தான் முஸ்லிம் ஞானசாரதேரராக இருந்திருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
கடும்போக்குவாதியான ஞானசாரதேரர்தான் மமதையில் முஸ்லிம்களை ஆத்திரமூட்டும் விதத்தில் அன்றிலிருந்து இன்றுவரை கருத்துக்களை கொப்பளித்துக் கொண்டிருக்கின்றார் என்றால் ஒழுக்கத்தை கற்றுத் தந்த, நாகரீகத்தை கற்றுத் தந்த இஸ்லாமிய மார்க்கத்தில் முஸ்லிமாக இருக்கும் அசாத்சாலி அவர்களும் அதே போன்று சிங்கள மக்களை ஆத்திரமூட்டும் விதத்தில் அறுவருக்கத்தக்க விதத்தில், அநாகரீகமற்ற விதத்தில் கருத்துக்களை வெளியிடுவதால் அசாத்சாலிக்கும் ஞானசாரதேரருக்கும் என்ன வித்தியாசம் இருக்கப் போகின்றது..???
அசாத்சாலி அவர்கள் உண்மையில் முஸ்லிம் சமூகத்துக்காக உரத்த குரலில் எதற்கும், யாருக்கும் அச்சப்படாமல் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார் இதனை நான் வரவேற்கின்றேன் ஆனால் அதில் நாகரீகமில்லை, சுத்தமான பேச்சுக்கள் இல்லை, இலங்கை நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் ஆரோக்கியமான வாழ்வுக்கு உகந்த கருத்துக்கள் இல்லை மாறாக அவரது கருத்துக்கள் சிங்கள மக்கள், பௌத்த அமைப்புக்கள், சிங்கள இயக்கங்கள் போன்றவற்றை ஆத்திரமூட்டும்படியாகத்தான் இருக்கின்றது. இது இலங்கை முஸ்லிம்களை பலி ஆடுகளாக மாற்றும் செயற்பாடுகளாகவே இருக்கின்றது என்பதை கெரளவ அசாத்சாலி அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற சக்தி தொலைக்காட்சியில் அசாத்சாலி அவர்கள் பங்குபற்றிய மின்னல் நிகழ்ச்சிகளை கூட்டிக் கழித்துப் பாருங்கள் அங்கே அசாத்சாலி அவர்களின் அநாகரீகப் பேச்சுக்களையும், இழிவான வார்த்தைப் பிரயோகங்களையும் பொறுக்கி எடுக்கலாம், இதற்கு சிறந்த எடுத்துக் காட்டு புத்தளம் நகர பிதா பாயிஸ் அவர்களோடு கலந்து கொண்ட மின்னல் நிகழ்ச்சி, இந்த நிகழ்ச்சியைப் பார்த்தவர்களுக்கு அசாத்சாலி அவர்கள் பேசி விதம் எவ்வாறு இருந்தது என்பது புரியும்.
அண்மையில் எமது கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கும், முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்குமிடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பு ஒன்று இடம்பெற்றதை யாவரும் அறிவீர்கள், அந்த சந்திப்புக்குப் பின்னர் ஊடக மகாநாட்டில் அசாத்சாலி அவர்கள் கூறியிருந்தார் அதாவது முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை சந்திக்க அனுமதிக்கு முன் மகிந்த ராஜபக்ஷவின் உள்ளாடையை கூட பரிசோதனை செய்து விட்டுத்தான் அனுமதித்திருக்க வேண்டும் என்று மிக இழிவான விதத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னால் ஜனாதிபதியை சிங்கள மக்கள் இன்னும் தன் நெஞ்சில் அமர்த்தி வைத்திருக்கின்றார்கள் என்பது நமக்கு நன்றாக புலப்பட்டது அது மட்டுமல்ல யுத்தத்தை வெற்றி கொண்ட நாயகன் என்ற மதிப்பும் மரியாதையும் மகிந்த ராஜபக்ஷ மீது சிங்கள மக்கள் இன்னும் வைத்துக் கொண்டிருக்கின்றார். இந்த சந்தர்ப்பத்தில் அசாத்சாலி அவர்களின் இவ்வாறான கருத்துக்கள் மகிந்த ஆதரவு சிங்கள மக்களையும், அமைப்புக்களையும் ஆத்திரமூட்டச் செய்யும் அல்லவா...???
அசாத்சாலி மாத்திரம்தான் இவ்வாறு பேசுகிறாரா...???? என்றால் இல்லை. இன்னுமொரு முஸ்லிம் ஞானசாரதேரர் இருக்கின்றார் அவர்தான் மேல்மாகாண சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் அவர்கள். இந்த விடயத்தில் அசாத்சாலி வாப்பாவாக இருந்தால் முஜிபுர் ரஹ்மான் வாப்பாட தம்பியாக இருக்கின்றார்.
முஜிபுர் ரஹ்மான்
மேல்மாகாண சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் அவர்களும் தனது செயற்பாடுகளையும் கருத்துக்களையும் அசாத்சாலி அவர்களின் பாணியிலேயே அமைத்து தனக்கான அரசியலை செய்து கொண்டு வருகின்றார். அண்மையில் இவரது தலைமையில் நடைபெற்ற மே தின ஊர்வலத்தில் முன்னால் ஜனாதிபதியை மாடுபோன்று சித்தரித்து மாட்டின் தலையில் மகிந்த ராஜபக்ஷ அவர்களது புகைப்படத்தை மாட்டி அந்த ஊர்வலத்தை நடாத்திச் சென்றார். இது மகிந்த ஆதரவு சிங்கள மக்கள் மத்தியில் அதிர்ப்தியை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியிருந்தது.
முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கின்றோம், முஸ்லிம் சமூகத்துக்காக பாடுபடுகின்றோம் என்று முஸ்லிம்களை பலி ஆடுகளாக ஆக்கி இவர்கள் தங்களுக்கான அரசியலைத்தான் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை. முஜிபுர் ரஹ்மான் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து அரசியல் செய்கின்றார் அதற்கான காய்நகர்த்தல்களை முஸ்லிம் ஆதரவு கோசங்களாக எழுப்பிக் கொண்டிருக்கின்றார் இதுதான் உண்மை.
கௌரவ அசாத்சாலி அவர்களே..!!! கௌரவ முஜிபுர் ரஹ்மான் அவர்களே...!!! நீங்கள் எல்லாம் உண்மையாக முஸ்லிம் சமூகத்துக்காக குரல் கொடுப்பவர்களாக இருந்தால் அந்தக் குரலை மேலும் மேலும் முஸ்லிம்களை நோக்கிய கல் எறியப்படாதவாறு கொடுங்கள். சிங்கள மக்களையும், அமைப்புக்களையும் ஆத்திரமூட்டாதவாறு கொடுங்கள், மீடியாக்கள் மூலமாக இருந்தாலும் சரி, தனிப்பட்ட ரீதியாக இருந்தாலும் சரி கருத்துக்களை சொல்லும் போது நாகரீகமான முறையில் எடுத்துக் கூறுங்கள். அதுதான் உங்களுக்கும் ஆரோக்கியம் முஸ்லிம் சமூகத்துக்கும் ஆரோக்கியம்.

Post a Comment

0 Comments