17-வது முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரருக்கு, மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து செல்பி எடுக்க முயன்ற வாலிபர் ஒருவர் கடுப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பரபரப்பாக நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று ரோஜர் பெடரர் - பல்லா இருவரும் மோதினர். இந்த போட்டி முடிந்ததும், இளம் ரசிகர் ஒருவர் பாதுகாப்பையெல்லாம் மீறி, பெடரர் அருகில் சென்றார். திடீரென அந்த ரசிகர் பெடரருடன் செல்பி எடுக்க முயன்றார். இது, போட்டி முடிந்த களைப்பில் இருந்த பெடரருக்கு கடுப்பை ஏற்படுத்தியது.
இதனால் பெடரர் கடும் அதிருப்தி அடைந்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நடந்த சம்பவம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. நேற்று (நேற்று முன்தினம்) பயிற்சியின்போதும் இப்படித்தான் நடந்தது. முதலில் ஒரு சிறுவன் வந்தான். பின் நான்கைந்து பேர் வந்து விட்டனர். இன்று (நேற்று), ரசிகர்கள் யாரும் எளிதில் நுழைய முடியாத பிரதான மைதானத்துக்குள் ஒருவர் அத்துமீறி வந்து விட்டார். அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை எனினும், நடந்தது எனக்கு திருப்தி அளிக்கவில்லை" என்றார்.
இந்த சம்பவத்தால் கடும் விமர்சனத்துக்கு உள்ளான போட்டி ஏற்பாட்டாளர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை தற்போது மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.





0 Comments