8 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் எனும் ஐ.பி.எல். T20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் மஹேந்திர சிங் டோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் , ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடவுள்ளன. இப்போட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
கடந்த மாதம் 7ஆம் திகதி ஆரம்பமான இத்தொடரில் 8 அணிகள் பங்குகொண்டன. இதன் முதல் சுற்றுப் போட்டிகள் 'ரவுண்ட் ரொபின் 2' எனும் முறையில் போட்டிகள் நடைபெற்றன. குறித்த ஒரு அணி ஏனைய 7 அணிகளுடனும் தலா 2 தடவைகள் விளையாடி புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள் 'பிளே ஓப்' எனும் சுற்றில் விளையாடின.
இதன்படி 'குவாலிபயர் 1' எனும் முதலாவதாக தகுதி பெறும் அணிக்கான போட்டியில் சென்னை அணியை மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முதலாவது அணியாக முன்னேறியது.
இதன்பின்னர் நடைபெற்ற 'எலிமினேட்டர்' எனும் வெளியேறும் அணிக்கான போட் டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீழ்த்தி 'குவாலிபயர் 2' எனும் இரண்டா வதாக தகுதி பெறும் அணிக்கான போட் டியில் சென்னை அணியை சந்தித்தது. இதில் சென்னை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் மும்பை அணியுடன் விளை யாட தகுதிப் பெற்றது.
ஐ.பி.எல். அரங்கில் மிகவும் பலம் வாய்ந்த அணியாகவே சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும் உள்ளன. எனினும், மும்பை இந்தியன்ஸ் அணியை விட சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் ஆதிக்கம் கூடுதலாகவே இருக்கிறது. இவ்விரு அணிகளும் ஒட்டு மொத்த ஐ.பி.எல். அரங்கில் 21 தடவைகள் ஒன்றையொன்று சந்தித்துள்ளன. இதில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 11 தடவை களும் மும்பை இந்தியன்ஸ் அணி 10 தடவைகளும் வெற்றி பெற்றுள்ளன.
இதற்கு முன்னர் இவ்விரு அணிகளும் 2010 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டிகளில் விளையாடியிருந்தன. இதில் இரு அணிகளும் தலா ஒரு முறை கிண் ணத்தை வென்றுள்ளன.
இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல். தொடர்களில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரு அணிகளும் தலா இரண்டு தடவைகள் கிண்ணத்தை வென்று அதிக தடவைகள் கிண்ணத்தை வென்ற அணிகளாக திகழ்கின்றன. ராஜஸ்தான் ரோயல்ஸ்,டெக்கன் சார்ஜர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய மூன்று அணிகளும் தலா ஒரு தடவை கிண்ணத்தை வென்றுள்ளன.
மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ் அணியில் தற்போது விளையாடி வரும் வீரர்களில் அதிக ஓட்டங்களை குவித்த வீரரும் அவ்வணித்தலைவருமான ரோஹித் சர்மா 2165 ஓட்டங்களை பெற்று முதலிடத்தி லுள்ளார். எனினும், மும்பை அணி சார்பில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரராக மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் 2334 ஓட்டங்களை குவித்துள்ளார்.
பந்துவீச்சில் லசித் மலிங்க 141 விக்கெட்டுகளை கைப்பற்றி மும்பை இந்தியன்ஸ் அணி சார்பிலும், ஐ.பி.எல். அரங்கிலும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராகவும் திகழ்கிறார். இது இவ்வணிக்கு அதிக நம்பிக்கையளிக்கக்கூடிய விடயமாகக் கருதப்படுகிறது.
சென்னை சுப்பர் கிங்ஸ்
சென்னை அணியில் தற்போது விளையாடி வரும் வீரர்களில் அதிக ஓட்டங்களை குவித்த வீரராக சுரேஷ் ரெய்னா 3671 ஓட்டங்களை பெற்று முதலிடத்திலுள்ளார். இவரே ஐ.பி.எல். அரங்கில் அதிக ஓட்டங்களை குவித்த வீரராகவும் காணப்படுகிறார்.
பந்துவீச்சில் சுழல் பந்துவீச்சாளரான அஷ்வின் 90 விக்கெட்டுகளை கைப்பற்றி அவ்வணி சார்பில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராக காணப்படுகிறார்.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் நியூஸிலாந்து அணி வீரரான பிரெண்டன் மெக்கலத்தின் வெற்றிடம் அவ்வணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், அவருக்கு பதிலாக அணியில் இணைக்கப்பட்ட மைக் ஹஸி, ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக துடுப்பெடுத்தாடியமை அவரின் வெற்றிடத்தை நிரப்புவதாக உள்ளது.
டுவைய்ன் ஸ்மித், மைக் ஹஸி, டுவைன் பிராவோ, பாவ் டுப்ளஸிஸ் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் சென்னை அணி சார்பாக இன்றைய இறுதிப் போட்டியில் விளையாடுவார்கள் என எதிர்ப்பார்க் கப்படுகிறது. இவ்வணியின் நட்சத்திர வீரராக சுரேஷ் ரெய்னா காணப்படுகிறார். இவர் இத்தொடரில் இதுவரை 346 ஒட்டங்களை குவித்துள்ளார். இவர் மேலும் 54 ஓட்டங்களை குவிக்கும் பட்சத்தில் ஐ.பி.எல். அரங்கில் தொடர்ச்சியாக 8 தடவைகள் 400 ஓட்டங்கள் என்ற மைல் கல்லை கடந்த வீரராகப் பதிவாவார்.
இத்தொடரில் இதுவரை அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராக டுவைன் பிராவே காணப்படுகிறார். இவர் இத்தொடரில் 24 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவரைத் தவிர ஆஷிஸ் நெஹ்ரா 22 விக்கெட்டுகளை வீழ்த்தி 3 ஆவது இடத்தில் உள்ளார். இவற்றைத் தவிர களத்தடுப்பிலும் இவ்வணியின் செயற்பாடு மிகவும் ஆரோக்கியமான நிலையிலேயே உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் துருப்புச் சீட்டாக லசித் மலிங்க காணப்படுகிறார். இவர் இத்தொடரில் 22 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் 4 ஆவது இடத்தில் உள்ளார். இவரைத் தவிர கிரன் பொல்லார்ட், லெண்டில் சிம்மன்ஸ் , நெதன் மெக்லீனகன் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்திறனில் உள்ளனர்.
மேலும், ரோஹித் சர்மா, பார்த்தீவ் பட்டேல், அம்பத்தி ராயுடு, பாண்டியா ஆகியோரும் துடுப்பாட்டத்தில் சிறப்பான பங்களிப்பினை அளித்துள்ளனர். பந்துவீச்சில் அனுபவ வீரரான ஹர்பஜன் சிங் , வினய் குமார் மற்றும் இளம்வீரரான ஜெகதீஷ சுசித் ஆகியோரும் நம்பிக்கையளித்து வருகின்றனர்.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கிண்ண த்தை வெல்லும் பட்சத்தில் 3 ஆவது தடவையாக ஐ.பி.எல். கிண்ணத்தை வென்ற அணியாக முடிசூடிக்கொள்ளும். மாறாக, மும்பை
இந்தியன்ஸ் அணி கிண்ணத்தை வெல்லும் பட்சத்தில், இரண்டு தடவைகள் கிண் ணத்தை வென்ற அணியாக சென்னை, கொல்கத்தா ஆகிய அணிகள் வரிசையில் இணைந் துகொள்ளும்.
இரு அணிகளும் சமபலம் பொருந்திய அணிகளாக காணப்படுவதால் போட்டி மிகவும் விறுவிறுப்புமிக்கதாக இருக்கும். கிண்ணத்தை கைப்பற்றப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


0 Comments