Subscribe Us

header ads

நீரிழிவு விழித்திரை நோய்க்கு உகந்த சிகிச்சை

Dr.  பி. விஸ்வநாதன் 

நீரிழிவு நோய் பிரச்சினை உள்ளவர்களின் கண்களின் விழித்திரையில் உள்ள ரத்தக்குழாய்களில் ஏற்படும் பாதிப்புதான் நீரிழிவு விழித்திரை நோய் (டயபடிக் ரெட்டினோபதி). இது, நீரிழிவு உள்ள யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.
நீரிழிவு பாதிப்புடைய ரத்தம் கண்ணின் விழித்திரையில் செல்லும்போது விழித்திரையில் சில மாற்றங்களை ஏற்படுத்து கிறது. இந்த மாற்றங்கள் விழித்திரையின் சிறிய ரத்தக்குழாய்களில் ‘மைக்ரோ ஆஞ்சியோபதி’ எனப்படும் மாற்றத்தை விளைவிக்கிறது. இதனால் ரத்தமும் நீர்க்கசிவும் ஏற்பட்டு விழித்திரை வீக்கம் அடைகிறது. இந்தக் கசிவுகள் ‘ரெட்டினல் இடிமா’ மற்றும் கடின கசிவு எனப்படும் ‘லைப்போ புரோட்டீன்’ வஸ்துகளையும் சேமித்து வைக்கிறது. இந்த கசிவு விழித் திரையின் முக்கிய பகுதியான மேக்குலாவை பாதிக்கும்போது பார்வை குறையும். 
இதற்கான பரிசோதனையின்போது, கண்ணின் வெளிப்புறத் தோற்றம்,  பார்வைத் திறன்,  கண் நீர் அழுத்தம்,  பார்வைக்குறைபாடு,  நிறக்குறைபாடு  போன்ற அடிப்படை பரிசோதனைகளை செய்துவிட்டு கண்ணின் மணி விரிவதற்காக சொட்டு மருந்திடப்படுகிறது. சுமார் 15 நிமிடங்கள் காத்திருந்து, கண்ணின் உள்ளறையை - கண்ணின் பின்புறத்தை ‘இன்டைரக்ட் ஒப்தால்மாஸ்கோப்’ என்னும் கருவியைக் கொண்டு விழித்திரை முழுமை யாகப் பார்க்க உதவும் வலியேதும் இல்லாத பரிசோதனையை செய்யப்படுகிறது. 
இந்நோயைத் தவிர்ப்பதற்காக, நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் ரத்த சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்த அளவு, ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு போன்றவை கட்டுக்குள் இருக்கும்படி வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள அறிவுறுத்துவார்கள். நோயாளிக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பின் அளவைப் பொறுத்து மருந்துகள் அல்லது லேசர் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சையை உங்கள் மருத்துவர் பரிந்துரை செய்யலாம். கண் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துகொள்ள வேண்டும்.
டயபடிக் ரெட்டினோபதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்போது லேசர் சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த சிகிச்சைக்குப் பிறகு சில மணி நேரங்கள் பார்வை மங்கலாகத் தெரியும். பக்கவாட்டுப்பார்வையும், இருட்டுக்குள் பழகுவதும் பாதிக்கப்படலாம். ரத்தக்கசிவு மற்றும் நீர்க்கசிவு மிக அதிகமாக உள்ள நோயாளிகளுக்கு லேசர்  சிகிச்சைக்குப் பின்னரும் பார்வையிழப்பிற் கான வாய்ப்பு இருப்பதால் அவர்களுக்கு ‘விட்ரெக்டமி’ எனப்படும் சத்திர சிகிச்சை தேவைப்படும்.
விட்ரெக்டமி மற்றும் விட்ரியஸ் மைக்ரோ சர்ஜரி மூலமாக 60 % முதல் 70% வரை டயபடிக் ரெட்டினோ பதியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பார்வையில் முன்னேற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. விட்ரெக்டமியின் நோக்கம், கண்ணின் மையப்பகுதியில் உள்ள ரத்தத்தையும் அசாதாரணமாக பாதிக்கப்பட்ட திசுக்களை நீக்குவதுமே. இதில் கண்ணின் மையப்பகுதியில் அதீத ரத்தக் கசிவினால் பாதிக்கப்பட்ட, பார்வை யிழப்பை ஏற்படுத்தும் விட்ரியஸ் நீக்கப் பட்டு வேறு உப்புக் கரைசல் நிரப்பப் படுகிறது. இதன் மூலம் பார்வை குறையும் அபாயத்தையும், விழித்திரை பிரிதல் நோயின் இறுதிக்கட்டத்தையும் தடுக்க முடியும்.
அடிப்படையில் டயபடிக் ரெட்டினோபதிக்கு என்று ஆரம்ப கட்ட நிலையில் எந்த அறிகுறியுமே கிடையாது. தாய் அல்லது தந்தை அல்லது இருவருக்குமோ நீரிழிவு நோய் இருந்தால், உங்களுக்கும் நீரிழிவு பிரச்சினை இருக்கிறதா என்று பரிசோதித்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு நீரிழிவு பிரச்சினை இருக்கிறது என்றால் ஒரு கண் மருத்துவ மனைக்குச் சென்று முழுமையான கண் பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது.

Post a Comment

0 Comments