Subscribe Us

header ads

வந்தேறிகளாக நடுக்கடலில் தத்தளிக்கும் 7 ஆயிரம் பேருக்கு தற்காலிக அடைக்கலம் அளிக்க மலேசியா, இந்தோனேசியா முடிவு ....



மியான்மாரில் ஒரு இனத்துக்கு எதிரான கலவரம் தீவிரமடைந்துள்ளதால் அங்கிருந்தும் வங்களாதேசத்தில் இருந்தும் சட்ட விரோதமாகப் படகுகளில் இடம் பெயர்ந்துவரும் நூற்றுக் கணக்கான ரோஹிங்கியா இனத்தவர்கள் உட்பட்ட பெரும்பாலான அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க எந்த நாடும் முன்வராததால் அவர்கள் நடுக்கடலில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அண்மையில் இரு பெரிய படகுகளில் புறப்பட்ட மியான்மார் நாட்டவர் மலேசியாவுக்குள் நுழைய முற்பட்ட போது அவர்களை மலேசியக் கடற்படையினரும் பின்னர் தாய்லாந்து கடற்படையினரும் விரட்டியடித்தனர். இதனால், அந்தமான் கடல் பகுதிக்கு சென்று அங்கும் விரட்டியடிக்கப்பட்ட நிலையில், உண்ண உணவும், குடிக்க நீரும் இன்றி ஆயிரக்கணக்கான அகதிகள் மலேசியா மற்றும் இந்தோனேசியா நாட்டு எல்லையருகே நடுக்கடலில் குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டுள்ளனர்.

இவர்களுக்கு உதவுமாறு சர்வதேச நாடுகளில் இருக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், இவ்விவகாரம் பற்றி ஆலோசிக்க மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்ற அவசர கூட்டம் இன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் முடிவில், வந்தேறிகளாக படகுகளில் தத்தளிக்கும் 7 ஆயிரம் பேருக்கு தற்காலிக அடைக்கலம் அளிக்க மலேசியாவும், இந்தோனேசியாவும் ஒப்புதல் அளித்துள்ளன. ஆனால், ஒருவரை கூட தங்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என தீர்மானமாக தெரிவித்துவிட்ட தாய்லாந்து நாட்டு மந்திரி, கடலில் காத்திருப்பவர்களுக்கு தேவையான மனிதநேய உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் தற்காலிக அடைக்கலம் பெறும் இவர்கள் ஓராண்டுக்குள் அங்கிருந்து வெளியேறி விட வேண்டும் என்ற நிபந்தனையையும் அந்நாட்டு அரசுகள் விதித்துள்ளன.

Post a Comment

0 Comments