மஹிந்த அணியின் நம்பிக்கையில்லா பிரேரணைகளால் அரசாங்கத்தின் மீதான மக்கள் நம்பிக்கையை தகர்த்து விட முடியாது. எனவே பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துவதே தற்போதைய தேவையாகும் எனத்தெரிவித்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்க்ஷ்மன் கிரியெல்ல, ஜூன் மாதம் நடுப்பகுதியில் பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என்றும் தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவிக்கையில்,
இன்றைய அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களையும் மக்கள் சேவைகளையும் முன்னெடுக்க முடியாது பல தடைகள் போடப்படுகின்றன.
விசேடமாக மஹிந்த அணியினர் அரசின் நடவடிக்கைகளை தடுப்பதியிலேயே கங்கணம் கட்டி செயற்படுகின்றனர்.
அமைச்சர்களான ஜோன் அமரதுங்க, ரவி கருணாநாயக்க ஆகியோர் நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை கொண்டு வந்துள்ளனர்.
இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரப்போகின்றார்களாம். இன்று இருப்பது இருப்பது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாராளுமன்றமேயாகும்.
அது காலாதிவதியாகி விட்டது. எனவே பாராளுமன்றும் தொடர்வது என்பது பிரச்சினைகளுக்கு மத்தியில் குழப்பகரமானதாகவே தொடரும்.
தற்போது புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் புதிய ஆட்சி உள்ளது. ஆனாலும் காலாவதியான பாராளுமன்றமே இயங்குகின்றது.
எனவே புதிய ஜனாதிபதியின் கீழ் புதிய ஆட்சி ஏற்படுத்தப்பட வேண்டும்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும். பெரும்பாலும் ஜூன் மாதம் நடுப்பகுதியில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்படலாம்.
அரசுக்கு எதிரான எத்தனை நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டாலும் பொதுமக்கள் அரசுடனே இருக்கின்றனர். எனவே அடுத்த பொதுத்தேர்தலில் ஐ.தே. கட்சி வெற்றி பெறும். அதன் மூலம் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு தற்போதைய நல்லாட்சி தொடரப்படும் என்றும் அமைச்சர் லக்க்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.


0 Comments