ஜெர்மன் நாட்டின் கெலோன் நகரில் கடந்த வெள்ளியன்று இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட குண்டு கண்டுபிடிக்கப்பட்டதால், அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கட்டிடம் கட்டுவதற்காக மண்ணை தோண்டியபோது பூமிக்கடியில், ஐந்து மீட்டர் ஆழத்தில் இந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அங்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள், அந்த குண்டை ஆராய்ந்தனர். அதில் இந்த குண்டு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது என்றும், இக்குண்டு வெடித்தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கக்கூடும் என தெரியவந்தது.
இதையடுத்து இன்று இந்த குண்டை செயலிழக்க வைக்க வெடிகுண்டு நிபுணர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனால் கொலோன் நகரில் வசிக்கும் 20 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அங்குள்ள வனவிலங்கு பூங்கா மூடப்பட்டுள்ளதுடன், அந்நகருக்கு அருகில் உள்ள ரைன் பகுதியில் படகு போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. 2ஆம் உலகப்போர் முடிந்து 70 ஆண்டு காலம் ஆன பின்பும் வெடிக்காத குண்டு கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.


0 Comments