அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரை சேர்ந்த ஒரு பெண் யுனைட்டட் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் புவெர்ட்டோ ரிக்கோ நகரில் இருந்து நியூஆர்க் நகருக்கு பயணம் செய்தார். விமானக் கட்டணத்துடன் 'லைவ் டைரக்ட் டி.வி.'-க்கான கட்டணமாக சுமார் 9 டாலர்களையும் அவர் செலுத்தி இருந்தார்.
ஆனால், விமானத்தில் ஏறி அமர்ந்த பின்னர் சுமார் 10 நிமிடங்கள் வரை மட்டுமே டி.வி.யில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின. அதன் பின்னர், வெறும் திரையை முறைத்துப் பார்த்தபடி ஊர் வந்து சேர்ந்த அவர், இந்த சேவை குறைபாட்டுக்காக யுனைட்டட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திடமிருந்து 50 லட்சம் டாலர் இழப்பீடு கேட்டு நியூஆர்க் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என தள்ளுபடி ஆகிவிடும் என தெரிவித்துள்ள அந்த விமான நிறுவன அதிகாரிகள் அதற்கு ஏற்ப ஒரு காரணத்தையும் கூறுகின்றனர்.
எங்கள் விமானத்தில் 'லைவ் டைரக்ட் டி.வி.'-க்கான கட்டணத்தை செலுத்தும் நபர்கள், சில நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன. அமெரிக்க கடற்பகுதியை கடந்து பறக்கும் வேளைகளில் 'லைவ் டைரக்ட் டி.வி.' நிகழ்ச்சிகள் மற்றும் ‘வை-பை’ சேவை கிடைக்காது என்பதை நாங்கள் அறிவித்துள்ள படிவத்தில் கையொப்பமிட்ட பின்னரே பயணிகளிடம் இருந்து நாங்கள் கட்டணத்தை பெறுகிறோம். இதன் அடிப்படையில் இந்த வழக்கு தள்ளுபடியாகிவிடும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால், இந்த வழக்கில் நிச்சயமாக வெற்றி பெற்று, இழப்பீட்டுத் தொகையை பெறுவேன் என நம்பிக்கையுடன் கூறும் அந்தப் பெண் பயணி, கிடைக்கும் இழப்பீட்டுத் தொகையை அன்றைய தினம் தன்னுடன் விமானத்தில் பயணித்த அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.




0 Comments