இது பெருமளவில் ஆண்களுக்கு மட்டுமே வரக்கூடிய நோய். கருவிலுள்ள ஆண் குழந்தைகளின் விரைகள் வயிற்றின் பின்பக்க சுவற்றில் இருக்கும்.
பிரசவமாவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாகத்தான் விரைகள் இங்குவினால் கெனல் எனும் பாதை வழியாக கீழிறங்கி விதைப்பைக்குள் சென்றடையும்.
அதன்பின்னர் இந்த பாதை இயற்கையாக மூடிக்கொண்டுவிடும். சிலருக்கு இந்த பாதை மூடாமல் இருக்கும். மூடாமல் இருக்கும் இந்தப் பாதை வழியாக குடல் இறங்கி கீழே வருவதுதான் குடல் இறக்கம் எனப் படுகிறது. இதை இங்குவினல் ஹேர்னியா அதாவது மறைமுக குடல் இறக்கம் என்று அழைக்கிறோம். ஆனால் குடல் இறங்கி வரும் பாதைக்கு முன்புறமுள்ள வயிற்றின் மேலுள்ள தசைகள் வயதாவதால் பலவீனப் பட்டு வருவது நேரிடையான ஹேர்னியா என்கிறோம். பலமாக இருமும்போதோஇ அதிகமான எடையைத் தூக்கும்போதோ குடல் இறக்கம் வரும் வாய்ப்பு இருக்கிறது.
சிறு குழந்தைகளுக்கு வந்திருக்கும் குடல் இறக்கத்தை சத்திர சிகிச்சை மூலம் சரிசெய்துவிட்டால் மீண்டும் வராது. ஆனால் வயதானவர்களுக்கு ஒருமுறை குடல் இறக்க நோய்க்கு சத்திர சிகிச்சை மேற்கொண்டாலும் மீண்டும் பக்கத் தசைகள் பாதிக்கப்பட்டு. தையல் விட்டுப்போய் மீண்டும் குடல் இறக்கம் வரலாம்.
இதைத் தடுப்பதற்கு, ஒரு வகை வலை வைத்துத் தைக்கலாம். இதனால் மீண்டும் குடல் இறக்கம் வராது. அதாவது வெறும் தசைகளை மட்டும் தைக்காமல் வலைபோட்டுத் தைப்பதால், அந்த வலையின் இடை வெளியில் வளரும் தசைநார்கள் அந்தப் பகுதிக்கு தேவையான இறுக்கத்தை ஏற்படுத்தி, சுவராக நிற்கும். இதனால் குடல் இறக்கம் மீண்டும் ஒருமுறை வருவதற்கு வாய்ப்பில்லை.
இந்த வலை, 50 ஆண்டுகளுக்கு மேல் ஒத்துழைக்கும். பக்க விளைவுகளை ஏற்படுத்தாது.இப்போது லேபராஸ்கோபிக் எனப்படும் சாவித்துவார சத்திர சிகிச்சை முறையிலும் இந்த வலை பொருத்தப் படுகிறது. சிகிச்சை முடிந்த உடனே நோயாளி வீட்டுக்கு சென்றுவிடலாம்.
பொதுவாக வயிற்றுப் பகுதியில் சத்திர சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு ஆறுமாத காலத்திற்குள் ஹேர்னியா வரலாம். இதை இன்சிஷனல் ஹேர்னியா என்போம். சத்திர சிகிச்சைக்குப் பின்னர் உடலில் நோய்த் தொற்று ஏற்பட்டால், புரதச் சத்து குறைவு ஏற்பட்டால், ரத்தச்சோகையினால், அளவுக்கு அதிகமான வேலைப்பளு அல்லது உடற்பயிற்சியால் இந்த இன்சிஷனல் ஹேர்னியா வரலாம். வீக்கமும், வலியுமே இதன் முக்கிய அறிகுறிகள்.
சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு இன்சிஷனல் ஹேர்னியா வரலாம். இதற்குக் காரணம் தையல் போடப் பயன்படுத்தப்படும் பொருள், தையல் போடப்படும் விதம் போன்றவையே. எந்தவகை ஹேர்னியாவுக்கும் லேபராஸ்கோபிக் சிகிச்சை மூலம் தீர்வு உண்டு.


0 Comments